Aran Sei

புல்லிபாய் வழக்கு: அவதூறு பரப்பிய கணக்குகளின் தகவல் தர மறுத்த ட்விட்டர் – தேச பாதுகாப்பு பிரச்சினை இல்லை என விளக்கம்

கிட்ஹப் தளத்தின் செயலியான புல்லி பாய், இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களைப் பதிவேற்றி, அவர்களை ஏலத்திற்கு விடுவதாக டிசம்பர் 31 அன்று அறிவித்திருந்தது. பின்னர் கிட்ஹப் அதனை நீக்கியது. ஆனால் பல ட்விட்டர் பயனாளர்கள் அந்த தளத்தின் ஸ்கிரீன்ஷாட்களை அதிலிருந்த பெண்களை டேக் செய்து வெளியிட்டுள்ளனர்.
ஒரு பெண் பத்திரிக்கையாளரின் புகைப்படத்தை இழிவான கருத்துடன் பதிவிட்ட  வழக்கில் 2 பயனாளர்களின் விவரங்களை உடனடியாக தர ட்விட்டர் மறுத்துள்ளது. இது “தேச பாதுகாப்பு பிரச்சினை” அல்ல என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தெற்கு டெல்லியின் சிஆர் பார்க் காவல் நிலையத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட இப்புகாரின் நகலை அப்பெண் பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய ட்விட்டர் பதிவில், “என்னுடைய புகைப்படத்தை மாற்றம் செய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இது இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்யும் செயல். புல்லி பாய் என்ற இணையதளத்தில் ஏராளமான இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்கள் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. என்னை மட்டுமல்ல பல பெண்களையும் இது போன்று சித்தரித்துள்ளனர். இந்த இணையதளமே இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவுகள் 153ஏ (மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் மதநல்லிணக்கத்தை எதிரான செயல்களைச் செய்தல்), 153பி (தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான குற்றச்சாட்டுகள்), 354ஏ  (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 509 (ஒரு பெண்ணின் மாண்பை அவமதிக்கும் நோக்கிலான வார்த்தை, சைகை அல்லது செயல்) ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு.பதிவு செய்துள்ளது.
Source : The Indian Express
புல்லிபாய் வழக்கு: அவதூறு பரப்பிய கணக்குகளின் தகவல் தர மறுத்த ட்விட்டர் – தேச பாதுகாப்பு பிரச்சினை இல்லை என விளக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்