தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.என் மகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார் .
இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை கள்ளக்குறிச்சி மாணவியின் தாயும் தந்தையும் நேரில் சந்தித்தனர். அந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி, “என் மகள் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். விசாரணை வேகமாக நடைபெறுகிறது விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என்று அவரை என்னிடம் தெரிவித்துள்ளார்.
என் மகள் மரணத்திற்காக நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் சம்பந்தமே இல்லாத மாணவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். என் மகள் வழக்கில் நேற்று 5 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசாங்கம் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம் என்று செல்வி கூறியுள்ளார்.
என் மகளின் இரண்டு பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. எங்கள் தரப்பில் நாங்கள் கேட்ட மருத்துவரை பிரேதப் பரிசோதனையின் போது கொடுத்திருந்தால் உண்மை தெரிய வந்திருக்கும். இந்த வழக்கில் சிபிசிஐடி சற்று மெத்தனமாகத்தான் செயல்படுகிறது. ஆனாலும் எங்கள் மகளுக்கு நீதி கிடைக்க முதலமைச்சர் உதவுவார் என்று முழுமையாக நம்புகிறோம் என்று செல்வி தெரிவித்துள்ளார்.
ஜிப்மர் மருத்துவ அறிக்கை எங்களுக்கு இன்னும் தரப்படவில்லை. அதேபோல், பள்ளி நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை இதுவரை பெற்றோராகிய எங்களிடம் காட்டவில்லை. அதிலிருந்தே அவர்கள் மீது தவறு இருக்கிறது என்று தெரிகிறது. மகளின் தோழிகள் சிபிசிஐடியில் வாக்குமூலம் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களிடம் சொன்னால்தான் அவர்கள் மகளின் தோழிகளா இல்லையா என்பதை நாங்கள் உறுதி செய்ய முடியும்.
இப்போது பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் பிணையில் தான் வெளியாகியிருக்கிறார்கள். அவர்கள் விடுதலையாகவில்லை. அவர்கள் சிறைக்குச் செல்வதை நான் உறுதி செய்வேன். சிபிசிஐடி தரப்பில் இன்னும் கொஞ்சம் வேகமாக வேலை செய்ய வேண்டும். அவர்கள் ஏதாவது கண்டுபிடித்தால் பெற்றோர் என்ற முறையில் எங்களுக்கு முதலில் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று செல்வி தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு நீதி வேண்டும் | ஒரு தாயின் வேண்டுகோள் | Kallakurichi Sakthi School Issue New update
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.