Aran Sei

‘பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களை மம்தா பானர்ஜி மார்ச் மாதம் சந்திக்கவுள்ளார்’- திரிணாமூல் காங்கிரஸ்

பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுவின் இரண்டாவது கூட்டம், கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ளது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்தும், தேசிய அரசியலில் கட்சியின் தற்போதைய நிலைபாடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையை பாஜக சிதைக்கிறது என்கிறார்களே ஸ்டாலினும் மம்தாவும்? – பிரதமர் மோடியோடு நேர்காணல்

மேலும், “மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுவும் இணைந்து, பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களை மார்ச் மாதம் சந்திக்கவுள்ளது. அப்போது, இந்திய கூட்டாட்சி கட்டமைப்பின் மேல் தொடுக்கப்படும் தாக்குதல்கள் குறித்தும், பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்களால் அரசியலைப்பின் உரிமைகள் மீறப்படுவது குறித்தும் விவாதிக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 இல் பாஜகவை தோற்கடிக்க மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மம்தா பானர்ஜி அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார்.

பிப்பிரவரி 2 அன்று, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ஒருமனதாக மம்தா பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த அக்கட்சியின் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “வரும் 2024ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலில் பாஜகவை நாம் தோற்கடிக்க வேண்டும். இதற்கு அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம்” என்று தெரிவித்திருந்தார்.

‘2024 தேர்தலில் பாஜகவை ஒன்று சேர்ந்து தோற்கடிப்போம்’- மாநிலக் கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

பிப்பிரவரி 2 அன்று, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: New Indian Express

‘பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களை மம்தா பானர்ஜி மார்ச் மாதம் சந்திக்கவுள்ளார்’- திரிணாமூல் காங்கிரஸ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்