Aran Sei

15 வருடமாக உழைத்தவர்கள் திடீர் பணி நீக்கம்; போராட்டத்தில் இறங்கிய நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய ஊழியர்கள் – நச்சினார்க்கினியன்.ம

தனது 25 வயதில் வேலைக்குச் சேர்ந்த ஒருவர், 18 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார்.  தற்போது அவருக்கு 43 வயது. அவரை திடீரென்று அழைத்து ‘நாளையிலிருந்து நீங்க வேலைக்கு வர வேண்டாம்’ என்று சொன்னால் எப்படி இருக்கும் அவருக்கு? என்ன செய்யப்போகிறோம், எங்கு போவது, இந்த வயதில் யார் நமக்கு வேலை தருவார்கள் போன்ற பல கேள்விகளும் பயமும் நெறுக்கிப் போடும் ஒரு மனிதர் உங்கள் கண்களுக்குத் தெரிகிறாரா?

அப்படிப்பட்ட மனிதர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, 250 -க்கும் மேற்பட்டோர் தற்போது ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்’ வாயிலில் காத்துக்கிடக்கின்றனர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக  தற்காலிக பணியார்களாக பணியாற்றி வந்த ஊழியர்கள் இனி பணிக்கு வர வேண்டாம் என்று வெளியான சுற்றறிக்கை, 250 க்கும் மேற்பட்ட ஊழியர்களை திடுக்கிடச் செய்துள்ளது. இதனையடுத்து 6.1.2021 தொடங்கி சென்னை மெரினாவில் அமைந்துள்ள நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் அவர்கள் உள்ளிருப்பு மற்றும் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

“எங்கள் துறையில் அரசு வேலைக்கு என்று ஆள் எடுப்பதை வெகுவாக குறைத்துவிட்டார்கள், கடுமையான ஆள் பற்றாக்குறையை, எங்களை வைத்து தான் சமாளித்து வந்தார்கள். இப்போதும் துறையின் பல வேலைகள் எங்களை நம்பியே உள்ளது. மழையில், புயலில், கொரோனா காலகட்டத்தில் என, எல்லா காலத்திலும் நாங்கள் வேலை பார்த்துள்ளோம்.இத்தனை நாட்கள் இத்துறைக்கு அர்ப்பணிப்போடு செய்த வேலைகளை அர்த்தமற்றதாக்குகிறது” என்று அரண்செய்-யிடம் தெரிவித்தார் பெயர் தெரிவிக்க விரும்பாத பாதிக்கப்பட்ட அலுவலகப் பணியாளர் ஒருவர்.

என்ன நடந்தது?

சென்னை நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் (முன்னர் குடிசைமாற்று வாரியம்) 2004 சுனாமி காலகட்டத்திலிருந்தே ஆட்கள் பட்றாக்குறை காரணமாக, தமது வாரியம் மூலமாகவே நேரடியாக தற்காலிகப் பணிக்கு ஆட்களை எடுத்துவந்தது. அதற்கென்று  வெளியிடப்பட்ட அரசாணைப்படி, தற்காலிகப் பணியாளர்களாக எடுத்துக்கொள்ளப்பட்ட இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சில பணியிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் மாதந்தோறும் வாரியத்திலிருந்தே வழங்கப்பட்து வந்தது. இது 2018 ஆம் ஆண்டு, எல்காட் நிறுவனம் வாரியத்திற்குள் நுழைந்ததும் மாற்றம் கண்டது.

நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தற்காலிகப் பணியாளர்கள் எல்காட் நிறுவன பணியாளர்களாக அந்நிறுவனத்தின் வழியாகவே வாரியத்தில் பணிசெய்வதாகவும் அதற்கு அந்நிறுவனத்திற்கு பதவிக்கு ஏற்றாற்போல வாரியம் மூலம் கமிஷன் என்பதும் முடிவானது. இம்முடிவு ஏற்கனவே வேலை செய்து வந்த ஓப்பந்தப் பணியாளர்களால் தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வந்தாலும், தங்களின் பணிப் பாதுகாப்புக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்ற நம்பிக்கையில் தங்களின் பணிகளை அவர்கள் தொடர்ந்துள்ளனர்.

இதனிடையில், கடந்த 5.1.2022 இல் வாரியத்திலிருந்து வெளியான சுற்றறிக்கை ஒன்றில் “எல்காட் நிறுவனம் பணியாளர்களுக்கான ஒப்பந்தம் 31.12. 2021 உடன் முடிவுற்ற காரணத்தினால் எல்காட் வாயிலாக பணிபுரியும் பணியாளர்களை மறுஅறிவிப்பு வரும் வரை பணியமர்த்திட வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே எல்காட் வேண்டாம், பழையபடி வாரியம் வாயிலாகவே எங்களுக்கு வேலையைக் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்துவந்தவர்களுக்கு, இந்த சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியாக அமைந்ததுள்ளது.

போராட்டத்தில் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய ஊழியர்கள்

பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட தொழிலார்கள் 5.1.2022 அன்று தங்கள் போராட்டத்தை தொடங்கினர்.

“அரசு வேலைக்கு போவதற்கான வயது வரம்பு கடந்துடுச்சி, இப்போ நாங்க எங்க போறது? எங்கள் வாரியத்தின் நிர்வாக இயக்குனரிடம் சென்று முறையிட்டால், உங்களுக்கு செப்டம்பர் மாதமே காண்ட்ராக்ட் முடிந்தது, நாங்க தான் நீட்டிச்சோம் என்றார். ஆனால் எங்களுக்கோ, முடிந்ததும் தெரியாது, இவர்கள் நீடிச்சதும் தெரியாது” என்கிறார் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணிபுரியும் பிரவீன்.

உடன், திமுக-வின் தொழிற்சங்கம் தங்களுக்கு பக்கபலமாக உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்த பிரவீன், “26/11/2021 நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்காட் வேண்டாம், அது தொழிலாளர்களுக்கும் பயன் இல்லை, வாரியத்துக்கும் பயனில்லை. நேரடியாகவே வாரியத்திலிருந்து ஊதியம் தர பரிசீலிப்போம் என்று பேசினார். ஆனால் அவர் சொன்னது கூட இப்போது எடுபட வில்லை” என்றார் பிரவீன்.

போராட்டம் நடத்த துவங்கியதும், மறுநாள் 6.1.2022 வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிய 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில், 100 பேர் மட்டும் வரலாம் என்று புதிய சுற்றறிக்கை ஒன்றை வாரியம் வெளியிட்டது. அதுவும் தினக்கூலி அடிப்படையில். மாதம் 21 நாட்களுக்கு மட்டும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு 612 ரூபாய் (நாளொன்றுக்கு) , தொழில்நுட்ப பிரிவை சாராத தொழிலாளர்களுக்கு 470 (நாளொன்றுக்கு) வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எந்த அடிப்படையில் அந்த 100 பேரை மட்டும் தேர்வு செய்தீர்கள்?  இவ்வளவு காலம் மாத சம்பளம் வாங்கியவர்கள் திடீரென்று தினக்கூலி வாங்குங்கள், அதுவும் ஒரு மாதத்திற்கு வெறும் 21 நாளைக்குத் தான் என்றால், அது எப்படி நியாயமாகும்” என்று கேட்கிறார் அலுவலகப் பணியாளராக பணிபுரிந்துவந்த மைதீன். 13 வருடமாக இந்த வேலையில் இருக்கும் தனக்கு, வெளியிலும் போகமுடியாது, போனாலும் இவ்வளவு வருட அனுபவத்தை கணக்கிலும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார் அவர்.

தங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, தமிழக முதல்வரை சந்தித்து  தங்களுக்கு பணி வழங்க வேண்டும் கோரிக்கை வைக்க போவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் அரண்செய்-யிடம் தெரிவித்தனர். மேலும் கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு போடப்பட்டால் பணி இல்லாமல் தங்கள் குடும்பங்கள் என்ன ஆகும் என்ற பயத்தையும் நம்மிடம் வெளிப்படுத்தினர்.

  • நச்சினார்க்கினியன்.ம, செய்தியாளர்.

தொடர்புக்கு [email protected]

15 வருடமாக உழைத்தவர்கள் திடீர் பணி நீக்கம்; போராட்டத்தில் இறங்கிய நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய ஊழியர்கள் – நச்சினார்க்கினியன்.ம

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்