Aran Sei

ஜேஎன்யுவின் முதல் பெண் துணை வேந்தரானார் பேரா.சாந்திஸ்ரீ – சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று விமர்சிக்கும் திரிணாமூல்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு (ஜேஎன்யு) முதல் முறையாக பெண் துணை வேந்தரை நியமிக்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

துணை வேந்தராக பணியாற்றி வந்த பேராசிரியர் முனைவர் ஜெகதீஷ் குமாரின் ஐந்து ஆண்டு பதவிக் காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, பொறுப்பு துணை வேந்தராக அவர் பணியைத் தொடர்ந்தார்.

அண்மையில், பல்கலைக்கழக மானிய குழு தலைவராக நியமிகப்பட்டார். இதையடுத்து ஜேஎன்யூவின் புதிய துணை வேந்தராக பெண் பேராசிரியர் முனைவர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் முதல் முறையாக நியமிக்கப்பட் டுள்ளார்.

ஜேஎன்யுவை அழித்தவரை யுஜிசி தலைவராக்குவதா? – மாணவர்கள், பேராசிரியர்கள் எதிர்ப்பு

இந்நிலையில், நேற்று(பிப்பிரவரி 8), ஒன்றிய கல்வித் துறைஅமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், முனைவர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டை புதிய துணை வேந்தராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்.

இந்துத்துவா கொள்கைகளை சாந்திஸ்ரீ ஆதரிப்பவர் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரது ட்விட்டர் கணக்கில் முன்னர் பதிவிடப்பட்ட கருத்துகளை, பலர் மறுபகிர்வு செய்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிறுபான்மையினர், விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆகியோருக்கு எதிராக கருத்துக்களை பதிவேற்றியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மகாத்மா காந்தி கோட்சேவால் கொலைச் செய்யப்பட்டதை ஆதரிக்கும் வகையிலும் பதிவுகள் எழுதியுள்ளதாக, பழைய பதிவுகளின் ஸ்க்ரின்ஷார்ட்களை பகிர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நியமனத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே விமர்சித்துள்ளார்.

`இது கல்வியைப் பார்ப்பன மயமாக்கும் முயற்சி’ – ஜேஎன்யு ஆசிரியர் சங்கம்

இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜேஎன்யுவின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் கிறிஸ்தவர்களை அரிசிப் பைக்காக மதம் மாறியவர்கள் என குறிப்பிடுகிறார். இவர்தான் இனி இந்தியாவின் உயர்தர சுதந்திரமான கலைப் பல்கலைக்கழகங்கள் ஒன்றின் தலைவராக இருக்கப் போகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஜேஎன்யூவில் உள்ள கிறிஸ்தவ மாணவர்கள் இப்படித்தான் நடத்தப்படுவார்களா அல்லது இது இந்திய அரசின் கொள்கையா என்பதை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Source: PTI

ஜேஎன்யுவின் முதல் பெண் துணை வேந்தரானார் பேரா.சாந்திஸ்ரீ – சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று விமர்சிக்கும் திரிணாமூல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்