இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் நடாவ் லேபிட், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நார் கிலோனுக்கு ட்விட்டரில் பலர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு நடுவர்களின் தலைவராக இஸ்ரேலிய திரைப்படஇயக்குநர் நடாவ் லேபிட் அழைக்கப்பட்டிருந்தார். நிறைவுநாள் நிகழ்ச்சியில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து கடுமையாக விமர்சித்த அவர், இந்தப் படம் இழிவானதாகவும், பிரச்சாரத்தன்மை கொண்டதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அவரது இந்த விமர்சனத்திற்கு வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்பு நாதன் லாபிட்டின் விமர்சனத்திற்கு இஸ்ரேல் அரசும் கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து நடாவ் லேபிட்டுக்கு திறந்த மடல் எழுதிய இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நார் கிலோன், இவ்வாறு விமர்சித்ததற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும் என்று கடுமையாக சாடி இருந்தார்.
ஆனால், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தொடர்பாக தான் கூறிய கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், இது எனது கருத்து மட்டுமல்ல, நடுவர்களின் கருத்தைத்தான் நான் பிரதிபலித்தேன் என்றுநடாவ் லேபிட் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை அடுத்து யூதர்களுக்கு எதிராக இந்தியர்கள் கருத்துக்களை பதிவிடுவது அதிகரித்துள்ளதாகவும், யூத எதிர்ப்புக் கருத்துகளை பலரும் ட்விட்டர் வாயிலாக தனக்கு அனுப்பி வருவதாகவும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நார் கிலோன் தெரிவித்துள்ளார்.
தனக்கு வந்த பல கருத்துகளில் ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், உங்களைப் போன்ற எச்சங்களை எரித்துக்கொன்ற ஹிட்லர் மிகச் சிறந்த மனிதர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தியாவிலிருந்து யூதர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது போன்ற எதிர்ப்புக் கருத்துகள் அதிகம் தனக்கு அனுப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source : the hindu
SKY க்கும் சாம்சனுக்கும் நூல் வேணுமாம்! | BCCI இன் EWS கிரிக்கெட் | Aransei Roast
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.