Aran Sei

விநாயக் சதுர்வேதி எழுதிய இந்துத்துவா மற்றும் வன்முறை என்ற புத்தகம்: இந்துத்துவாவின் தத்துவ கர்த்தா சாவர்க்கரை புரிந்து கொள்வது எப்படி?

காத்மாவைக் கொன்ற பாரெட்டா (Baretta) கைத்துப்பாக்கியை நாதுராம் கோட்சேவுக்கு வழங்கிய குவாலியரின் டாக்டர் பார்ச்சூர்தான் சாவர்க்கருக்கு “விநாயக்” என்ற பெயரைச் சூட்டினார். சாவர்க்கருக்குப் பிறகு “விநாயக்” என்ற அந்தப் பெயரை, இர்விங்கில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சதுர்வேதி தன் பெயருடன் இணைத்துக் கொண்டார். பிறகு தனது நூலுக்கான தலைப்பை அவர் தனிச்சிறப்பான கவனத்துடன் தேர்ந்தெடுத்தார்.

அவரது நூலில் அவர் விளக்கியுள்ளபடி, எல்லாவற்றிற்கும் மேலாக, “முழு வரலாறும் கடந்த நூற்றாண்டுகளில் இந்து சாம்ராஜ்யத்தின் மறுமலர்ச்சியை” இலக்காகக் கொண்டது என்ற கருத்தின் அடிப்படையில் சாவர்க்கர் தனது வரலாற்றின் பதிப்பு முழுவதும் விளையாடிய அரசியலை அவர் விவரித்தார். சாவர்க்கர் தனது இந்துத்துவாவின் இன்றியமையாமைகள் (Essentials of Hindutva -1923) என்ற முதன்மை நூலின் தலைப்புப் பக்கத்தில் வெளிப்படுத்தியத்தைப் போல “அரசியலை இந்துமயமாக்குங்கள் மற்றும் இந்துத்துவத்தை இராணுவமயமாக்குங்கள்” என்பதே நோக்கம்.

புதுச்சேரி: தியாகச் சுவரில் சாவர்க்கர் பெயர் – அகற்றும் போராட்டம் நடத்த சமூக அமைப்புகள் முடிவு

சதுர்வேதி தனது நூல் வாழ்க்கை வரலாறோ அல்லது உண்மையில் ஒரு ” திருத்தொண்டர் புராணமோ” (சாவர்க்கரின் வாழ்க்கையைப் பற்றிய அண்மை வெளியீடுகள் போன்றது) அல்ல. மாறாக சாவர்க்கரின் கருத்துக்களுடன் “நவீன அரசியல் சிந்தனை உருவாக்குவதில் அவை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஆராயும் நோக்கத்திற்காக” எழுதப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்துகிறார்.

இதில் இன்றியமையாதது என்னவென்றால், 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதி முழுவதும், சாவர்க்கரின் சிந்தனைகள் தேசத்தின் அரசியல் உரையாடலின் வெற்று எல்லையில் வடிக்கப்பட்டன. குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு படுகொலை நிகழ்விலிருந்து (அதில் கிட்டத்தட்ட 2000 பேர் கொல்லப்பட்டனர், 15,000 பேர் இடம்பெயர்ந்தனர், 1,00,000 பேர் வலுக்கட்டாயமாக முகாம்களில் அடைக்கப்பட்டனர் ) “அவரது எண்ணங்களின் இழைகள்” தான் இப்போது “இந்தியாவில் பொது விவாதத்தின் மையமாக” மாறியுள்ளது என்பதுதான்.

சாவர்க்கரின் அரசியல் தத்துவத்தின் விளைவாக, “காந்தியின் அகிம்சையின் இடத்தில் இந்துத்துவாவின் வன்முறை இருக்கிறது”.

இடதுசாரி வரலாற்றாசிரியர் ஜி.பி. தேஷ்பாண்டேவின் விமர்சனங்களை (சிந்தனை உலகத்தில் நவீன மராத்தி), கவனத்தில் கொண்டு, சதுர்வேதி “சாவர்க்கரைப் பற்றிய விமர்சனம் மிகவும் தேவை” என்று கூறுவதுடன், அத்தகைய விமர்சனங்கள் “(சாவர்க்கரின்) கருத்துலகை நோக்கி திருப்பப்பட வேண்டும்”. என்கிறார். அவரது பங்கிற்கு, சதுர்வேதி, சாவர்க்கரை “தேசபக்தியற்றவர் அல்லது ஆங்கிலேயர்களின் விசுவாசி என அவரது விமர்சகர்கள் பலர் எழுப்பிய குற்றச்சாட்டுகளை “கண்டிப்பதில்” ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பிரித்தெடுக்கப்பட்ட, அறிவார்ந்த சொற்றொடரான “வி.டி.சாவர்கரின் அரசியல் சிந்தனை” என்பது குறித்த ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி உள்ளார்.

காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?

இதற்காக சதுர்வேதி, சாவர்க்கர் எழுதியுள்ள ஏராளமான கட்டுரைகளில், இத்தாலிய புரட்சியாளர் ஜோசப் மாஜினியை தனது முன்மாதிரியாக வரித்துக் கொண்டு, சாவர்க்கர் மராத்தியில் மொழிபெயர்த்துள்ள மாஜினியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதிலிருந்து துவங்குகிறார். இந்தியன் என்பதிலிருந்து இந்து தேசியவாதி என அவரது கோரிக்கையை சுருக்கிய இந்துத்துவாவின் இன்றியமையாமைகள் (1923) நூலை எழுதுவதற்கு முன் சாவர்க்கர் எழுதிய இந்திய சுதந்திரப் போர் (1909) அவரை இந்திய தேசியவாதிகளின் விருப்பமான வரலாற்றாசிரியராக மாற்றியது.

அதைத் தொடர்ந்து மூன்று புத்தகங்கள் வெளிவந்தன: இந்து பட்-பாட்ஷாஹி (Hindu Pad-Padshahi) (1925) ஆங்கிலத்தில்; மாஜி ஜன்மதேப் ( Majhi Janmathep) (1927); இறுதியாக, மராத்தியில் அவரது வாழ்நாள் முயற்சியான பாரதிய இதிஹாசில் சாஹா சோனேரி பனே (Bharatiya Itihasil Saha Soneri Pane) (1963ல், அவரது மரணப் படுக்கையில் எழுதி முடிக்கப்பட்டது) இந்த கடைசி நூல், ‘இந்திய வரலாற்றில் ஆறு பொன்னான வரலாற்றுக் காலகட்டங்கள் (Six Golden Epochs in Indian History)’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆனால் சதுர்வேதி ” வரலாற்றுக் காலகட்டங்கள்” என்பதை விட “இலைகள்” அல்லது “பக்கங்களை” என்பதையே சோனேரி பனேனின் சரியான மொழிபெயர்ப்பு என கருதுவதாகத் தெரிகிறது.

சாவர்க்கர், ஒரு எழுத்தாளராக – வளமான அதே சமயம் சலிப்பூட்டும் எழுத்தாளராகவும் இருந்தார். அவரது தனிச் செயலாளரான பாலாராவ், அவருடைய புத்தகங்கள் தவிர, “3 நாடகங்கள், 2 நாவல்கள், பத்தாயிரம் கவிதை வரிகள், 25 சிறுகதைகள்” மற்றும் “சுமார் 20 புத்தகங்களில் தொகுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகள்”. என சாவர்க்கரின் படைப்புகளை பட்டியலிடுகிறார்,

இந்தத் தொகுப்புகளில் இந்து சங்காதன் (1940) மற்றும் இந்து ராஷ்டிர தர்ஷன் (1949) ஆகியவையும் அடங்கும். மேலும், அவரது எழுத்துக்களை www.savarkar.org என்ற இணையதளத்தின் மூலமும் அணுகலாம். அவர் ஆங்கிலம், மராத்தி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியில் எழுதினார், ஆனால், சற்றே வியக்கத்தக்க வகையில், அதில் வங்காள மற்றும் உருது மொழிகளையும் சதுர்வேதி சேர்த்துள்ளார்!

வலதுசாரிகளுக்கு சாவர்க்கர் தேவைப்படுவது ஏன்? – வரலாறும் விளக்கங்களும்

அந்தமான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையின் பேரில் 15 ஆண்டுகள் ரத்னகிரி மாவட்டத்தில் காவலில் இருந்தபோது தணிக்கையிலிருந்து தப்பிக்க, “ஒரு இந்திய தேசியவாதி”, “ஒரு மராத்தா” போன்ற புனைப்பெயர்களில் அல்லது அவரது சகோதரர்கள், கணேஷ் மற்றும் நாராயண் ஆகியோர் பெயர்களில் எழுதினார்.

“இந்துத்துவா” என்ற வார்த்தை 1892 ஆம் ஆண்டு வங்காளத்தின் நன்கு அறியப்பட்ட அறிவாளியான சந்திரநாத் பாசுவின் படைப்பில் உருவானதாகத் தோன்றினாலும், இந்துத்துவா என்பது சாவர்க்கரால் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது: “இந்துத்துவா, சிந்தனை மற்றும் செயல்பாட்டின் அனைத்து ஆழங்களையும் உள்ளடக்கியது … நமது இந்துத்துவம்,” என்றார் அவர். இந்துத்துவாவின் இன்றியமையாமைகள் நூலின் முதல் பக்கத்தில், “நாங்கள் இந்துக்கள், நாங்கள் அப்படியே இருக்க விரும்புகிறோம்” என்ற கடுமையான முழக்கத்தில் அவரது மேலான பணி அறிவிக்கப்பட்டது. ஆனால், “இந்து மதம் என்பது ஒரு கொணர்வுதான், ஒரு பகுதி, இந்துத்துவத்தின் ஒரு பகுதி மட்டுமே”- “இந்துத்துவம்” என்பது “வரலாறு”, “ஆன்மீக அல்லது மத வரலாறு” அல்ல, “முழுமையான வரலாறு” என்றும் அவர் விளக்கினார்.

இந்த “வரலாற்றை” சதுர்வேதி நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்துத்துவாவின் இன்றியமையாமைகளிலிருந்து (1923) அதன் உச்சம் வரையிலான இந்துத்துவா பற்றிய சாவர்க்கரின் விளக்கத்தின் பாதையில் நின்று ”பாரதத்தில் இதிஹாசில் சாஹா சோன் பனே” நூலில் அதனை அவிழ்த்து, மேற்கோள் காட்டி விளக்குகிறார். (இந்நூல் அவரது மரணத்திற்குப் பின் எஸ்.டி. காட்போல் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது). “இந்துக்கள் கடந்த காலங்களில் போர் மனநிலையில் இருந்தது மட்டுமல்ல, வன்முறை மூலம் இந்துக்கள் தாங்கள் இந்துக்கள் என்று புரிந்துக் கொள்வதற்காக தங்கள் எதிர்காலத்தின் ஒரு பகுதியாக நிலைத்த போரைத் தழுவ வேண்டியிருந்தது” என்ற சாவர்க்கரின் முக்கிய முடிவை சதுர்வேதி தன் வார்த்தைகளில் கூறுகிறார்.

ஆயினும்கூட, சாவர்க்கர், குறிப்பாக பலவீனமானவர்களுக்கு எதிராக இயக்கப்படும் போது வன்முறையை “வெறுக்கிறேன்” என்று கூறினார். , எனினும் சப்த சிந்து பகுதியில் ஆரியர்கள் பழங்குடியினரையும், நிலங்களையும் கைப்பற்றி, குடியேற்றம் செய்ததை”, பாராட்டி, அதன் பிறகு “கைப்பற்றிய ஆரியர்களும் கைப்பற்றப்பட்ட பழங்குடியினரும் இணைந்து தேசியத்தை உருவாக்கினர் என்றும், ‘இந்து’ என்ற சொல்லில் கலாச்சார ஒற்றுமை எதிரொலித்தது,” என்றும் எக்காளமிடுகிறார்.

காந்தியின் ஆலோசனையின்படி தான் சாவர்க்கர் கருணை மனு போட்டாரா? – உண்மை என்ன?

காந்தியும் நேருவும் ஆங்கிலக் கல்வியின் மூலம் மேற்கத்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, ஜான் ஸ்டூவர்ட் மில் போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட சுதந்திரம் மற்றும் தாராளமயத்தின் மதிப்புகளைப் போற்றத் தொடங்கினர். இதே சூழலில் இருந்த சாவர்க்கரோ ஆங்கில ஏகாதிபத்தியத்தின் விரிவாக்கம் மற்றும் நாகரீகப்படுத்துவது என்ற பெயரில் குடியேற்ற நாடாக மாற்றி மக்களை அடிமைப்படுத்தும் நடைமுறைகளில் அதிகமாக ஈர்க்கப்பட்டார்.

இந்தியாவின் மீதான ஆரியப் படையெடுப்பின் போது “நிலப்பரப்பைக் கொடூரமான முறையில் கையகப்படுத்தியதை, பெரிய இராணுவங்கள் நிலப்பரப்பை எரித்து உள்ளூர் மக்களைக் கொன்று குவித்ததை” அவர் பாராட்டினார். சாவர்க்கரைப் பொறுத்தவரை, ஆரிய விரிவாக்கம், “காலனித்துவத்தின் செயல்முறை வெறுமனே நிலத்தைக் கைப்பற்றுவது அல்ல, அது கலாச்சார ஏகாதிபத்தியமும் கூட…

இங்கு இந்த இயங்கியல் செயல்முறையில் காலனித்துவவாதி, காலனித்துவப்படுத்தப் பட்டவர்கள் இரண்டுமே ‘இந்துக்கள்.”

“இலங்கை மன்னன் ராவணன் மீதான இராமனின் வெற்றி, ஆரிய பழங்குடியினரின் நுழைவுடன் (இந்துஸ்தானுக்குள்) தொடங்கிய நிலத்தின் காலனித்துவத்தின் இறுதிக் கட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது”. வன்முறை நியாயப்படுத்தப்பட்டது, சாவர்க்கரால் கூட பாராட்டப்பட்டது. ஏனெனில் அவர் வாதிட்டது போல், அது “உண்மையில் முழு நிலத்தையும் இமயமலையிலிருந்து கடல் வரை ஒரே இறையாண்மையின் கீழ் கொண்டு வந்தது”.

ஆரியரையும், ஆரியரல்லாதோரையும் “இந்து’ என்ற வகைப்பாட்டின் கீழ் பின்னிப்பிணைத்தது.” இது இந்துக்களின் ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்கியது. இறுதியாக இந்துக்களால் கைப்பற்றப்பட்ட ஒரு நிலப்பரப்பைக் குறிக்கிறது. மேலும் இது உலகில் இந்துக்களுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனித இடம்.” சாவர்க்கரின் உந்துதல் “இந்துக்களின் வரலாற்றை பெரிய மக்கள்தொகையைக் கைப்பற்றிய வரலாறு மற்றும் அத்தகைய மக்கள் இந்துவாக மாறிய வரலாறு ஆகிய இரண்டையும்” சித்தரிப்பதாக இருந்தது.

சாவர்க்கரின் கருத்து, “ஹிந்துவை இந்துவாக உருவாவதற்கு வன்முறையே மையமாக இருந்தது”, “இந்து” என்பதன் அடிப்படைப் பண்பு”, “காலனித்துவத்தின் மூலம் வன்முறைச் செயல்களின்” கொண்டாட்டம். மற்றவர்கள், குறிப்பாக “அகிம்சையை” போற்றிய மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸ் முன்வைத்த தேசியவாத வரலாற்றிற்கு எதிராக, மாற்று “தேசியவாத வரலாறு” முன்வைக்கப்பட்டது.

‘சாவர்க்கர் சிறையில் இருந்தபோது காந்தி எவ்வாறு தொடர்பு கொண்டார்? – ராஜ்நாத் சிங்குக்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் கேள்வி

வன்முறை மற்றும் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவான இந்த துதிகளைப் பார்க்கும் போது, சாவர்க்கர், புத்த போதனைகளை “பன்னாட்டுவாதம் மற்றும் அகிம்சை எனும் போதைமருந்துகள் … தேசிய வீரியத்திற்கும் (இந்து) இனத்தின் இருப்புக்கும் கூட பேரழிவு தரக்கூடியவை”, அனைத்து இந்துக்களுக்கும் இருத்தலியல் அச்சுறுத்தல்”, “இந்துத்துவாவின் இறுதி மறுப்பு” என்றெல்லாம் கூறியதில் ஆச்சரியமில்லை. அவரது பார்வையில், அசோகர் “புத்த மதத்திற்கு திரும்பியதன் பொருள், இந்துக்களின் நிலம் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாது,” என்பதையே காட்டுவதாக சாவர்க்கர் கருதினார்.

முதல் “புகழ்பெற்ற வரலாற்று காலகட்டம்” சிந்துவில் இருந்து அலெக்சாண்டரின் பின்வாங்கலாகும். (“அலெக்சாண்டர், ஒரு வெற்றியாளர்! உலகத்தை வென்றவர்! ஆனால் இந்தியாவை அவர் ஒருபோதும் வென்றவர் இல்லை!” என சாவர்க்கர் கூச்சலிடுகிறார்.) (ஆச்சரியக்குறிகள் அனைத்தும் சாவர்க்கருடையவை).

அலெக்சாண்டர் இறப்பதற்கு முன், தனது கைப்பற்றிய பகுதிகளை நிர்வகிக்க ஆளுநர்களை நியமித்தார். இதில் பாக்ட்ரியாவில் இருந்த செலூகஸ் நிகேட்டரும் ஒருவர். அசோகரின் தாத்தா, சந்திரகுப்த மௌரியர், சாணக்கியரின் (கௌடில்யர்) மூலோபாய இராணுவ ஆலோசனையுடன், பின்னர் போரில் செலூகஸை தோற்கடித்து, அவரது மருமகளை மனைவியாக ஏற்றுக்கொண்டார். எனவே முதல் ‘பொற்காலத்தின்’ “வீரர்கள்” சந்திரகுப்தனும் சாணக்கியனும்தான் என்கிறார் அவர். (ஆனால் போர்க்களத்தில் அலெக்சாண்டரை எதிர்கொண்ட போரஸ் அல்ல).

இருப்பினும், சந்திரகுப்தனின் பேரன் அசோகன், “அகிம்சைக்கு ஆதரவாக போர்க் கோட்பாட்டைக் கைவிட்டார்”. சாவர்க்கரைப் பொறுத்தவரை, “இதுதான் புதிய பேரரசுகளின் படையெடுப்பிற்கு ஊக்கமளித்து, குஷானர்கள், சாகாக்கள் மற்றும் ஹன்களின் படையெடுப்புகள் தொடங்கி, முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் படையெடுப்புகள் என்ற உச்சக்கட்டத்தை அடைந்தது.” இந்தப் படையெடுப்புகளை வீரத்தாலும், வன்முறையாலும் முறியடிப்பதில்தான் சாவர்க்கர் ‘பொற்காலத்தை’ கண்டுபிடித்தார்.

ஆன்மீக சிந்தனை, தத்துவ பிரதிபலிப்பு, கலை மற்றும் கட்டிடக்கலை, கவிதை மற்றும் இலக்கியம், கணிதம், அறிவியல் மற்றும் வானியல், அல்லது அரசியல் மற்றும் இராணுவக் கோட்பாடு (தி டிஸ்கவரியில் உள்ளதைப் போல) இந்துக்கள் நாகரீகத்தின் உச்சத்தை அடைந்த காலகட்டங்களை அவர் பொற்காலமாகப் பார்க்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.) ஆனால் இந்துக்களின் “இரத்தக்கறை படிந்த பழிவாங்குதல்களை” இயற்கையானவை என்று நிரூபிக்கப்படுகின்றன.

சாவர்க்கர் பார்ப்பது போல், “அசோகரின் அகிம்சை ஒரு இந்துவாக இருப்பதற்கு முரணானது மற்றும் இறுதியில் இயற்கைக்கு எதிரானது என்ற பொருளில் இயற்கைக்கு மாறானது”

சாவர்க்கர், கோல்வால்கர் கருத்துக்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்க கண்ணூர் பல்கலைக்கழகம் முடிவு – வல்லுநர் குழுவின் பரிந்துரை ஏற்பு

இரண்டாவது பொற்காலத்தின் நாயகன் புஷ்யமித்திரன். அவனது புத்த பேரரசரான பிருஹத்ரத் மௌரியரின் தலையை துண்டித்து, “அகிம்சை கொள்கையை கைவிட்டு, வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்குவது மற்றும் இந்து பிரதேசத்தை பாதுகாப்பதில்” வீரம் உள்ளது. “இந்துக்கள் எப்போதுமே அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை அழித்துவிட்டு, உயிர் பிழைத்தவர்களை இந்துக்களாக இணைத்துக்கொள்ளும் வரலாறே இந்து வரலாறு” என்பதை இது காட்டுகிறது.

இதேபோல், மூன்றாவது மற்றும் நான்காவது ‘பொற்காலங்களின்’ கதாநாயகர்களாக, சாகர்களையும், ஹூணர்களயும் அழித்த விக்ரமாதித்யனையும், யசோதர்மனையும் சாவர்க்கர் அடையாளம் காட்டுகிறார். மிகச் சரியாகக் கூறுவதெனில் குஷானர்களைக் காட்டிலும் சாகர்களைப் பற்றி அவர் தெளிவாக குறிப்பிடுகிறார். “சமஸ்கிருதத்தையும், கலாச்சாரத்தையும் மட்டும் கற்றுக் கொள்ளவில்லை, அவர்களில் பெரும்பாலானவர்கள் வேத மதத்திற்கு மாறினார்கள்”. ஹூணர்களும் “இந்திய மதங்கள், மொழிகள், பழக்கவழக்கங்களை ஆகியவற்றை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டனர். மேலும் அவர்கள் ஓரிரு தலைமுறைகளுக்குள் தாங்கள் ஹூன கலாச்சாரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதை ஒருபோதும் நினைவுகூர முடியா வண்ணம் இந்துக்களுடன் முழுமையாக இணைந்தனர்,” என்கிறார் சாவர்க்கர்.

நாம் ஐந்தாவது புகழ்பெற்ற வரலாற்று காலகட்டதிற்குத் வரும்போது, ஆசிரியர் விநாயக் சதுர்வேதி, “வரலாற்றுக் காலகட்டங்கள்” என்பதற்குப் பதிலாக, “பக்கங்கள்” அல்லது “இலைகள்” என்று மொழிபெயர்க்கப்பட்டு ‘பனே’வுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பாராட்டத் தொடங்குகிறார். இந்துக்கள் அல்லது இந்தோ- புத்த மதத்தினரின் நாகரீக சாதனைகள் பற்றி சாவர்க்கர் மிகக் குறைவாகவே கூறியிருப்பதால், இந்தோ-முஸ்லிம்களின் நாகரீக மரபு பற்றியும் சாவர்க்கர் மிகக் குறைவாகவே கூறுகிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பரவிய இந்து-முஸ்லிம் சந்திப்பு அவருக்கு ஒரு மாபெரும் போர் அல்லது “காவிய இந்து முஸ்லீம் போர்”. அவரது நோக்கம், “தொடர்ச்சியான, நீண்ட கால, கடுமையான மற்றும் பிரமாண்டமான இந்து-முஸ்லீம் போராட்டத்தின் விரிவான விவரத்தை” வழங்குவது அல்ல, மாறாக “இந்த காவியப் போராட்டத்தை முழுமையாகவும் இந்து நிலைப்பாட்டில் இருந்தும் ஆராய்வதே”

ஹரியானா:ஆர்எஸ்எஸ் சுதந்திரத்திற்கு போராடியது எனக்கூறும் 9-ம் வகுப்பு பாடநூல் – வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜகவின் முயற்சியென காங்கிரஸ் கண்டனம்

ஆப்கானிஸ்தான், ஈரானிய, மேற்கு ஆசிய, துருக்கிய மற்றும் துருக்கிய- மத்திய ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த பலவிதமான இஸ்லாமியர்களுடன் இந்தியர்களின் ஆயிரக்கணக்கான தொடர்புகளை சாவர்க்கர் காண்கிறார். இது குறிப்பாக “புத்த மதத்தை இந்தியாவை விட்டு விரட்டுவதற்குப் பதிலாக அதனை ஏற்றுக் கொண்ட இந்துக்களால் ஏற்பட்டதாக” அவர் கருதுகிறார். எனவே, “மத மற்றும் அரசியல் அதிகாரத்திற்கு ஆசைப்பட்ட முஸ்லிம்கள் அப்போது இந்துக்களுக்கு எதிரான போர்க்களங்களில் ஆதிக்கம் செலுத்தினர். இந்துக்கள் தோற்கடிக்கப்பட்டது மட்டுமல்ல, இலட்சக்கணக்கானோர் இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டனர். மேலும், முஸ்லிம்கள் இந்துக்களால் ஊடுருவி தன்வயமாக்க இயலாதவர்களாக இருந்தனர்”. முஸ்லிம்கள் காட்டிய வழியில் தங்கள் சொந்த மத, அரசியல் வெற்றியை பெறும் நோக்கத்துடன் வந்த “போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் போன்ற “கிறிஸ்தவ நாடுகளின்” வருகையால் இது மேலும் மோசமாகியது.

இதில் முஸ்லீம்கள் (மற்றும், பிற்கால கிறிஸ்தவர்கள்) ஒரே மாதிரியான அமைப்பாக சித்தரிக்கப்படுகிறார்கள். கஜினி முகமது நம் நாட்டின் மீது மீண்டும் மீண்டும் படையெடுத்து, ஆனால் ஒவ்வொரு முறையும் தவறாமல் தனது சொந்த நாடான ஆப்கானிஸ்தானிற்கு திரும்பினார். ஆனால் கன்னோஜ் அரசர்தான் முகமது கோரியை ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா மீது தனது படையெடுத்து வருமாறு அழைத்தார். பின்னர் 1192 இல் காலியாக இருந்த தில்லி அரியணையில் அமர்ந்து, இந்த நாட்டிலேயே தனது சுல்தான் வமிச ஆட்சியை நிறுவி. தன் வாழ்நாள் முடியும்வரை இங்கேயே இருந்தார். ஒருபோதும் தங்கள் சொந்த தாய்நாட்டிற்குத் திரும்ப நினைக்கவே இல்லை. இந்நிலையில் இந்த இரண்டு படையெடுப்புகளுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் அவர் காணவில்லை. பிற உள் மற்றும் வெளிப்புற முஸ்லீம்களின் சவால்களை எதிர்த்துப் போராடும் முஸ்லீம் சக்திகளுக்கு எந்த குறிப்பிட்ட முக்கியத்துவத்தையும் அவர் கொடுக்கவில்லை. ஆனால் “முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சி செய்த இந்துக்களைத் தேர்ந்தெடுப்பதில்” அதிக கவனம் செலுத்தினார். இதுதான் ஐந்தாவது பொற்காலம் பற்றிய சாவர்க்கருடைய பார்வையின் உட்கருவாகும்.

1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, “பாபரின் கைகளில் ஏற்பட்ட தோல்விக்கு இந்துக்கள் முஸ்லிம்களைப் பழிவாங்குகிறார்கள். உண்மையில் 1526ல் நடந்த முதல் பானிபட் போரில், ஒரு இந்துவை அல்ல, இப்ராஹிம் லோதி என்ற சக-முஸ்லிமைத்தான் பாபர் தோற்கடித்தார்!” என பாகிஸ்தான் அதிபர் கூறியதை அன்றைய தூதரக உயர் ஆணையர் மணி தீட்சித் கிண்டலாக சுட்டிக்காட்டியது எனக்கு நினைவிற்கு வருகிறது.

மாடுகள் நம்முடைய தாய் என கூறிய பிரதமர்: சாவர்கரின் புத்தகத்தை மேற்கோள்காட்டி திக்விஜய சிங் பதிலடி

சௌராஷ்டிர அரசர் பீம், போரில் ஐம்பதாயிரம் இந்துக்களை இறக்க விட்டுவிட்டு, போர்க்களத்தில் இருந்து “அவமானத்துடன் தப்பியோடிய” பிறகும் சோமநாத்தில் கஜினியை எதிர்த்துப் போரிட்ட இந்துக்களின் எதிர்ப்பில் இந்துக்களின் வீரத்தை சாவர்க்கர் காண்கிறார் அவர்களை “இந்து மாவீரர்கள்” என்று சாவர்க்கர் கூறுகிறார். ஆனால் கஜினி சோம்நாத்தில் கொள்ளையடித்த செல்வங்களை ஏற்றிச் சென்ற தொடர்வண்டியை ராஜஸ்தானின் பாலைவனங்களில் தாக்கி, அதில் பெரும்பகுதியை எடுத்துச் சென்ற இந்துக்களைப் பற்றி ஜவஹர்லால் நேரு குறிப்பிடுவது போல் சாவர்க்கர் குறிப்பிடவில்லை. அதன் பிறகு கஜினி முகமது மீண்டும் இந்தியாவுக்கு வரவே இல்லை.

அக்பர் போன்ற ஒருங்கிணைப்பாளருக்கும், அலாவுதீன் கில்ஜி போன்ற அழிவு சக்திக்கும், ஒருபுறம் ஜஹாங்கிர் மற்றும் ஷாஜஹானுக்கும், மறுபுறம் ஔரங்கசீப்புக்கும் இடையே சாவர்க்கர் எந்த வேறுபாடும் காட்டவில்லை. சொந்த உறவினர்களாலும், ஆலோசகர்களாலும் கொடூரமாக அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வீழ்ந்த இளம் முஸ்லீம் அரசர்களுக்கும் அல்லது முகலாயர்களின் கருவூலத்தை தாக்கி நாட்டை அழித்த நாதர் ஷா மற்றும் அப்தாலி போன்ற முஸ்லீம் படையெடுப்பாளர்களுக்கும், பகதூர் ஷா ‘ஜாஃபர்’ போன்ற மென்மையான கவிஞர்-பேரரசர் போன்றவர்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் அவர் காட்டவில்லை. அனைவரையும் முஸ்லிம்கள் என்ற ஒரே மூட்டையாக கட்டிவிட்டார். கிறித்துவர்களையும் அவ்வாறே காட்டுகிறார்.

இது சாவர்க்கரின் இந்து வரலாற்றில் அவருக்குப் பிடித்தமான “பக்கம்” வருவதற்கான பாதையை மென்மையாக்குகிறது. அதாவது அதில் “ஆயிரம் ஆண்டுக்கால முஸ்லீம் படையெடுப்புகள் இருந்தபோதிலும், இந்துக்கள் மீண்டும் வெற்றி பெற்ற மராட்டியர்களின் “இந்து பாட்ஷாஹி” நிகழ்வு.

இது எனது இந்தியா ஆட்சிப் பணித் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியை என் நினைவிற்கு கொண்டு வருகிறது. “ஆங்கிலேயர்கள் இந்தியாவை இந்துக்களிடமிருந்து கைப்பற்றினார்கள், முஸ்லிம்களிடமிருந்து அல்ல. விவாதிக்கவும்.” என்பதே அந்த கேள்வி.

வரலாற்றை சார்வர்க்கருக்கு சாதகமாக எழுதாதீர்கள் – அருஞ்சொல் கட்டுரையும் ராஜன் குறை எதிர்வினையும்

இதில் மனவருத்தம் தரும் உண்மை என்னவென்றால், சில மராட்டிய ஹீரோக்கள், குறிப்பாக சிவாஜி போன்றவர்களின் ஆட்சி உண்மையில் முகலாயப் படைகளுக்கு பல தோல்விகளை ஏற்படுத்தியிருந்தாலும், இறுதியில் அவர்களின் இந்து பேரரசின் மீட்சி (இந்து பட் பட்ஷாய்) ஒரு வால் நட்சத்திரம் போல விண்ணில் தோன்றி மறைந்து போனது. அது நீடிக்கவில்லை என்பதுடன் அது விரைவில் உடைந்தும் போனது. மேலும் அதன் மிக முக்கியமான குலத்தலைவர்கள் ஆங்கிலேய காலனித்துவ அதிகாரத்தின் ஆளுநராக மாறினர். இதனாலேயே, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஐந்தாவது பொற்காலத்தில், “இந்துக்களின் எண்ணங்களும் செயல்களும் சாவர்க்கரை ஏமாற்றியதாகத் தோன்றுகிறது”. எனவே “இந்து வரலாற்றில்” “உண்மையான” இந்து கதாநாயகர்களாக அர்ச்சுனனும், ராமரும் மட்டுமே வெளிப்பட்டுள்ளனர் என்ற முட்டாள்தனமான முடிவுக்கு அவர் வருகிறார். மாஜி ஜென்மஸ்தேப் (Majhi Janmasthep), நூலில் “அர்ஜுனன் மற்றும் ராமச்சந்திரனுடன்” மூன்றாவது கதாநாயகனாக தன்னையே சாவர்க்கர் ஒப்பிட்டுக் கொள்கிறார்.

ஆறாவது புகழ்பெற்ற பொற்காலம் “சிறியது, அவரது புத்தகம் திடீரென முடிவடைகிறது”, “மிகவும் திடீரென்று மற்றும் விரைவாக, முற்றிலும்” காணாமல் போன “வலிமையான பேரரசு” என்று வரலாற்றின் வெளிச்சத்திற்கு எதிராக எப்போதும் நிலைநிறுத்தப்பட்டது – ஆனால் அது நாட்டை இரண்டாகப் பிரித்த பிறகே நடந்தது.

பகத் சிங் போன்ற புரட்சியாளர்களுக்கும், சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தின் ஆயுதப் போராட்டத்திற்கும் சிறு பாவமன்னிப்புக் கொடுத்து, காந்தியும் அவரது அகிம்சையும்தான் நமக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்ததில் மையமாக இருந்தது என்ற சங்கடமான உண்மையின் மீது சாவர்க்கர் நழுவிச் செல்ல வேண்டி வந்ததால், பிரிவினையை ரத்து செய்யவேண்டியது இப்போது இந்துவின் மையப் பணி ஆகிவிட்டது.

“இதற்கு இரு முனை உத்தி தேவைப்படுகிறது. முதலில், இந்துக்கள் இந்தியாவை “கட்டுப்படுத்த வேண்டும்”. இரண்டாவதாக, அதன்பிறகுதான் “இழந்த பகுதிகளை மீட்டு இந்து ஒற்றுமையை மீண்டும் நிறுவ முடியும்,” என்று சாவர்க்கர் கூறுகிறார். இந்த நோக்கத்திற்காக, “கடந்த காலத்தில் இந்துக்கள் வன்முறை மூலம் இந்துக்களாக மாறினர்” “எதிர்காலத்திலும் இது தொடரும் – இது இந்து உணர்வால் வழிநடத்தப்படும்” என்பதை இந்து நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் அவர். எஞ்சியிருப்பது “இந்து வரலாற்றை உருவாக்கிய”, சாவர்க்கர். அவர் “ஆறாவது புகழ்பெற்ற பொற்காலத்தைப் புரிந்து கொள்ள” தனது வாழ்க்கை வரலாற்றைப் படிக்குமாறு தனது வாசகர்களைத் தூண்டுகிறார். ஏனெனில் இந்த பொற்காலத்தில் அவரே வரலாற்றின் “எழுத்தாளராகவும்”, “வரலாற்றை உருவாக்கியவராகவும்” இருக்கிறார். “இந்து வரலாற்றை எழுதும் செயலே இந்துத்துவா. அது போலவே இந்து வரலாற்றை உருவாக்கும் செயலாகும்”. இந்தப் பார்வைதான் சாவர்க்கரை அவரிலிருந்து வேறுபடுத்துகிறது. அவர் கண்களுக்கு அவரே ஆறாவது புகழ்பெற்ற பொற்காலத்தின் உண்மையான ஒரே கதாநாயகன்.

‘காந்திக்கு பதிலாக சாவர்க்கரை தேசத்தந்தையாக பாஜக அறிவிக்கும்’ – ராஜ்நாத் சிங் பேச்சிற்கு ஒவைசி கண்டனம்

சாவர்க்கரின் புகழ்பெற்ற பொற்காலங்களின் ஆரம்பகால விமர்சகர் ஜே. பெட்ரோசினியோ டி சோசா. இந்த நூலை “உண்மை மற்றும் புனைகதை, யதார்த்தம் மற்றும் கற்பனை ஆகியவற்றின் ஆர்வமுள்ள கலவையாக… இந்துத்துவா மற்றும் இந்து வரலாறு பற்றிய அவரது வாதத்திற்கு ஏற்ற ஆதாரங்களைத் தேர்ந்தெடுப்பததாகக்” கூறி நிராகரிக்கிறார். உலகம் முழுவதிலும் இந்துத்துவாவின் ஒரே புவியியல் வரம்புகள் பூமியின் எல்லைகள்தான் என்பதால் ‘”இந்து மேலாதிக்கத்தை” நிறுவுவதே சாவர்க்கரின் குறிக்கோளாக இருந்தது, ‘ என்று அவர் கூறினார்.

1947 க்குப் பிறகு பல பத்தாண்டுகளாக, அவரது எண்ணங்களுக்கு கொடுக்கப்பட்ட தேசிய அங்கீகாரம், சுதந்திரத்திற்கு முந்தைய பத்தாண்டுகளில் கொடுக்கப்பட்டதை விட குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது மோடியின் கீழ் பாஜக ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியாக மாறியிருப்பதால், காலவரையின்றி அது நிலைத்திருக்க வாய்ப்புள்ளது, ஜோயா பட்டி, தி பிரிண்டிற்கான தனது சமீபத்திய கட்டுரையில், “தில்லியின் சுற்றுவட்டாரப் புத்தகக் கடைகாரர்களே, பழைய பஹ்ரிசன்ஸ் புத்தக விற்பனையாளர்களே.. உங்கள் சாளரக் கண்ணாடிகளுக்குப் பின்னல் வட்டமான, கருப்புத் தொப்பி அணிந்த கண்ணாடி அணிந்த ஒரு அறிந்த முகம் உங்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது – அது விநாயக் தாமோதர் சாவர்க்கரின் முகம். கடின புத்தக அட்டைகளின் மேலுள்ள காகித உறைகள் இப்போது இன்னும் உயிருடன் இருக்கும் பலரை விட பெரிய, உயிர்த்தெழுந்து நிற்கும் ஒரு பெயரைக் கொண்டிருக்கும்.

இந்த புத்தகக் குவியலில் இப்போது பேராசிரியர் விநாயக் சதுர்வேதியின் அறிவார்ந்த புத்தகம் மதிப்பாய்விற்காக சேர்க்கப்பட்டுள்ளது. சதுர்வேதி, வரலாற்றாசிரியர் சுமித் சர்க்காரை மேற்கோள் காட்டுகிறார், “உலகில் எந்த பகுதியிலும் அதிநவீன வரலாற்றுப் புரிதலுக்காக தெற்காசிய வரலாற்றைப் படிப்பவர்களுக்கு சாவர்க்கரின் அனுமானங்கள்… மறுப்பதற்கும், விவாதிப்பதற்கும் தகுதியற்றதாகவும் மிகவும் அபத்தமானவையாகவும் தோன்றும்.” இருப்பினும், சதுர்வேதி, “இந்துத்துவா என்பது ஒரு சொல் அல்ல, ஒரு வரலாறு” என்ற “அடிப்படை சிந்தனை” காரணமாக “இந்துத்துவாவை புறக்கணிக்க முடியாது” என்று கூறுகிறார். நிகழ்வுகளின் தற்போதைய ஒருங்கிணைப்பு “அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியை குறிக்கிறது,” என்கிறார் அவர்.

`வீர சாவர்க்கருக்குப் பாரத ரத்னா வழங்காதது ஏன்?’ – சிவசேனா

இதன் கொடூரமான விளைவு, ஆசிரியர் குறிப்பிடுவது போல், “ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் அடிபணிந்தவர்கள் சில சமயங்களில் வன்முறையை நாடுகிறார்கள். இவை உண்மையில் பெரும்பாலும் இனப்படுகொலைகளாகவே இருக்கின்றன – அவை சில சமயங்களில் அரசுடன் இணைந்து, மற்ற சந்தர்ப்பங்களில் அதைச் சாராமல் – நடக்கின்றன. இந்துத்துவா என்ற பெயரில் வரலாற்றை உருவாக்குவதற்காக கொலையாளிகளாக… அவர்கள் அவற்றிற்குப் பெறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.”

அதுவே நமது இருத்தலியல் நிகழ்காலத்தின் ஆபத்து.

இந்த மதிப்பாய்வைப் படிக்கும் அனைத்து வாசகர்களும் உங்கள் பைகளில் இருந்து ஆயிரம் ரூபாய்களை எடுத்து, நாம் இன்று அனுபவிப்பவைகளுக்கும், எதிர்காலத்தில் அனுபவிக்கப் போகின்றவைகளுக்கும் தோற்றுவாயாக உள்ளவற்றின் மிதமான, அறிவாற்றல் மிக்க, ஆழமான ஆராய்ச்சியுடன் கூடிய, உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற இந்த உண்மைகளை அறிந்துக் கொள்ள செலவிடுங்கள். தன் காலத்தில் பெரிதும் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு அரசியல் சிந்தனைக்கான பங்களிப்பை, ஆனால், சாவர்க்கர் மறைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது தற்போதைய நிறுவனத்தின் அரசியல் சிந்தனையின் அடிப்படை ஆதாரமாக உயிர்த்தெழுப்பப்படுவதை இந்த எழுத்தாளர் “கண்டிக்க” அல்ல, மாறாக “புரிந்துகொள்ள” முயல்கிறார் என்று நான் மீண்டும் சொல்கிறேன்.

www.thewire.in இணையதளத்தில் மணி சங்கர் ஐயர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.

மொழிபெயர்ப்பாளர் : நாராயணன்

மோடிய அவமானப்படுத்திட்டாங்க | கொந்தளிக்கும் சீமான்

விநாயக் சதுர்வேதி எழுதிய இந்துத்துவா மற்றும் வன்முறை என்ற புத்தகம்: இந்துத்துவாவின் தத்துவ கர்த்தா சாவர்க்கரை புரிந்து கொள்வது எப்படி?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்