அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை விசாரிப்பதற்கு முன்பாக தங்கள் தரப்பு வாதத்தை முதலில் கேட்க வேண்டும் என்று கேவியட் மனுவை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது.
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கான அறிவிப்பைக் கடந்த ஜூன் 14 தேதி ஒன்றிய அரசு வெளியிட்டது.
இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் விஷால் திவாரி, மனோகர் லால் சர்மா, ஹர்ஷ் அஜய் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த திட்டம்குறித்து ஆராய ஒரு நீதிக் குழுவை அமைக்க கோரியும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களில் ஏற்பட்ட பெரிய அளவிலான வன்முறைகுறித்து விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க கோரியும் மனுதாரரும் வழக்கறிஞருமான விஷால் திவாரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதி சி.டி. ரவிக்குமார், இந்த விவகாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிடம் முன் வைக்கப்படும் என்றும், நீதிமன்ற விடுமுறைகள் முடிவடைந்த பிறகு அவர் இதுகுறித்து முடிவெடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
ராணுவத்திற்கு 4 வருட ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை பணியில் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தின் ஒரு பகுதியாக பொது சொத்துக்களை அழித்தல், போக்குவரத்தை முடக்குதல், ரயில்களை ரத்து செய்தல் போன்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 20 தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
அக்னிபத் திட்டத்தின் வழியாக பாஜக தனது சொந்த ‘ஆயுதப் படையை’ உருவாக்குகிறது: மம்தா பானர்ஜி விமர்சனம்
இந்நிலையில் ஜூன் 21 தேதி, முப்படை தளபதிகளும் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து அக்னிபாத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விளக்கத்தை அளிக்க உள்ளனர்.
மனோகர் லால் சர்மா தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில், “திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயுத பயிற்சி பெற்ற வீரர்கள் அதற்கு ஏற்ற வேலை கிடைக்காத நிலையில் வழித் தவறி செல்வதற்கான வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.
”வீரர்களை கருவூலத்திற்கான சுமையாக கருதக் கூடாது. கரடுமுரடான வைரம் வெட்டப்பட்டு மெருகூடப்படுவது போல, இவர்களை தேசத்தின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட வேண்டும்”’ என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு நல்லது என்றால் நாட்டுக்கு ஆபத்தானது – ராகுல் காந்தி விமர்சனம்
மேலும், இந்த திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அந்த மனுவில் மனோகர் லால் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
”நான்கு ஆண்டுகளுக்கு அக்னிவீரர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும். ஆனால் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவதோடு, ஓய்வூதியமும் மறுக்கப்படுகிறது” என்று அந்த மனுவில் குறிப்பிடப்படுள்ளது.
இந்நிலையில், அக்னிபத் திட்டம் தொடர்பாக எந்த ஒரு மனுவையும் விசாரிப்பதற்கு முன்பு தங்கள் தரப்பு வாதத்தை விசாரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு சார்பில் கேவியட் மனு ஒன்றுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Source: The Wire
Army Man Interview on Agnipath | பாஜக செய்வது தேசபக்தியா தேசத்துரோகமா? | Dr Poovannan Lt Col
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.