1922இல் மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனரான விநாயக் தாமோதர் சவர்க்கார் என்பவர் எழுதிய நூலின் தலைப்பு இந்துத்வா. அதற்கு முன் அந்தச் சொல் புழக்கத்தில் இல்லை. இந்தியாவில் இரண்டே தேசிய இனங்கள் உள்ளன. ஒன்று இந்து, மற்றொன்று இஸ்லாம் என்ற பாகுபாட்டை அந்த நூல் கூறியது.
அந்த அடிப்படையில் சித்பவனப் பார்ப்பனர்களால் மக்களைப் பிரித்தாளும் இந்துத்துவ தத்துவம் தோற்றுவிக்கப்பட்டது. 1925இல் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் எனப்படும் இயக்கம் உருவாக்கப்பட்டது. இதை உண்டாக்கியவர் சித்பவன் பார்ப்பனரான கேசவராம் பலிராம் ஹெட்கோவர்.
மேட்டூர் அணை உருவான வரலாறும் மக்களின் தியாகமும் – சூர்யா சேவியர்
இப்போதிருக்கும் இந்துஸ்தானம் எனும் நாட்டுடன் பழைய நாடுகளையும் இணைத்து ஒரே நாடாக ஆக்கப்பட வேண்டும், அது அகண்ட பாரதமாகக் காட்சியளிக்கும் என்பது அந்த இயக்கத்தின் குறிக்கோளாக சொல்லப்பட்டது.
அகண்ட பாரதத்தில் சிந்துநதி பாயும். அதில் தான் தனது பிணம் எரித்த சாம்பலைக் கரைக்க வேண்டும் என்பது காந்தியைக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேவின் இறுதி வேண்டுகோள். அதனாலேயே சாம்பல் செம்பு ஒன்றில் வைத்து இன்றும் பாதுகாக்கப்படுகிறது. அகண்ட பாரத மாதா தேசப்படத்தின் முன்பாக ஆண்டுதோறும் வைத்து வணங்கப்படுகிறது.
கோட்சேயின் குடும்பத்தினருடன் இந்துத்துவத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களும் கூடி நின்றுக் கும்பிடுகின்றனர். அகண்ட பாரதத்தை அமைக்கச் சபதம் ஏற்கின்றனர். 1949 முதல் இந்நிகழ்வு நடைபெறுகிறது. அகண்ட பாரதம் சாத்தியமா? அகண்ட பாரதம் எது?
இந்தியத் துணைக்கண்டத்திற்கு பாரதவர்ஷம் என்று பெயர் சொல்லப்படுகிறது. இதன் உள்பிரிவு பரத கண்டம். இதன் வடக்கே இமயமலை, கிழக்கே மகோததி எனும் கடல், தெற்கே ரத்னாகரம் எனும் கடல், மேற்கே பாச்சாத்ய எனும் கடல் ஆகியவை இன்றைய இந்தியாவின் நான்கு எல்லைகளாக இந்துத்துவவாதிகளால் வரையறை செய்யப்படுகிறது. இந்தப் பரத கண்டத்தில் 56 தேசங்கள் இருந்தனர் என்றும், இவற்றைத் தனித்தனி அரசர்கள் ஆண்டனர் என்றும் சொல்லப்படுகிறது. அவர்கள் சூரிய வம்சத்தையும் சந்திர வம்சத்தையும் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆக, இந்தியா எனும் நாடு என்றுமே ஒரே நாடாக இருந்ததில்லை.
56 தேசங்களும் மூன்று பெரும் பிரிவுகளில் அடங்கும் எனறும், பிரம்மா வர்த்தம், ஆர்யா வர்த்தம், தட்சிணபதம் என்ற பிரிவுகளில் 56 தேசங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.
பிரம்மா வர்த்தம் எனப்படுவது காஷ்மீரம், மத்ரம், காந்தாரம், பர்பரம், வநாயு, சிந்து, சவ்வீரம், மாளவம், கூர்ஜரம், அவந்தி, தகார்ணம், விதர்ப்பம், ஆபீரம், சால்வம், திரி கர்த்தம், கேகயம், விராடம் ஆகிய 17 தேசங்கள் அடங்கிய பகுதி என்று அகண்ட பாரதம் இந்துத்துவவாதிகளால் சொல்லப்படுகிறது.
ஆரிய வர்த்தம் எனப்படுவது பாஹ்லிகம், குரு, சூரசேனம், குந்தலம், மத்ஸ்யம், குந்தி, நிஷதம், சேதி, நிஷாதம், கோசலம், பாஞ்சாலம், நேபாளம், ஆரட்டம், பார்வதம், ப்ராக்ஜோதிஷம், காமரூபம், அங்கம், விதேகம், வங்கம், மத்ரம், ஹேஹயம் ஆகிய 21 தேசங்கள் ஆர்யா வர்த்தப் பகுதியில் அடங்கும்.
தட்சிணா பதம் எனப்படுவது உத்கலம், கலிங்கம், யவனம், கொங்கணம், மகாராஷ்டிரம், குளிந்தம், ஆந்த்ரம், கர்நாடகம், த்ராவிடம், சோழம், பாண்டியம், கேரளம் ஆகிய 12 தேசங்களும் தட்சிணாபதம் பகுதியாகும்.
இந்த மூன்று பகுதிகளிலும் பிரம்மா வர்த்தம், ஆரியா வர்த்தம் ஆகிய இரண்டு பகுதிகளும் புண்யபூமி என்ற பொதுப் பெயரால் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தட்சிணாபாதத்தில் இருந்தோர் ஆரியர் அல்லாதோர். அநாரியர். ஆகவே, அவர்கள் இருக்கும் பூமி புண்யபூமி ஆகாது. ஆரியர் இருக்கும் பூமிதான் புண்யபூமியாம்! இப்படி மனுஸ்மிருதி, விஷ்ணு புராணம், பாகவதம் முதலிய புராணங்கள் கூறுகின்றன.
ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்
தட்சிணாபதம் பகுதிக்கு வடக்கு எல்லை விந்திய மலை. தெற்குப் பகுதியில் சூரிய ஒளிபட முடியாத அளவுக்கு மிகவும் உயரமாக அமைந்து விட்டது. இதனால், தெற்கே ஆரோக்கியம் கெட்டுவிட்டதால் பயிர்கள் வளரமுடியாமல் போய் விட்டது. ஆகவே, மக்கள் எல்லாம் அகத்தியமுனியிடம் முறையிட்டனர். அதனால், அகத்தியர் விந்திய மலையின் உயரத்தை மட்டுப்படுத்தினார் என்கிறது ஒரு தொன்மம்.
அகத்தியரைக் கண்டதும் விந்திய மலை குனிந்து வணங்கியது. அதானால், அந்த அளவு உயரமே இருக்கும்படியாக அகத்தியர் ஆக்கிவிட்டார். இப்படியான புனைவுகளில் வழியேதான் தங்களுடைய அதிகார இருப்பை தக்கவைக்கிறது ஆரியம்.
பரத கண்டத்தில் 56 தேசங்கள் உண்டு எனப் புராணங்களில் இருந்தாலும், இந்தியா எனக் குறிக்கப்படும் தற்போதைய நாட்டில் 39 தேசங்கள்தான் அடங்கியிருக்கின்றன. சீனா மிகப்பெரிய வல்லரசாகப் பொது உடைமை நாடாக உள்ளது. சிம்மளம் (சிங்களம்) தனியாக சிங்களப் பேரினவாத நாடாக உள்ளது. பாரசீகம் என்பது இன்றைய ஈரான், ஈராக் முதலிய பால நாடுகளாக உள்ளது. காம்போஜம் என்பது ஆப்கானிஸ்தான் நாடாகவும், இசுலாமியர்களின் நாடுகள் எனப்படும் பகுதியாகவும் விளங்குகின்றன. மதமற்ற, பவுத்தம் சார்ந்த, இசுலாம் பரவியுள்ள இந்த நாடுகள் எப்படி பரத கண்டத்தில் சேரும்? சேர முடியும்? சேர்க்க முடியும்?
பாஜக அரசால் வீழ்த்தப்பட்ட செங்கல்பட்டு மருந்து உற்பத்தி நிறுவனத்தின் வரலாறு – சூர்யா சேவியர்
ஆபீர தேசம், சால்வ தேசம், ஸிந்து தேசம், சவ்வீர தேசம், வநாயு தேசம், பர்பர தேசம், கிராத தேசம், காந்தார தேசம், மத்ர தேசம் ஆகியவை இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இசுலாமிய நாடுகளில் அடங்கியுள்ளன. இந்துக்களின் அகண்ட பாரதத்தில் எப்படி கொண்டுவர முடியும்? அகண்ட பாரதம் இந்துக்களை ஏமாற்றத்தான் பயன்படுமே தவிர, நடைமுறைக்கு வரவே வராது!!
காம்போஜம் இன்றைய திபேத் நாடு. இதற்கும் சீனாவுக்குமான சிக்கல்கள் தீர்ந்த பாடில்லை. லாமா வேண்டுமானால் இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருக்கலாம் அவருடைய திபேத் (தனிநாடு) எப்படி இந்தியாவில் அடைய முடியும்?
நேபாளம் தனி நாடு. இந்நாட்டின் மீது யார் செல்வாக்கு செலுத்துவது என்பதில் இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டு வருகின்றன. நேபாளியர்களில் இந்து மதத்தினரும் உண்டு. பவுத்த மதத்தினரும் உண்டு. எனவே, மக்களும் இப்படியும் அப்படியுமாக உள்ளனர்! இது எப்படி இந்தியாவுடன் இணையும்?
லட்சத்தீவை ஆட்டிப் படைக்கும் இந்த பிரஃபுல் படேல் யார்? – பேராசிரியர் அ.மார்க்ஸ்
பார்வத தேசம் என்பது இன்றைய பூட்டான். பவுத்தர்கள் நிறைந்த தனி நாடு. மன்னர் உண்டு. நாடாளுமன்றமும் உண்டு. பாதுகாப்புக்கும் அயல் உறவுக்கும் இந்தியா உத்திரவாதம். ஆனால், இந்திய நாட்டுடன் இணையும் பேச்சே இல்லை.
ஸிம்மதேசம் என்பது தற்போதைய வங்கதேசத்தில் அடங்கியது. முதலில் பாகிஸ்தானில் (மத அடிப்படையில்) இருந்தது. பிறகு வங்கதேசமாக மொழி அடிப்படையில் மாறியுள்ளது. எப்படி இந்தியாவுடன் சேரும்?
வங்கதேசம் என்ற பெயரில் இருந்த 56 தேசங்களில் ஒன்று பிரிட்டிஷ் ஆட்சியில் மேற்கு, கிழக்கு எனப் பிரிக்கப்பட்டது. மேற்கு வங்கம் இந்தியாவிலும் கிழக்கு வங்கம் பாகிஸ்தானிலுமாக ஆனது. அதுவே பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து வங்கதேசமாக உள்ளது. எப்படி இந்தியாவுடன் இணையும்?
மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்
மேலேகண்ட உண்மை நிலவரங்கள் ஆர்.எஸ்.எஸ். அகண்ட பாரதக் கனவு நனவாகவே முடியாத ஒன்று என்பதைத் தெளிவாக்கிட உதவும். இவை அவர்களுக்கும் தெரியும். ஆனாலும், ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை. ஏனெனில், அவர்கள் சநாதனிகள். அப்படி என்றால் மாறாதவர்கள், மாற்றத்தை விரும்பாதவர்கள், மாறுவதுதான் மாறாதது என்ற உலகப் பேருண்மையையோ உலக இயற்கை நியதியையோ ஏற்க மறுப்பவர்கள். ஆனால், தந்தை பெரியார் கூறியவாறு, சுயமரியாதை என்பது மாறுதலுக்கு ஆளாகும் தத்துவம். மெய்மை நிலையைப் புரிந்து பேசுவதும் செயல்படுவதும் சுயமரியாதைக்காரர்-களின் பண்பு.
விந்தியத்திற்கு வடக்கே இருக்கும் புண்யபூமி மக்களின் பண்பாடும், விந்தியத்திற்குத் தெற்கே தட்சிணபத மக்களின் பண்பாடும் வெவ்வேறு வகையில் அமைந்தன.
தமிழ்நாட்டுச் சுமங்கலிகள் வெண்மை வஸ்திரத்தை அணியமாட்டார்கள். தெலுகு, மராட்டியம், குஜராத் மகளிர் அந்தப் பழக்கம் கொண்டிருக்கின்றனர். தென்னாட்டுப் பார்ப்பனர்கள் மீசை வைத்துக்கொள்ளமாட்டார்கள். மகளிருடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். ஆனால், வட தேசங்களில் இது நியாயமென்று ஒப்புக்கொண்டு அதுபோல நடத்தப்பட்டு வருகின்றது.
கொரோனா பேரிடர்: வைரசின் இரக்கமின்மைக்கும், மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சம பங்கு உண்டு – மருதையன்
சிந்து, மாளவம், கொங்கணம் முதலிய தேசங்களில் தை மாதம் முதல் ஆனி மாதம்வரை திருமணம் போன்ற நற்காரியங்கள் நடைபெறுவதில்லை. ஆனால், தெலுகு, தமிழ் தேசங்களில் இம்மாதங்களில்தான் சுபகாரியங்கள் நடைபெறுகின்றன. வங்கம், கோசலம் அகிய தேசங்களிலும் இதே மாதிரிதான் சுபகாரியங்களை நடத்திக் கொள்கிறார்கள்.
56 தேசங்களில் யவனம் (ஐதராபாத்) கிராதம், பாரசீகம், காம்போஜம், சீனம் முதலிய சில தேசங்களில் வேறு ஜாதி ஜனங்கள் நெடுநாளாய் வசிக்கிறப்படியால் அவர்களுடைய மதமும் ஆசாரமும் உணவும் உடுப்பும் விரோதமாகவே காணப்படும்.
இவ்வாறெல்லாம் பி.வி. ஜெகதீச அய்யர் என்பவர். 1918இல் எழுதிய புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் எனும் நூலில் எழுதியுள்ளார்.
அவர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.சைத் தொடங்குவதற்கு முன்பே ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், இந்தியா ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி எனப் பேசுகிறார்கள் என்றால்…… இவர்களை எத்தர்கள் என்பதா ?
பாலஸ்தீன, இஸ்ரேல் யுத்தமும் அதன் பின்னணியும் – சூர்யா சேவியர்
ஏமாறுவதற்குத் தயாராய் இருப்பதால்தானே, ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள்? ஒரு இசுலாமியருக்குக் கூட சட்டமன்றத்தில் இடம் இல்லாமல் செய்ததுதானே குஜராத் முதல் அமைச்சரான நரேந்திரமோடியின் சாதனை! அதனால்தானே அவரைப் பிரதமர் என்று ஆக்கியது ஆர்.எஸ்.எஸ். !
இந்தியா பல மொழிகள், பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடு மட்டும் அல்ல! பல இனங்களைக் கொண்ட நாடும் கூட! இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்! வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிகளில் இந்தி சொல்லித் தரப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு வந்தது/வருகிறது. ஏன்? அவர்களுக்கு அது அந்நியமொழி! அவர்களின் இனமே வேறு! அவர்கள் மங்கோலிய இன மக்கள்! நீக்ராய்டு இனமல்ல! இனத்தால், மொழியால், நடை-முறையால், கலாச்சாரத்தால் தனித்துவமானவர்கள்.
இந்தியன் எனும் ஒட்டு வேலைக்கு அவர்கள் ஒத்துவரவே மாட்டார்கள்! இதேபோலத்தான் திராவிடர்களும்.
ஆளும் மாநிலங்களில் தேயும் பாஜக; தேர்தல்கள் சொல்லும் உண்மை – சரத் பிரதான்
இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், சர்வதேச நாடுகளை அவமதித்தும், அகண்ட பாரதம் அமைப்போம் என்று பேசும் சங்கிகளை, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.