தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலக கட்டிடத்தை தாஜ்மகால் போல காட்டியுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய தலைமைச் செயலக குவிமாடங்களை இடிப்போம் என்று பாஜக மாநில தலைவர் பிண்டி சஞ்சய் குமார் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.,
தெலுங்கானா மாநிலத்தில் 1 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய தலைமைச் செயலகத்தை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வரும் 17-ம் தேதி திறந்து வைக்கிறார்.
இதனிடையே, புதிய தலைமைச் செயலக கட்டிடத்தின் வடிவமைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய கட்டிட கலையை வெளிப்படுத்தும் வகையில் புதிய தலைமைச் செயலகத்தின் மேல்தளத்தில் குவிமாடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதேவேளை, ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஓவைசி புதிய தலைமைச் செயலக கட்டிடம் தாஜ்மஹால் போன்று உள்ளதாக பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய தலைமைச் செயலக குவிமாவடங்களை இடிப்போம் என்று தெலுங்கானா பாஜக மாநில தலைவர் பிண்டி சஞ்சய் குமார் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ரூ.1500 கோடி செலவில் தெலுங்கானா தலைமைச் செயலகத்தை தாஜ்மஹால் போல் கட்டியுள்ளார். தெலுங்கானாவில் பாஜக ஆட்சியமைத்த உடன் தலைமைச் செயலகத்தின் குவிமாடங்கள் நிச்சயம் இடிக்கப்படும். தெலுங்கானா மற்றும் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தலைமைச் செயலகத்தை மாற்றியமைப்போம் என்றார்.
தலைமைச் செயலகம் தாஜ்மஹால் போல் உள்ளது என்று அசாதுதீன் ஓவைசி பாராட்டியதை விமர்சித்துள்ள சஞ்சய் குமார், சந்திரசேகர ராவ் ஓவைசியை திருப்திப்படுத்த முயல்கிறார். உண்மையில் தாஜ்மஹால் ஒரு சமாதி’ என்று அவர் கூறியுள்ளார்.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.