உத்தரப் பிரதேச வாக்காளர்களை மிரட்டியதாக தெலுங்கானா மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தாக்கூர் ராஜா சிங் மீது ஹைதராபாத் மங்கல்ஹாட் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அண்மையில், உத்தரப் பிரதேச வாக்காளர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தாக்கூர் ராஜா சிங் பேசிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலானது.
அக்காணொளியில், “யோகி ஆதித்யநாத்ஜி ஏற்கனவே ஆயிரக்கணக்கான புல்டோசர்கள் மற்றும் ஜேசிபிகளை ஒன்று திரட்டி விட்டார். அவை உத்தரப் பிரதேசத்தை நோக்கி வந்துக்கொண்டிருக்கின்றன. ஜேசிபிகளும் புல்டோசர்களும் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும் என்று நான் நம்புகிறேன். யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக வாக்களித்தால், நீங்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று தாக்கூர் ராஜா சிங் கூறியுள்ளார்.
உ.பி., தேர்தல் – வகுப்புவாதத்தை உருவாக்குவதாக பாஜக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு
இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய நோட்டீசுக்கு தாக்கூர் ராஜா சிங் பதிலளிக்காததால், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் கீழ் தாக்கூர் ராஜா சிங் மீது புகார் அளிக்க தெலுங்கானா தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, தெலுங்கானா தலைமை தேர்தல் அதிகாரி டாக்டர் புத்தபிரகாஷ் ஜோதி, காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், மங்கல்ஹாட் காவல் நிலையத்தில் தாக்கூர் ராஜா சிங் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரை தொடர்பாக பிப்ரவரி 19 ஆம் தேதி மாலை 6 மணி தொடங்கி, 72 மணி நேரத்திற்கு பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் மற்றும் ஊடகங்களில் பேசுவதற்கு தாக்கூர் ராஜா சிங்கிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
Source: The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.