குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு கண்டனத்துக்குரியது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்த விடுதலைப் போராட்ட ஈகியரில் முதன்மையானவர்கள் தமிழர்கள்.
குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு வேறெந்த மாநிலங்களின் பங்கைக் காட்டிலும் அதிகமானதாகவே உள்ளது. சிவகங்கைச் சீமையில் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் கொடி உயர்த்தியதும், தமிழகத்தில் சுதந்திர வேட்கையை வளர்த்தது.
தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மாமனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படும் வ.உ.சி, அவருக்கு, வெள்ளையர்கள் அளித்த சிறை தண்டனை மிகக் கொடுமையானது. முக்கியமாக, தமிழ்நாடு வீரத்திற்கும், தியாகத்திற்கும் முன்னோடி என்பதை சுதந்திர போராட்டத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
இச்சூழலில், டெல்லியில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு நாள் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வகையில், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்தி, தமிழ்நாடு அரசு சார்பில் காண்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசு, கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிகிறது என்றும் வ.உ.சி, வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் ஆகிய தலைவர்களை தெரியாது எனவும் ஆணவத்துடன் பதிலளித்துள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது தமிழ்நாட்டை அவமதிக்கும் செயலாகும்.
எனவே, தமிழின விரோதப் போக்கை கைவிட்டு, குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தியை, இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான .தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.