வானொலி, தொலைக்காட்சிகளில் சமஸ்கிருத செய்தி அறிக்கை வாசிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் செத்துப்போன மொழிக்குச் செய்தி அறிக்கை எதற்கு என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்துத் தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கவேண்டும் எனவும், வாராவாரம் சனிக்கிழமை 15 நிமிடங்களை வாராந்திரச் செய்தித்தொகுப்பிற்கு ஒதுக்கவேண்டுமெனவும் மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, இன்று (நவம்பர் 30) வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக இந்தியைத் திணித்து வருகின்ற பாஜக மோடி அரசு, அடுத்தகட்டமாக இறந்துபோன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளைத் தொடங்கி இருக்கின்றது.” என்று விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் 25 ஆயிரம் பேர் கூடப் பேசாத ஒரு மொழிக்கு அனைத்து மாநில மொழி வானொலிகள், தொலைக்காட்சிகளிலும் 15 நிமிடங்கள் செய்தி அறிக்கை வாசிக்க வேண்டும் என்ற கட்டளையை மோடி அரசு பிறப்பித்து இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மோடி பிரதமரானது முதல் ‘மான் கி பாத்’ என்ற பெயரில் முழுக்க இந்தியில் உரை ஆற்றுகின்றார் என்றும் கரோனாவுக்குப் பின்பு அண்மைக்காலமாக அவர் கலந்துகொண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் வானொலியிலும் நேரலையில் ஒலிபரப்பு செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற, அனைத்து மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையை முழுமையாக இந்தியில் நேரலையில் ஒலிபரப்பினார்கள். டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் சிலையைத் திறந்து வைத்த விழாவில் பேசப்பட்ட உரைகள் முழுமையாக இந்தியில் நேரலையில் வானொலியில் ஒலிபரப்பப்பட்டன.” என்று சில நிகழ்ச்சிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.
மீண்டும் இந்தி திணிப்பா? – மத்திய உள்துறைக்கு எதிராக சு.வெங்கடேசன் பொதுநல வழக்கு
தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வந்த முதன்மையான நேரங்களில் இந்தி நிகழ்ச்சிகளைக் கட்டாயமாகத் திணித்ததுடன், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயல்வதற்கு, மதிமுகவின் சார்பில் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், வானொலி, தொலைக்காட்சிகளில் சமஸ்கிருத செய்தி அறிக்கை வாசிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பொதிகை தொலைக்காட்சியில் நாள்தோறும் 15 நிமிடம் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், “கேட்க ஐந்து ஆள் இல்லை, ஊத எதற்கு ஆறு முழ சங்கு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதிகை தொலைகாட்சியில் நாள்தோறும் 15 நிமிடம் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும்.
கேட்க ஐந்து ஆள் இல்லை
ஊத எதற்கு ஆறு முழ சங்கு?@DDPodhigaiTV pic.twitter.com/T8dTB0qwRI— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 30, 2020
இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் அறிக்கை (தமுஎகச) வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய செம்மொழிகளின் வளர்ச்சிக்குக் கடந்த மூன்றாண்டுகளில் வெறும் 29 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு சமஸ்கிருதத்தை வளர்க்க 643.84 கோடி ரூபாயை – அதாவது 22 மடங்கு கூடுதல் தொகையை ஒதுக்கியுள்ளது.” என்று சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ”தேசிய கல்விக்கொள்கையில் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்தி அந்த மொழியையும் அதனூடாக ஆரிய மேன்மை, வேதவழிப்பட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றைக் குழந்தைகளிடம் திணித்து அவர்களது மனங்களைத் தகவமைக்கும் முயற்சி குறித்த கண்டனங்களைப் பொருட்படுத்தாத இவ்வரசு, இப்போது நேரடியாக வீடுகளுக்குள் தொலைக்காட்சி செய்தியறிக்கை வழியாக சமஸ்கிருதத்தை திணிக்க முனைகிறது.” என்று விமர்சித்துள்ளது.
தமிழக அரசும் இவ்விசயத்தில் ஒன்றிய அரசுக்கெதிரான தனது கண்டனத்தைப் பதிவு செய்வதுடன் சமஸ்கிருதத் திணிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமுஎகச வலியுறுத்தியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.