Aran Sei

தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்கிறது பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு

Credits The News Minute

தமிழக பாஜக நவம்பர் 6-ம் தேதி முதல் நடத்த திட்டமிட்டுள்ள வேல் யாத்திரை​  சட்ட ஒழுங்கை பாதிக்கலாம் என்று கருதுவதாகவும், அதனால் வேல் யாத்திரைக்குதடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாஜக சார்பில்   நவம்​பர் – 06 முதல் தொடங்கி நடத்தப்படவுள்ள ‘வேல் யாத்திரை’ தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில்  திட்டமிடப்பட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. எனவே, இதற்குத் தமிழக அரசு அனுமதியளிக்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகளை பாஜகவும் அதன் ஆதரவு அமைப்புகளும் மேற்கொண்டுள்ளன. பாஜக ஆதரவாளர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, திருவள்ளுவர் முதலானோர் உருவச் சிலைகளுக்குக் காவிச் சாயம் பூசியும், காவி ஆடையைப் போர்த்தியும் அவமரியாதை செய்து சமூக பதற்றத்தை ஏற்படுத்தினர்.

சிலர் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டு பிற சமயத்தினர் தாக்கியதாகப் பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தனர்.  இப்போது வேல் யாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் எனத் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

கடந்த ஜனவரி மாதத்தில் திருச்சியில் விஜய் ரகு என்ற பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னால் முஸ்லிம் அமைப்புகள் இருப்பதாக எச்.ராஜா , முரளிதர ராவ் உள்ளிட்ட பாஜக உயர்மட்ட நிர்வாகிகளே வெளிப்படையாகக் குற்றம்சாட்டினர். ஆனால் மிட்டாய் பாபு என்பவரும் அவரது குழுவினரும்தான் அந்தக் கொலையைச் செய்தார்கள் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது என்றும் காவல்துறையால்  கண்டறியப்பட்டது.

கடந்த மே மாதத்தில் கோயம்புத்தூரில் கவுண்டம்பாளையம் என்னும் இடத்தில் உள்ள வேணு கோபால கிருஷ்ணசாமி கோவில் முன்பு பன்றி இறைச்சியை யாரோ வீசி விட்டனர். அந்த சம்பவத்தை வைத்து அங்கே ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு முயற்சி செய்யப்பட்டது. ஆனால் பன்றி இறைச்சியை வீசியவர் ஹரி என்றும் அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான் என்றும் சிசிடிவி காட்சிகள் மூலமாகக் காவல்துறை கண்டறிந்து அவரைக் கைது செய்தது.

கடந்த செப்டம்பர் 15ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரங்கநாதன் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதைவைத்து மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சி செய்தனர். ஆனால் அந்தக் கொலைக்கு அரசியல் காரணம் எதுவுமில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த  செப்டம்பர் 13ம் தேதி கோயம்புத்தூர் ஆவாரம்பாளையம் பிஜு என்பவர் கொலை செய்யப்பட்டார். அவர் இந்து முன்னணி ஆதரவாளர் என்பதால் அவரை வேறு மதத்தவர்கள் கொலை செய்துவிட்டனர் என்று பிரச்சனை கிளப்பினார்கள். ஆனால் அந்த கொலைக்கு முன் விரோதமே காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ராமநாதபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் அருண்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதற்கும் மற்ற மதத்தினரைக் குற்றம்சாட்டி பாஜக மற்றும் அதன் ஆதரவு இயக்கங்கள் பிரச்சினை உண்டாக்கினார்கள். போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அருண்குமார் இதற்குப் பின்னால் மதரீதியான காரணம் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

அதனால் அம்பலப்பட்டுப்போன பாஜகவினர் ஆளுங்கட்சியிடம் தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறை கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்ய வைத்தனர்.

தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த ஏழெட்டு மாதங்களில் பாஜக செய்த சில முயற்சிகளை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளோம். காவல்துறையிடம் இதைவிட நீண்ட பட்டியல் இருக்குமென நம்புகிறோம்.

அரசியல் ஆதாயத்திற்காக மக்களைப் பிளவுபடுத்தி மோதலை உருவாக்கும் பாஜகவின் இந்த சதித் திட்டத்துக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது. உடனடியாக வேல் யாத்திரையைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

​​​​​இவ்வாறு திருமாவளவன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்கிறது பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்