இந்திய வங்கி, பஞ்சாப் வங்கி, மகாராஷ்டிர வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகளில் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களின் தேர்வுக்கான அறிவிக்கையை வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டது.
அந்த அறிவிக்கையில், பட்டியல் சாதியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடு குறைக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது எஸ்சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 15 சதவீதத்திலிருந்து 13% சதவீதமாகவும், எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 7.5 சதவீதத்திலிருந்து 6% சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் 27 சதவீதமாக இருந்த இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடு 21 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 142 பணியிடங்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டிலிருந்து பிடுங்கப்பட்டுப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘சமூகநீதி கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வங்கி அதிகாரிகள் தேர்வை ரத்து செய்க’ என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், ”பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும் எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும் சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாறாக இந்த இட ஒதுக்கீடுகளின் அளவைக் குறைத்து முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்து வங்கிப் பணியாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, இந்தத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசை வலியுறுத்தினார்.
FC-க்கான இடஒதுக்கீடு்:
SC,ST & OBC பிரிவினருக்குப் பாதிப்பு!
சமூகநீதி கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வங்கி அதிகாரிகள் தேர்வை ரத்து செய்க!
எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டு உரிமையில் பாஜக அரசு கைவைத்தால் நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டங்களை சந்திக்க நேரிடும்#Reservation #EWS pic.twitter.com/dORH6xecFZ— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 14, 2020
“முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாஜக அரசு கொண்டு வந்தபோது இதனால் ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சொன்னது. நடைமுறையில் உள்ள 50% இட ஒதுக்கீட்டுக்குக் கூடுதலாகவே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தது. அதற்கு மாறாக இப்போது வங்கி அதிகாரிகளுக்கான தேர்வில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவைக் குறைத்து முன்னேறிய சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ” என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், “எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறித்து சட்டவிரோதமாகத் தேர்வு நடத்தியவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். இந்தத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டுப் புதிதாக தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களுடைய இட ஒதுக்கீட்டு உரிமையில் பாஜக அரசு கைவைத்தால் நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டங்களைச் சந்திக்க நேரிடும்” என்றும் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை, தொல்.திருமாவளவன் இத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்டத் தலைநகரங்களில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ”எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மக்களின் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு உரிமையை வெளிப்படையாக அறிவித்துப் பறிக்கத் துணிந்திருக்கும் மோடி அரசைக் கண்டித்துப் போராட வேண்டியது சமூகநீதிக் கொள்கையில் அக்கறை கொண்ட அனைவருக்குமான கடமையாகும். இந்நேரத்தில் ஒருங்கிணைந்து இட ஒதுக்கீட்டு உரிமையைக் காக்க தவறினால், இத்தனை காலமாகப் போராடிப் பெற்ற சமூகநீதியை முற்றாகப் பறிக்க சனாதன சக்திகள் தயங்க மாட்டார்கள்” என்று சுட்டிக்காட்டுகிறார்.
#எஸ்சி/#எஸ்டி, #ஓபிசி இட ஒதுக்கீட்டைப் பறிக்காதே!
வங்கி அதிகாரிகளுக்கான தேர்வை ரத்து செய்!
இத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, எதிர்வரும் அக்டோபர் 16ம் தேதி காலை11.00 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.#Reservation pic.twitter.com/3wrBKmYXJn— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 14, 2020
“வங்கித்துறையில் நடந்திருக்கும் இந்த மோசடியை விசிக வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, எதிர்வரும் அக்டோபர் 16-ம் தேதி காலை 11.00 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இட ஒதுக்கீட்டு உரிமைப் பாதுகாப்பதற்கான இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பிற ஜனநாயக சக்திகளும் ஆங்காங்கே பங்கேற்க வேண்டும்.” என்று அழைப்பு விடுத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.