Aran Sei

`பட்டியல், பழங்குடியர் கல்வி உரிமையை பாஜக நசுக்கிறது’ – வைகோ கண்டனம்

பட்டியல், பழங்குடி இன மாணவர்களின் கல்வி உதவித் தொகையை மத்திய, மாநில அரசுகள் நிறுத்த முயற்சிப்பதாக மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (டிசம்பர் 1) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்கு மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக வஞ்சகம் இழைத்து வருகிறது. அதன் ஒரு கூறாகப் பட்டியல், பழங்குடி இன மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை முற்றாக ஒழித்துக்கட்டும் வகையில் செயல்படுகிறது.” என்று விமர்சித்துள்ளார்.

`தலித்துகளும் ஆதிவாசிகளும் படிக்கக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்’ – ராகுல் காந்தி

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பிளஸ் 2 வகுப்புக்குப் பின்னர் கல்லூரிகளில் சேர்ந்து மேல் படிப்பு தொடர்வதற்காக, அம்பேத்கர் வேண்டுகோளின்படி 1946 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது என்றும் நாடு விடுதலை அடைந்த பின்னர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை என்பது சிறுபான்மை இன மாணவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் நீடிக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ”நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு மத்தியில் பொறுப்பேற்ற பின்னர் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பதற்கு வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வந்தது.” என்று மேற்கோள் காட்டியுள்ளார்.

`தலித் மாணவர்களின் கல்லூரிக் கனவைக் குழிதோண்டி புதைத்தது மோடி அரசு’ – மே 17 இயக்கம்

மத்திய – மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான நிதியைப் பகிர்ந்துகொண்டு வந்த நிலையில், மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததால், தமிழக அரசும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையைக் குறைத்தது என்று விளக்கியுள்ளார்.

இத்திட்டத்திற்காக மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய தொகை ரூ.6,000 கோடி என்றும் 2019 ஆம் ஆண்டு இத்தொகை பாதியாகக் குறைக்கப்பட்டு, 3,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதால், 14 மாநில அரசுகள் இத்திட்டத்தை அடியோடு நிறுத்திவிட்டன என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் புறக்கணிப்பு – ஆர்டிஐ தகவலில் அம்பலம் – நவநீத கண்ணன்

இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மாணவர்களின் கல்வி உதவித் தொகையை முற்றாக ரத்து செய்வதற்கு மத்திய அரசு முடிவு எடுத்து இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

”இதனால் நாடு முழுவதும் 60 லட்சம் பட்டியல் இன மற்றும் பழங்குடி இன மாணவர்கள் பள்ளிப் படிப்புக்குப் பின்னர், மேல் படிப்புக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்படுவார்கள் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.“ என்று கூறியுள்ளார்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடு குறைப்பு – திருமாவளவன் கடும் கண்டனம்

சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட, பழங்குடி இன மக்களின் குழந்தைகள் கல்வி பெறும் உரிமையை நசுக்குவதற்கு பாஜக அரசு மேற்கொண்டுள்ள முயற்சி கடும் கண்டனத்துக்கு உரியது என்று குறிப்பிட்டு, ”பட்டியல், பழங்குடி இன மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு மத்திய – மாநில அரசுகள் உரிய தொகையை ஒதுக்கீடு செய்து, இத்திட்டம் தொடர்ந்து செயல்பட ஆவன செய்ய வேண்டும்” என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

`பட்டியல், பழங்குடியர் கல்வி உரிமையை பாஜக நசுக்கிறது’ – வைகோ கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்