Aran Sei

இன்றைய மத்திய பா.ஜ.க. ஆட்சி எங்கே செல்கிறது? – கி.வீரமணி கேள்வி

நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தல்; மெஜாரிட்டி என்ற போர்வையில் எதேச்சதிகாரம்; ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற போக்கு இன்றைய மத்திய ஆட்சியில் நீடிப்பதால் ஏற்படும் ஆபத்தை மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, தனது வாழ்க்கை வரலாற்று நூலில் சுட்டிக்காட்டியிருப்பதை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை  விடுத்துள்ளார்.

முன்னாள் (இந்திய) குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஹமீத் அன்சாரி தன்வரலாறு நூல் ஒன்றை ‘‘By Many a Happy Accident: Recollections of a Life’’ (‘‘பலரால் ஏற்பட்ட மகிழ்ச்சிகரமான விபத்து’’ என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது) என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

காசிப்பூர் – அரசின் மிரட்டலுக்கு அஞ்சாத விவசாயிகள், விலகும் போலீஸ்

அந்நூலைச் சுட்டிக்காட்டி, “அவரைப் போன்ற பெரிய பொறுப்பில் இருந்தவர்கள், அவர்களது பதவிக் காலத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களையும், நாட்டின் தற்போதுள்ள போக்கையும்பற்றி எழுதுவது முற்றிலும் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று மட்டுமல்ல; அரசியல் வரலாற்றுக் குறிப்புகளாகவும் கருதப்படவேண்டியவை ஆகும்” என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

‘‘அரசியல் சட்ட விழுமியங்கள் (constitutional values), பன்முகக் கலாச்சாரம், சகோதரத்துவம், அறிவியல் மனப்பாங்கு (Scientific Temper) ஆகியவை தற்போதைய அரசியல் கலாச்சாரத்தில் மறைந்து வருவதாகவே தோன்றுகிறது. அவைகட்கு நேர் எதிரான நம்பிக்கைகளையும், நடைமுறைகளையுமே புகுத்தி வரும் போக்கே பெரிதும் காணப்படுகிறது!’’ என்று ஹமீத் அன்சாரி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

’நீங்கள் ஆர்எஸ்எஸ்காரரா? ஆளுநராகவோ துணைவேந்தராகவோ எந்தப் பதவிக்கும் போகலாம்.’ – ராகுல் காந்தி விமர்சனம்

மேலும், ‘‘நாட்டில் சட்டத்தின் ஆட்சி மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறது; அரசின் பொது நிறுவனங்கள் வலுவிழந்து, எதேச்சதிகார கண்மூடிய மக்களின் கூச்சலுக்கு உட்படுவதாகத் தெரிகிறது. ”‘மெஜாரிட்டேரியனிசம், தேசியம், எதேச்சதிகாரம்’ ஆகியவற்றிற்குத் துணை போகும் நிலை உருவாகியுள்ளது. 2019 தேர்தலுக்குப் பின் லட்சிய ரீதியாக ஒரே மொழி, ஒரே மக்கள், ஒரே மதம், ஒற்றை நிலமும், கலாச்சாரமும்தான் என்ற உணர்வு பரப்பிடும் நிலையே உள்ளது!’’.என்று அன்சாரி தெரிவித்துள்ளார்.

அன்சாரி எழுதியுள்ளதை படிக்கும்போது அதிர்ச்சி தருவதாகவே உள்ளது என்று வீரமணி கூறியுள்ளார்.

மேலும் அன்சாரியின் நூலில் ‘‘ஒரு நாள் பிரதமர் மோடி எனது அலுவலகத்திற்குத் திடீரென்று வந்தார். (முன்கூட்டி திட்டமிடப்படாமலேயே) நான் அதிர்ந்துபோனேன். உரிய மரியாதையுடன்  அவரை வரவேற்று அமர வைத்தேன்.

உடனே பிரதமர் மோடி, ‘‘உங்களுக்கு நிறைய உயர் பொறுப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன; ஆனால், நீங்கள் எங்களுக்கு உதவ மாட்டேன் என்று உள்ளீர்களே’’ என்றார்.

அதற்கு நான், ‘‘எனது மாநிலங்களவைப் பணி என்பது மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுவை’’ என்றேன்.

‘‘நீங்கள் ஏன் பல மசோதாக்களை எதிர்த்துக் கூச்சல் இருந்தாலும், நிறைவேற்றாமல் தள்ளிப் போடுகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

விவசாய சட்டங்களை எதிர்த்து மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் – எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அதற்கு நான், ‘‘எனது முடிவுகளை அவையின் கட்சித் தலைவர்கள் அனைவரும் வரவேற்கின்றனர். பெருங்கூச்சல் மத்தியிலும், மற்ற முறைகளில் எப்படி மசோதாக்களை நிறைவேற்ற இயலும்? பொதுவான சட்ட நடைமுறை, அவையின் நடைமுறைகளையே நான் கடைப்பிடித்து வருகிறேன்’’ என்று பதில் அளித்தேன். ‘‘தொடர்ந்து அப்படி நடப்பது எனது கடமை’’ என்று தெளிவுபடுத்தினேன்.

அடுத்து மோடி அவர்கள், ‘‘ராஜ்ய சபை டி.வி., அரசுக்கு ஆதரவாக இல்லையே’’, என்றார்.

அதற்கு நான், ‘‘அந்த டி.வி. சேனலின் மேலாண்மையில் மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் எனக்குப் பங்கிருந்தாலும்கூட, அதன் ஆசிரியக் கருத்துரைகளில் நான் எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்க முடியாது.’’ (I  had no control over the editorial content) என்று கூறினேன்’’ என்ற அன்சாரியின் நூலில் உள்ளவற்றை மேற்கோளிட்ட வீரமணி, இதுதான் ஆட்சியின் வெளிப்படைத் தன்மையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாபர் மசூதிக்கு கீழே, கோவிலைக் கண்டுபிடித்தவருக்கு பத்ம விபூஷன் – யார் இந்த பி.பி.லால்?

தற்போதைய பாஜக ஆட்சியில் வெளிப்படையாகவே அரசியல் சட்ட விழுமியங்கள் காற்றில் பறப்பதை எவரும் நன்கு புரிந்துகொள்ள இயலும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்றைய மத்திய பா.ஜ.க. ஆட்சி எங்கே செல்கிறது? – கி.வீரமணி கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்