Aran Sei

புதிய அணை கட்டும் கேரளா : போராட்டத்தை அறிவித்த தமிழக விவசாயிகள்

முல்லைப் பெரியாறு அணை குறித்துக் கேரளாவில் செய்துவரும் பொய்ப் பிரச்சாரத்திற்கு எதிராக வரும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்போவதாக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ் ஆர் தேவர் கூறியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டம் வரையில் இந்த ஓட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

தேனி, மதுரை உட்பட 5 தென் மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை கேரள எல்லைக்குள் அமைந்திருக்கிறது என்றாலும், இதன் நிர்வாகம் தமிழகப் பொதுப்பணித் துறையினரிடமே உள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு அருகிலேயே, புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

2011ஆம் ஆண்டு, தமிழக அரசின் எதிர்ப்பை மீறி, 663 கோடி செலவில் நான்கு ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கும் வகையில் திட்ட அறிக்கையைக் கேரள அரசு தயாரித்தது.

தற்போதுள்ள அணையில் இருந்து 366 மீட்டர் தொலைவில், பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் புதிய அணை கட்ட இடமும் தேர்வு செய்யப்பட்டது. அணை கட்டுவதற்கு முன்னோடியாக 2014 ஆம் ஆண்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியது கேரள அரசு. இதைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்தது.

கேரள அரசின் புதிய அணை கட்டும் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதை அடுத்து, கேரள அரசு புதிய அணை கட்டும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

இந்நிலையில், சமீபத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளைத் தொடங்க கேரள அரசு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, கேரள மாநில நீர்வளத் துறையின் கீழுள்ள நீர்ப்பாசனம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு வாரிய கூடுதல் தலைமைச் செயலாளர் ஜோஸிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ் ஆர் தேவர் இன்று (நவம்பர் 27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, ”முல்லைப் பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டதாகவும், இதற்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என்று, அதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய நீர்வள ஆணையம் மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதியைக் கேரள அரசு பெற்றுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்டமாகத் தற்போது ஆய்வுப் பணிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் புதிய அணை கட்டப்பட்டால் தென் மாவட்டங்களில் உள்ள சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பாதிப்படையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

”கேரள அரசின் அடாவடிச் செயலைக் கண்டித்தும் முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மையை மக்களுக்கு உணர்த்தவும் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற உள்ளது.” என்று அறிவித்துள்ளார்.

மேலும், “முல்லைப் பெரியாற்றின் கடைமடைப் பகுதியான இராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாயில் இருந்து வரும் டிசம்பர் 16-ம் தேதி தொடங்கி தலைமதகுப் பகுதியான லோயர் கேம்பில் உள்ள பென்னி குயிக் மணிமண்டபத்தில் நிறைவடைய உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கேரளாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்குள்ள அரசியல் கட்சிகள் முல்லைப் பெரியாறு அணை குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

”முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக நிலைநிறுத்துவோம் என்றும், அணையின் நீர் வழிப் பாதையில் கேரளாவில் சுமார் 22 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் வாக்குறுதிகளை அளிக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நியாயமான நீரைக்கூட இங்குள்ள ஆட்சியாளர்கள் பெற்றுத் தருவதற்கு ஆர்வம் காட்டவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக அரசு சரியாகச் செயல்படுமேயானால் மாநில உரிமையை நிலைநாட்ட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் கேரளாவிற்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

”இல்லையென்றால் தொடர் ஜோதி ஓட்டத்தைத் தொடர்ந்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவின் புதிய அணை கட்டும் முடிவு குறித்து, எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான முத்து நாகு அவர்களிடம் அரண்செய் பேசிய போது, “கேரளா சொல்லும் இடத்தில் அணை கட்ட முடியாது. அது முழுக்க முழுக்க அடர்வனப் பகுதி. இந்தியாவில் இது போல 18 இடத்தில்தான் இருக்கிறது. அச்சுதானந்தம் தலைமையிலான கேரள அரசு கொடுத்த திட்ட அறிக்கைக்குப் பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி கொடுத்திருக்கிறது. அவ்வளவு தான். எல்லாவிதச் சட்ட அனுமதிகளையும் பெற்று அங்கு அணையைக் கட்டவே முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசுகள் பழங்குடிகளை விரட்டி விட்டு அணைகள் கட்டுவதே, முதலாளிகளுக்கு லாபம் தரும் மின்சார உற்பத்திக்குத்தான். எல்லாவற்றையும் மீறி, அங்கு ஒரு அணை கட்டப்பட்டால், வனத்தில் உள்ள சிறு பெரு உயிரினங்கள் தொடங்கி, அந்த மலைத் தொடருக்கே பெரும் ஆபத்தைதான் ஏற்படுத்தும்.” என்று எச்சரித்துள்ளார்.

புதிய அணை கட்டும் கேரளா : போராட்டத்தை அறிவித்த தமிழக விவசாயிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்