பேரறிவாளனின் விடுதலைக்கு இன்றே ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் இன்று (நவம்பர் 22) வெளியிட்ட அறிக்கையில்,”பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதில் தங்களுக்கு மறுப்பு ஏதுமில்லை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கூறிய பிறகும் பேரறிவாளன் விடுதலையைத் தாமதிப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆளுநர் அவமதிப்பதாகவே பொருள்படும்.” என்று கூறியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை – முடிவுக்கு வந்தது கண்ணாமூச்சி – பின் வாங்கியது சிபிஐ
இனியும் சாக்குபோக்கு சொல்லாமல் இன்றே தமிழக அரசின் கோரிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தியுள்ளார்.
”பேரறிவாளன் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது எம்.டி.எம்.ஏ அறிக்கையை எதிர்பார்த்து ஆளுநர் காத்துக் கொண்டிருப்பதாகவும் அதனால் தான் இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.” என்று நினைவுக்கூர்ந்துள்ளார்.
மகனின் விடுதலை நாளை எண்ணி நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் – அற்புதம் அம்மாள்
பிரமாணப் பத்திரம்
நேற்று (நவம்பர் 21), சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில், எம்டிஎம்ஏ விசாரணைக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விடுதலைக்கு ஒப்புதல் அளிப்பதா இல்லையா என்பதை ஆளுநர்தான் முடிவெடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாக மேற்கோள்காட்டியுள்ளார்.
மேலும், ”எம் டி எம் ஏ விசாரணையின் நிலைகுறித்த விவரத்தைக் கேட்டு ஆளுநர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு எவ்வித வேண்டுகோளும் வரவில்லை; அந்த விவரங்களை எவருக்கும் தெரிவிக்கக்கூடாது என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று சிபிஐ அந்த பிரமாணப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
‘பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’ – தமிழகத்தில் உரக்க ஒலிக்கும் குரல்கள்
ஆளுநரின் தாமதம்
இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் கூறியது உண்மைக்குப் புறம்பான தகவல் என்பது அம்பலமாகியுள்ளது என்றும் அதை வழக்கறிஞர் தாமே தெரிவித்தாரா அல்லது தமிழக அரசு அப்படி தெரிவிக்க சொன்னதா என்பதைத் தமிழக முதல்வர் விளக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
”சிபிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த பிறகும் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கு ஒப்புதல் வழங்க மேதகு ஆளுநர் தாமதித்தால் அவர் செய்வது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும்.” என்று திருமாவளவன் கண்டித்துள்ளார்.
எழுவர் விடுதலையில் ஆளுநரின் கள்ள மௌனம் கண்டனத்திற்குரியது – சீமான் குற்றச்சாட்டு
நாளை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் சூழலில் ஆளுநர் இன்றே இது தொடர்பாக முடிவெடுத்து ஒப்புதலை வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஆளுநரிடம் இதை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.