Aran Sei

‘புதுச்சேரியில் பின்வாசல் வழியாக காலூன்ற முயலும் பாஜக, இது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே’ – திருமாவளவன்

புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து அரசியல் கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கவிழ்ப்பு என்னும் அநாகரீக அரசியலை புதுச்சேரியில் அரங்கேற்றும் பாஜகவின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடத்தை புதுச்சேரி வாக்காளர்கள் புகட்டுவார்கள் என எச்சரிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தொடர்ந்து பதவி விலகும் சட்டமன்ற உறுப்பினர்கள்: ஆட்சியை தக்க வைக்குமா காங்கிரஸ்?

இந்தியா முழுவதும் ஜனநாயக நெறிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து அனைத்து விதமான அநாகரீக வழிகளையும் பின்பற்றி பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்து வருகிறது என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு 10 நாட்கள்கூட இல்லாத நிலையில் புதுச்சேரியிலும் அதே சதிவேலையில் ஈடுபட்டிருக்கிறது என்றும் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கோவா, மேகாலயா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனிப் பெருங்கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றபோதிலும் அங்கெல்லாம் மக்களின் தீர்ப்புக்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியும், மிரட்டியும் தனது ஆட்சியை பாஜக அமைத்திருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடத்தும் பாஜக – கிரண் பேடியை திரும்பப் பெறுக : நாராயணசாமி எச்சரிக்கை

“இது நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கேவலப்படுத்துவதோடு, வாக்களித்த மக்களை அவமதிப்பதுமாகும். இப்போது புதுச்சேரியிலும் அதே விதமாக ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேற்றப்படுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவின் நெருக்குதலால் ஒருவர் பின் ஒருவராக அக்கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். அதன்மூலம் புதுச்சேரி ஆட்சி இப்போது பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அம்மாநில மக்களின் விருப்பத்துக்கு எதிரானதாகும். புதுச்சேரி மக்கள் எதிர்வரும் தேர்தலில் பாஜகவுக்கும் தன்னலத்துடன் ஆட்சியைக் கவிழ்க்க துணைபோயுள்ள ‘கட்சி மாறிகளுக்கும்’ தக்க பாடத்தைப் புகட்டவேண்டும்.” என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா – ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்?

மேலும், “புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து அரசியல் கட்சிகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை தமிழ்நாட்டிலும் சனாதனிகள் விரிவுபடுத்துவார்கள் என்பதையும்; புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே என்பதையும் அறிய முடிகிறது.  அரசியல் கட்சிகள், கொள்கை பிடிப்பு இல்லாத தற்குறிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால், என்ன ஆகும் என்பதை உணர்ந்து இனிவரும் காலங்களில் எச்சரிக்கையோடு நடந்துகொள்ளவேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

மக்களிடம் வாக்கு வாங்கி ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாத பாஜக, இப்படி பின்வாசல் வழியாக புதுச்சேரியில் காலூன்ற முற்படுவதை புதுச்சேரி மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் ஜனநாயக விரோதிகளுக்கு தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தக்க பாடத்தை கற்பிப்பார்கள் என்றும் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

‘புதுச்சேரியில் பின்வாசல் வழியாக காலூன்ற முயலும் பாஜக, இது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே’ – திருமாவளவன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்