கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்காண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் வி.கே.சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து இன்று காலை 10.30 மணியளவில் அதிகாரப்பூர்வமாக விடுதலையாகிறார்.
1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ 66 கோடி சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் குற்றம் உறுதி செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டில் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பின்படி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பதவியை இழந்து சிறையில் அடைக்கப்பட்டார். 2015 மே மாதம் கர்நாடகா உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்ததைத் தொடர்ந்து நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டு, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா – சிறை விடுதலைக்கு முன்பு கொரோனா தொற்று
இந்த வழக்கின் மீதான மேல் முறையீட்டில், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, சிபிஐ நீதிமன்றத்தின் முடிவை உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இளவரசி, சுதாகரன் ஆகியோர் சசிகலாவின் உறவினர்கள்.
2016 டிசம்பரில் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் மீதான வழக்கு காலாவதியாகிப் போயிருந்தது. ஜெயலலிதா இறந்த பிறகு, முதல்வர் பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வத்தை பதவியிலிருந்து விலகச் செய்து, இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் அமர்த்துவதில் சசிகலா முக்கிய பாத்திரம் ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் உள்ள சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு – பெங்களுரு மருத்துவமனையில் அனுமதி
ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டு, எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த பிறகு, சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
இந்த மாதத் தொடக்கத்தில், பரப்பன் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, ஜனவரி 27-ம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட இருப்பதாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் அதிகார\பூர்வ கடிதத்தை வழங்கியிருந்தது.
விடுதலையாகிறார் சசிகலா: அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கிய சிறை நிர்வாகம்
விடுதலையாகிற தினம் அறிவிக்கப்பட்ட சில தினங்களில், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக சசிகலா புகார் தெரிவித்ததை ஒட்டி, அவர் பவ்ரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு கடுமையான சுவாசத் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால், முதலில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என்று சோதனைகள் காட்டின.
அதற்கு அடுத்த நாள் (ஜனவரி 20) அவர் பெங்களூருவின் விக்டோரியா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு மீண்டும் ரேபிட் ஆன்டிஜென் சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்தது.
சசிகலா வருகை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது – முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். சசிகலாவின் உடல்நிலை தொடர்பான அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வந்த விக்டோரியா மருத்துவமனை சசிகலா உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்திருந்ததனர்.
கடந்த ஜனவரி 25 ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இல்லையென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என விக்டோரியா மருத்துவமனை கூறியுள்ளது. சசிகலாவின் உடல்நிலை பிரச்சனை அவருடைய விடுதலையை பாதிக்குமா எனும் விவாதங்களும் சமூக ஊடகங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
‘சசிகலாவை சாக்கடையுடன் ஒப்பிடும் குருமூர்த்தி; அமைதிகாத்து ஆமோதிக்கிறதா அதிமுக?’ – திமுக கேள்வி
இதையடுத்து, சசிகலாவின் உறவினரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளருமான டிடிவி தினகரன் ”நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் சசிகலா சிறையிலிருந்து அதிகாரப்பூர்வமாக விடுதலையாகிறார். கொரோனா தொற்று காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால், அவரது விடுதலை தொடர்பான தேவையான அனைத்து நடைமுறைகளும் முறைப்படி மருத்துவமனையிலேயே நடைபெறுகிறது.
’அதிமுகவில் இருந்துகொண்டு சசிகலாவையும் அமமுகவையும் புகழக்கூடாது’ – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
விடுதலைக்குப் பிறகு சசிகலாவை உறவினர்கள் சந்தித்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதா அல்லது வேறு மருத்துவமனைக்கு மாறலாமா என்பது குறித்து ஆலோசிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது, சசிகலா வெளியே வந்தாலும், அதிமுகவுடன் இணைய 100 விழுக்காடு வாய்ப்பு இல்லை என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினாலும், அதிமுகவின் பல அமைச்சர்களும் தொண்டர்களும் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.