உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமலேயே 2020-21 கல்வியாண்டிற்குச் சேர்க்கைகள் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் சுகாதார சேவைகள் இயக்குநகரத்தை அறிவுறுத்தியிருப்பதாக லைவ் லா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
2020-21 கல்வியாண்டின் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளின் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் எனக் கேரள உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஆணைகளுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு 2020 – 21 கல்வி ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உயர்சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில், கிராமங்களிலும் ஊரகங்களிலும் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு வந்தது. பிறகு, 2000-ல் இந்திய மருத்துவ கவுன்சில் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதற்கு எதிராக நடத்தப்பட்ட வழக்குகளில், தமிழக அரசு 50% இடஒதுக்கீடு அளிக்க முடியும் என ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அக்டோபர் 7 அன்று, கேரள உயர் நீதிமன்றம், முதுகலை மற்றும் சேவை ஒதுக்கீடு சட்டம், 2008-ன் கீழ், உயர் சிறப்பு முதுநிலை படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 40% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம், மாநில அரசுகள் ஒதுக்கீடு வழங்க முடியும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கேரள நீதிமன்றம் மேற்கோள் காட்டியிருந்தது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட ஆணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தனியார் மருத்துவர்கள் மேல் முறையீடு செய்தனர். மத்திய அரசும் ஒதுக்கீட்டிற்கு எதிராகவே இருந்தது.
நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தது. தமிழக அரசு தரப்பிலும், தனியார் மருத்துவர்கள் தரப்பிலும் வைக்கப்பட்ட வாதங்களைக் கேட்ட பிறகு, 2020-21 கல்வியாண்டிற்கு மட்டும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் இட ஒதுக்கீடு இல்லாமல் சேர்க்கை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், உச்சநீதிமன்றம் தமிழக அரசு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் எனத் தீர்ப்பளித்த போது, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அதை வரவேற்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின், “இது பாஜகவினருக்குப் பாடமாக இருக்கும். ஏழை எளியோர்க்கு மருத்துவ சேவை செய்வதை ஊக்குவிக்க கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டை அநாவசியமாக இந்திய மருத்துவ கவுன்சில் குறுக்கிட்டுத் தடுத்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அரசு மருத்துவர்களுக்கு மட்டுமல்ல கிராமப்புற மக்களையும் பாதுகாக்கும். பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கின்றது. அதன் அங்கமாகவே இடஒதுக்கீட்டையும் பறிக்கப் பார்க்கின்றனர்” என்று கூறியிருந்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.