நிவர் புயலின் மையம் தரைப்பகுதிக்கு நகர்ந்து விட்டது என்றும் மிகத் தீவிரமான சூறாவளி புயல், தீவிர சூறாவளி புயல் என்ற நிலைக்குப் பலவீனமாகியுள்ளது என்றும் தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.
வட தமிழகத்தின் கரையோரப் பகுதிகளைப் பலத்த காற்றும் மழையும் தாக்கி வருகின்றன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலால் ஏற்படும் மாற்றங்கள், புயல்களின் தீவிரத்தை அதிகப்படுத்துகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நிவர் புயல் புதுச்சேரிக்கு அருகில் இரவு 11.30 மணிக்கும் அதிகாலை 2.30 மணிக்கும் இடையே கரையைக் கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ட்வீட் செய்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னைக்கு தெற்கே 115 கிலோ மீட்டர் தூரத்திலும் புயல் கரையை எட்டியது. புயலின் மையம் மரக்காணம் அருகில் கரையைத் தாக்கியது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.
புதுவையில் கரையைக் கடக்கும் நிவர் – டெல்டா மாவட்டங்களில் கனமழை அபாயம்
கன மழையும், மணிக்கு 120 முதல் 130 கிலோமீட்டர் வேகத்திலான காற்றும் புதுச்சேரி, கடலூர் கடலோரப் பகுதிகளைத் தாக்கின. காற்று வேகம் அதிகபட்சமாக மணிக்கு 145 கிலோமீட்டரை எட்டியது. சென்னையிலும் கடும் மழை பெய்தது, பலத்த காற்று வீசியது.
சென்னையின் பல பகுதிகளிலும், பிற மாவட்டங்களின் பகுதிகளிலும் மின்சாரம் தடைபட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
“சுழலும் காற்றின் இறுதிப் பகுதி சென்னையைக் கடக்கிறது. புயலின் மையம் உள்வந்த பிறகு, மூன்று நாட்களாக மழையாலும் காற்றாலும் சென்னையைத் தாக்கி வரும் இந்தச் சுழலும் பகுதிகள் நின்று போகும்” என்று தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார்.
Last spinning band falls over chennai. Once the centre crosses in, these spinning bands which has which has pounded chennai for 3 days will stop.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 25, 2020
“புயல் கரையை எட்டிய பிறகும், இந்தப் புயல் அமைப்பு தனது சுழல் காற்று தீவிரத்தை 6 மணி வரையில் தக்கவைத்துக்கொள்ளும். பின்னர் படிப்படியாகப் பலவீனமாகும்” என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. “ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், சித்தூர், கர்நூல், பிரகாசம், கடப்பா மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறந்து விடுவது 9000 கன அடியிலிருந்து 7000 கன அடி நீராகக் குறைக்கப்பட்டுள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று காலை ஏரியின் நீர்மட்டம் 22 அடியைத் தொடுவதை வேகமாக எட்டியதாலும் நீரின் மொத்த அளவு 3 மில்லியன் கன அடியைத் தாண்டியதாலும் நீர் திறக்கப்பட்டது.
முதலில் விநாடிக்கு 1000 கன அடி நீரும், பின்னர் 3,000 கன அடி நீரும், மாலை 6 மணி அளவில் சுமார் 5,000 கன அடி நீரும், இரவு 10 மணிக்கு 9,000 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது.
காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. எனவே, ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7,000 அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கனமழையால் சென்னையின் பல பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும், தாழ்வான பகுதிகளிலிருந்தும், பாதுகாப்பற்ற கட்டடங்களில் இருந்தும் 28,161 குழந்தைகள் உட்பட 1.38 லட்சம் மக்கள் 1,694 நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். “4,733 நிவாரண முகாம்களில் 13 லட்சம் மக்களை தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக” வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
கஜா புயலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் – அழிவிலிருந்து மீளாத விவசாயிகள்
பருவநிலை மாற்றத்தினால் கடல்கள் சூடாவது, மேலும் தீவிரமான புயல்களையும், அபாயகரமான அலை எழுச்சிகளையும் உருவாக்குகிறது என்று சுயேச்சையான விஞ்ஞானிகள் கூறுவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.
“பசிபிக் பெருங்கடலில் லா நினா என்ற காலநிலை அமைப்பு உள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்தக் குளிர்ச்சியான நிலைமை, வங்காள விரிகுடாவில் சூறாவளி புயல் உருவாவதற்குச் சாதகமான நிலைமைகளை ஏற்படுத்துகின்றன.” என்கிறார் இந்திய வெப்பமண்டல வானிலை நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி, ரோக்சி மேத்யூ கோல்.
“நிவர் புயல் பல வகைகளில் நவம்பர் 2017-ல் தாக்கிய ஒக்கிப் புயலுக்கு நிகரானது. ஒக்கிப் புயல் மிதமானபுயல் என்ற நிலையிலிருந்து 24 மணி நேரத்தில் மிகத் தீவிரமான புயலாக வீரியமடைந்தது. அதனால் இந்தியாவிலும் இலங்கையிலும் 844 பேர் இறந்தனர்.
வழக்கத்துக்கு மாறாகச் சூடாக இருந்த கடல் வெப்பநிலைகள், ஒரு தாழ்வழுத்தத்தை 9 மணி நேரத்தில் ஒரு புயலாகவும், 24 மணி நேரத்தில் மிகத் தீவிரப் புயலாகவும் மாற்றின என்று நாங்கள் கண்டறிந்தோம்.” என்கிறார் ரோக்சி மேத்யூ.
‘நிவார்’ புயல் – இது பருவநிலை மாற்றத்தின் பேராபத்து – அருண்குமார் ஐயப்பன்
“வங்காள விரிகுடாவின் வழக்கமான உயர்வெப்பநிலைச் சூழலுக்கு மேல், இப்போதைய புவி வெப்பமயமாதல் காரணமாக, வெப்பநிலை வேறுபாடு 0.5 முதல் 1 டிகிரியாகவும் சில இடங்களில் 1.2 டிகிரியாகவும் உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.