முறைகேடுகளின் மூலம் சம்பாதித்த சொத்துகள் மட்டுமல்லாமல் முழுச் சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் செய்து வழக்குப் பதிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பல்லூர்ப் பகுதியைச் சேர்ந்த ராஜா,
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், அரசின் சார்பில் எனக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவின் இடத்தில் இருந்து என்னை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
`ஆசியாவிலேயே அதிகம் லஞ்சம் கொடுக்கப்படும் நாடு இந்தியாதான்’ – ஆய்வு முடிவு
மனுதாரர் அரசு பள்ளியில் ஆசிரியராக இருப்பதாகவும் மனுதாரரின் மகன் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருவதாகவும், அரசு ஊழியர் என்பதை மறைத்து அரசின் இலவசப் பட்டாவைப் பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வருவாய்த் துறைச் செயலர் சமூக நலத்துறைச் செயலர் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஆகியோரை எதிர் மனுதாரராகச் சேர்த்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (நவம்பர் 30) மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன், விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, “மாதம் ஒரு லட்சம் ஊதியம் பெறும் அரசு ஊழியர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை சமூக விரோதச் செயலாக நீதிமன்றம் பார்க்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுபவர்கள் அரசியல்வாதியாக இருந்தாலும், சரி அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி அவர்கள்தான் சமூக விரோதி.” என்று சுட்டிக்காட்டியுள்ளது.
முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட வேண்டும் என்றும் முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துகள் மட்டுமல்லாமல் முழுச் சொத்தையும் பறிமுதல் செய்து உத்தரவிட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படும் என்று நீதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
”அரசு ஊழியர் ஒருவருக்கு ஐந்து பட்டாக்கள் வழங்கிய தாசில்தார் மீது வெறும் பணி இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்தின் கண்துடைப்பு ஆகும். இதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் அந்த தாசில்தாரின் வங்கிக் கணக்கு விவரங்களையும் சொத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.” என்று உத்தரவிட்டுள்ளது.
ரயில் மறிப்பு, கற்கள் வீச்சு – தொடங்கியது பாமக இடஒதுக்கீடு போராட்டம்
அரசிடம் மாதம் ஒரு இலட்சம் சம்பளமாக பெற்றுக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிச்சைக்காரர்கள் என்று அழைப்பதில் தவறு இல்லை என்றும் பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் சாதிக்கலாம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாக உள்ளது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.
”அரசு ஆசிரியர் தன் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறார்கள். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சங்கம் என்ற பெயரில் ஜாதி சார்ந்த சங்கங்களும் மதம் சார்ந்த சங்கங்களும் வைத்துள்ளனர். இதற்கு யார் அனுமதி கொடுத்தது.” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்
மேலும், மனுதாருக்குப் பட்ட வழங்கிய தாசில்தார் குறித்த முழு விவரங்களையும், இவர்கள் மீது காவல்நிலையத்தில் கொடுக்கபட்ட முதல் தகவல் அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 7ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.