Aran Sei

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா – சிறை விடுதலைக்கு முன்பு கொரோனா தொற்று

Image Credit : financialexpress.com

மிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் தோழியான வி சசிகலாவுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது நிலைமை நல்லபடியாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சிறையில் உள்ள சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு – பெங்களுரு மருத்துவமனையில் அனுமதி

1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ 66 கோடி சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் குற்றம் உறுதி செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டில் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பின்படி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி என் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பதவியை இழந்து சிறையில் அடைக்கப்பட்டார். 2015 மே மாதம் கர்நாடகா உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்ததைத் தொடர்ந்து நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டு, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

இந்த வழக்கின் மீதான மேல் முறையீட்டில், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, சிபிஐ நீதிமன்றத்தின் முடிவை உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இளவரசி, சுதாகரன் ஆகியோர் சசிகலாவின் உறவினர்கள்.

2016 டிசம்பரில் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் மீதான வழக்கு காலாவதியாகிப் போயிருந்தது. ஜெயலலிதா இறந்த பிறகு, முதல்வர் பதவி ஏற்ற ஓ பன்னீர்செல்வத்தை பதவியிலிருந்து விலகச் செய்து, இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் அமர்த்துவதில் சசிகலா முக்கிய பாத்திரம் ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டு, எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த பிறகு, சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.

Image Credit : thehindubusinessline.com
1995-ம் ஆண்டில் நடைபெற்ற சுதாகரனின் திருமண விழாவில் – சுதாகரன், ஜெயலலிதா, சசிகலா – Image Credit : thehindubusinessline.com

4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை கழித்த பிறகு சசிகலா, வரும் ஜனவரி 27-ம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளார்.

விடுதலையாகிறார் சசிகலா: அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கிய சிறை நிர்வாகம்

இந்நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக சசிகலா புகார் தெரிவித்ததை ஒட்டி, அவர் பவ்ரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு கடுமையான சுவாசத் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால், முதலில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என்று சோதனைகள் காட்டின.

நேற்று காலை அவர் பெங்களூருவின் விக்டோரியா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு மீண்டும் ரேபிட் ஆன்டிஜென் சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

சசிகலா வருகை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது – முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

“அவரை விக்டோரியாக மருத்துவமனை வளாகத்தின் சிறப்பு கொரோனா அவசரநிலை சிகிச்சை பிரிவக்கு மாற்றியுள்ளோம்” என்று பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (BMCRI)-ன் தலைவரும் இயக்குனருமான மருத்துவர் சி.ஆர் ஜெயந்தி தெரிவித்துள்ளார் என்று தி ஹிந்து செய்தி கூறுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா – சிறை விடுதலைக்கு முன்பு கொரோனா தொற்று

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்