`ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது. ஆலையை மூடியது மூடியதுதான்” எனத் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் லண்டனைச் சேர்ந்த வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் எனும் தாமிர உருக்காலையை நடத்தி வந்தது. இந்த ஆலை வெளியிடும் நச்சுக் கழிவுகள் காற்று, தண்ணீர் முதலியவற்றில் கலந்து சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரித் தொடர்ப் போராட்டங்கள் நடைபெற்றன. நூறு நாட்கள் கடந்தும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வந்தது. மே 22, 2018 அன்று போராட்டக்காரர்கள் மீது காவல்துறையும் துணைப் பாதுகாப்புப் படையும் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இந்தத் தாக்குதலில் 13 பேர் பலியாகினர்.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லாது என்று கூறி அந்த ஆலையை நடத்தி வந்த வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஒரு நிபுணர் குழுவை அமைத்து, அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் ஆலையைத் திறக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவுகள் குறித்து விசாரிக்க பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லையெனக் கூறிய உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் முடிவு செய்யும் என உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. “தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வேண்டுமெனத் தமிழக அரசு விதித்த உத்தரவு நீடிக்குமென உத்தரவிட்டது. இது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும்” அறிவித்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கே.விஸ்வநாதன் மற்றும் வைத்தியநாதன் “ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது. ஆலையை மூடியது மூடியதுதான்” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் ”இடைக்கால நிவாரணம் கோரவோ, விதிமுறைகளைக் கடைப்பிடிப்போம் அதற்கு கால அவகாசம் கொடுங்கள் என முடிந்துபோன விசயத்தில் அனுமதி கோர முடியாது, அப்படி அனுமதி கோர ஆலைக்கு எந்த முகாந்திரமும் கிடையாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக வாதிட்டது.
இதனையடுத்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட காரணங்களையும், அவற்றை ஆலை கடைப்பிடித்த விதத்தையும் குறித்து பதில் மனுத்தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரப்பட்டது.
இதனையடுத்து பதில் மனுத்தாக்கல் செய்ய வேதாந்தா நிறுவனத்துக்குக் கால அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கு மீதான விசாரணையை டிசம்பர் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளனர் .
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.