2021-ம் ஆண்டு, தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று பாஜகவும், அதிமுகவும் அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழக பாஜக தலைவர்கள் வரவிருக்கும் தேர்தலில் கணிசமான இடங்களை வெல்வோம் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் ‘வெற்றிவேல் யாத்திரை’ , கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது. அப்போது பேசிய, பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன், “சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும், கனவை நனவாக்கக் கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
‘வெற்றிவேல் யாத்திரை’ நாடு முழுவதும் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது என்று கர்நாடகாவின் துணை முதல்வர் சி.என்.அஸ்வந்த் நாராயண் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு வளர்ச்சியைக் கொண்டுவர பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்றும் அஸ்வந்த் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழக மக்களை இணைக்கத்தான் ‘வெற்றிவேல் யாத்திரை’ நடைபெறுகிறது. இது பாஜகவில் உள்ள இளம் தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. அதே நேரத்தில், இதை எதிர்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
“திமுகவும், ஊழலும் உடன்பிறப்புகள். காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக. திமுக அதன் ஊழல் வரலாற்றை மறந்துவிட்டு, மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அரண்செய்யுடன் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு, “ஊழலின் ஊற்றுக்கண்ணே அதிமுகதான். எந்தத் துறையைத் தொட்டாலும் அதில் ஊழல் உள்ளது. இன்று அரசு அதிகாரிகள் முதற்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்கள் மீதும், இவர்களுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக மாநில தலைவர் முருகனுக்கு மற்றவர்கள் மீது ஊழல் குற்றசாட்டைச் சுமத்துவதற்கான எந்த அருகதையும் இல்லை” என்று கூறினார்.
“முருகன் சார்ந்து இருக்கும் பாஜக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட கட்சியா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.