Aran Sei

திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி – முதல்கட்டமாக 1000 கன அடி நீர் வெளியேற்றம்

credits : indian express

சென்னையில் கனமழை தொடரும் நிலையில் 24 அடி கொள்ளவை கொண்டுள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய கொள்ளளவு 22 அடியை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளுக்கும், அடையாறு ஆற்றை ஒட்டிய பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிகை விடப்பட்டு வருகிறது.

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெற்று, இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

நிவர் புயலால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (நவம்பர் 25)  இரவு முதல் நாளை அதிகாலை வரை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை மிகக் கடுமையான சூறாவளி புயலாக மாறி 130 முதல் 155 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள இது அடுத்த 6 மணிநேரங்களுக்கு மேற்கு-வடமேற்கு திசையிலும் அதன் பின்னர் வடமேற்கு திசையிலும் செல்ல வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

நிவர் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், சென்னை என்னூர் துறைமுகத்தில் 9-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், நாகை மற்றும் காரைக்காலில் 8-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி : பீதியைக் கிளப்பும் ஊடகங்கள்

நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரியில் பாதிப்பு ஏற்பட்டால் உதவுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் அறிவிப்பு  விடுத்துள்ளது. 12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்பக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மீட்பு பணிகளுக்காக சென்னைக்கு ராணுவம் வர இருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள 148 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை தொடரும் நிலையில் 24 அடியை முழு கொள்ளளவாக கொண்டுள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து விநாடிக்கு 4027 கன அடியாக உயர்ந்துள்ளதால் தற்போது கொள்ளளவு 22 அடியை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

`செம்பரம்பாக்கம் குறித்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை’ – தமிழ் நாடு வெதெர்மேன்

இதனால்  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12.00 மணியளவில் முதல்கட்டமாக 1000 கன அடிநீர் திறக்கப்படும் எனவும், நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் எனவும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் நிலையில் சுற்றியுள்ள கிராமங்களான சிறுகளத்தூர், காவலூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையார் ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தத் தண்ணீர் முழுவதும் ஆற்றின் வழியே சென்று கடலில் சேர்ந்து விடும் எனவும் இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரி புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி எவ்வித முன் அறிவிப்புமின்றி திறக்கப்பட்டதுதான் சென்னை பெருவெள்ளத்திற்கு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி – முதல்கட்டமாக 1000 கன அடி நீர் வெளியேற்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்