Aran Sei

பெரியார் மண்ணில் பாஜக திட்டம் பலிக்காது – கி.வீரமணி

பாஜக – அதிமுக கூட்டுச் சேர்ந்தால் நோட்டாவை வேண்டுமானால் தாண்டலாம், பெரியார் மண்ணான தமிழகத்தில் வெல்லாது” என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரு தடுப்பணை திறப்பு விழா மற்றும் பல அடிக்கல் நாட்டு விழாவுக்காகச் சென்னை வந்திருந்தார்.

அவ்விழாவை அரசு விழாவாக நடத்தாமல், அரசியல் கூட்டணி அறிவிப்பு, உறுதி செய்தல், பிரச்சார விழாக்களாக்கி, எதிர்க்கட்சிகளைச் சாடிய ஒரு மரபு மீறிய விழாவாக இருந்ததென்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

அமித் ஷாவின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றி வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அரசு விழாவென்பது மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் விழா, அதில் அரசியல் பேசியது ’அரசியல் பேசுகிறேன்’ என்பதை வெளிப்படையாகவே பிரகடனப்படுத்தியது பாஜக. எந்த அளவுக்கு ஜனநாயக மரபுகளையும், மாண்புகளையும் மதிக்கும் ஓர் அரசியல் கட்சி என்பதை உலகத்தோருக்குப் புரிய வைக்கும் ஒரு நிகழ்ச்சி என்று திராவிட இயக்கத் தலைவர் கி.வீரமணி கருத்துத் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேர்தல் கூட்டனி வியூகத்தின் அடிப்படையில் இது நடந்தாலும், பெரியார் மண்ணான தமிழ்நாட்டின் பல உரிமைகளை மத்திய ஆட்சிக்கு அடகு வைத்து, வாய்மூடி ‘‘பிணைக் கைதி’ போன்ற அரசியலை நடத்தும் அ.தி.மு.க. தலைமையின் போக்கைக் கண்டு, அக்கட்சியில் உள்ள பல முக்கியஸ்தர்களும், தொண்டர்களுமேகூட அதிர்ச்சி அடைந்துள்ளதாக” கூறியுள்ளார்.

” இவர்கள் ‘‘எம்.ஜி.ஆர். ஆட்சி, அம்மா ஆட்சி’’ என்று கூறுவதில் பொருள் இருக்க முடியுமா? காரணம், செல்வி ஜெயலலிதா அவர்களைப் பொறுத்தவரை அவர் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் ‘‘லேடியா? மோடியா?’’ என்று பகிரங்கமாகவே மேடைகளில் முழங்கி, ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு உள்பட பல உரிமைகளை பாஜக அரசிடமே பெற்றவர்“ என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“பாஜக, எவ்வளவு அதிகமான இடங்களை அ.தி.மு.கவிடமிருந்து பெறுகிறதோ – அது , தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவைப் பொறுத்தவரையில் தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணிக்கும் கிடைக்கவிருக்கும் தொடக்க கால உறுதி செய்யப்பட்ட வெற்றி இடங்களாகும்! எனவே, தி.மு.க கூட்டணி, பாஜக.வுக்கு அ.தி.மு.க ஒதுக்கும் இடங்கள்பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவையே இல்லை.” என்றும் வீரமணி தெரிவித்துள்ளார்.

ஊழல், குடும்ப அரசியல் என்று கூறுகிறார்கள் என்று பாஜக கூறுகிறது. ஆனால், 2ஜி வழக்கு உச்சநீதி மன்றத்தின் உலகம் அறிந்தது என்றும் பாஜக தலைவர்கள் மீது ஊழல் இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கியதற்காக வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக இருந்தவர்களே பாஜக காரர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

”சுயமரியாதைத் திருமணச் சட்டம் (பிறகு உயர்நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்ட சட்டம், தாய் மண்ணுக்கு – ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம்” உள்ளிட்ட திமுகவின் சாதனையைக் குறிப்பிட்ட அவர்.

”சொந்தக் கால் இல்லாத ‘மிஸ்டு கால்கள்’ நோட்டாவை வேண்டுமானால் தாண்டலாம். கூட்டுச் சேர்ந்தால், வெற்றி கானல் நீரே,  ஒருபோதும் கனவு நனவாகாது” என்று திராவிட இயக்கத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

 

பெரியார் மண்ணில் பாஜக திட்டம் பலிக்காது – கி.வீரமணி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்