ஆட்டோ தொழிலாளர்கள்மீது அவதூறு பரப்பும் தினமலர் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு ) கண்டனம் தெரிவித்துள்ளது .
இதுதொடர்பாக, அச்சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
7.1.2022 அன்றைய தினமலர் நாளிதழ் ஆட்டோ தொழிலாளர்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தோடு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பதால் தினமலர் எடு அச்செய்தியை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) கேட்டுக் கொள்கிறது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் வி.குமார் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு.
தினமலர் எட்டில் ஆட்டோ தொழிலாளர்கள் பயணிகளை மிரட்டி அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும், 2013ல் நிர்ணயிக்கப்பட்ட மீட்டர் கட்டணத்தில் ஆட்டோக்கள் இயக்கவில்லை எனவும், ஆட்டோவில் வரும் பெண்களை பார்ப்பதற்காகவே, கண்ணாடிகளை ஆட்டோவிற்கு உள்பக்கமாக திருப்பி வைத்திருப்பதாகவும், சீருடை அணிவது இல்லை எனவும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டதோடு, இவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்தச் செய்தி முழுக்க முழுக்க கற்பனை கலந்த செய்தி என்பதை தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சிஐடியு தினமலர் ஏட்டுக்கு சுட்டிக் காட்டுகிறது.
கூடுதல் கட்டணம் வசூலித்தால், புகார் செய்ய ஆட்டோக்களில் புகார் எண்கள் எழுதி வைக்கப்பட்டு தான் ஆட்டோ இயக்கப்படுகிறது. 2013-இல் மீட்டர் கட்டணம் தீர்மானிக்கப்பட்டது. 2013 இல் இருந்த விலைவாசி என்ன? டீசல் பெட்ரோல் கேஸ் விலை என்ன? என்பதை ஒப்பிட்டு பார்த்தால் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
இந்த நிலையில் 2013 கட்டணத்தை வாங்க வேண்டும் என எழுதியிருப்பது பொருத்தமற்றது என்பதை சுட்டிக் காட்டுவதோடு, ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் பலமுறை அதிகாரிகளைச் சந்தித்து இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
அவை பரிசீலிக்க படவே இல்லை என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக் காட்டுகிறோம்.
ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை தங்களின் சொந்த தாயாக, சகோதரியாக, சொந்த மகளாகத் தான் ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளர்களும் பாவித்து, அவர்களை பாதுகாப்போடு நள்ளிரவு நேரத்தில் கூட, வீட்டில் இறக்கி விடுகிற பணியை செய்து வருகிறார்கள் அப்படிப்பட்ட ஆட்டோ தொழிலாளிகள் மீது ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தினமலரின் செய்தி வெளியிட்டுள்ளது மிகுந்த கண்டனத்துக்குரியது.
கொரானா காலத்தில் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழில் ஆட்டோ தொழில் ஆகும்.
இந்த காலத்தில் கூட ஆட்டோ தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் இலவசமாக தங்கள் ஆட்டோக்களை ஆம்புலன்ஸ் போல் மாற்றம் செய்து கொரோனா நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேவை செய்துள்ளனர்.
வருமானம் இல்லாததால் வாங்கிய கடன் கட்ட முடியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்திருக்கிறார்கள்.
இப்படி வறுமையோடு வாழ்ந்தாலும் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிற ஆட்டோ தொழிலாளர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வாகவே தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் கருதுகிறது. தாங்கள் குறிப்பிடுவது போல நூற்றில் ஒரு சதவீத தொழிலாளிகள் இருக்கக்கூடும்.
இது எல்லா துறைக்கும் பொருந்தும். பத்திரிக்கை துறைக்கும் பொருந்தும். ஒரு சதவீதம் பேர் செய்கிற தவறுகளை பொதுமைப் படுத்த முடியாது. தினமலர் ஏட்டின் வந்திருக்கக்கூடிய செய்தியானது ஒரு சதவீதம் பேர் செய்கிற தவறுகளை, ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளிகளையும் அதே கோணத்தில் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். அபத்தமான இந்த செய்தியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மேலும் தினமலர் எழுதிய பொய்ச் செய்தியை ஆதரமாக வைத்துக்கொண்டு நேற்றும் இன்றும் சென்னை போன்ற நகரங்களில் ஆட்டோ தொழிலாளிகள் மீது ஒரு மிகப்பெரிய அடக்குமுறையை போக்குவரத்து காவல்துறை, வட்டார போக்குவரத்து துறை ஏவி உள்ளதாக தெரியவருகிறது. போக்குவரத்து காவல் துறையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தினமலர் செய்தியை ஆதாரமாக வைத்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) கேட்டுக்கொள்கிறது.
தினமலர் பத்திரிக்கையின் அவதூறு செய்திக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இச்செய்தியை ஆதாரமாகக் கொண்டு போக்குவரத்து காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் மீதான தாக்குலை தொடுத்தால், அதனை தடுத்து நிறுத்த தமிழகம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் களத்தில் இறங்கி கண்டன முழக்கம் எழுப்பிடுமாறு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சிஐடியு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.