Aran Sei

மாற்றிப்பேசும் அமைச்சர்கள் – அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?

திங்கட் கிழமை முதல், மூன்று தினங்கள் அனைத்து அமைச்சர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சனிக்கிழமை காலை திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முஸ்லீம் மகளிர் சங்க பயனாளிகள் மேம்பாட்டிற்கான நிதி உதவி வழங்கும் விழா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் நடராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று தினங்களும் அனைத்து அமைச்சர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது “என்னை ஏழாம் தேதி வரை காப்பாற்றுங்கள்” என செய்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதன் பிறகு சில மணி நேரத்தில் வெல்ல மண்டி நடராஜன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

அப்போது பேசிய அவர் “கொரோனா காலத்தில் அரசு பணிகளை கவனிப்பதற்காக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் இருந்து பணிகளை கவனிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதை தான் நான் சொன்னேன்” என்று கூறிய அவர் “ஒரு சில ஊடக நண்பர்கள் நான் சொல்லாததை திரித்து கூறியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் “தலைமை என்ன, யாரை அறிவிக்கிறதோ அதற்குக் கட்டுப்படுவோம்” என கூறினார்.

முன்னதாக, அதிமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் வரும் ஆறாம் தேதி சென்னைக்கு வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரிடம் அரண்செய் இதுகுறித்து கேட்டபோது, தனக்கு தெரிந்து அப்படி எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று கூறினார். அப்படியே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் அதில் எந்த அரசியல் காரணமும் இருக்காது என்று அவர் கூறினார்.

கடந்த திங்கட்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அதிமுகவின் முதல்வேட்பாளர் குறித்து அக்டோபர் 7-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார்.

அந்த கூட்டத்தில், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே காரசாரமான வாதம் நடைபெற்றுள்ளது.

அதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சில அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ளாததும், கட்சியில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை மேற்கொண்டதும் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உருவாகியிருப்பதை உறுதிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

மாற்றிப்பேசும் அமைச்சர்கள் – அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்