Aran Sei

7.5 இட ஒதுக்கீடு : எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது- உயர்நீதி மன்றம்

Image Credits: DC

டந்த 5 ஆண்டுகளாகத் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி, துணை ஆட்சியர், டிஎஸ்பி,  உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. அதற்கு விண்ணப்பித்து, முதல்நிலைத் தேர்வு,  எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட நேர்முகத் தேர்வு பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

“தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. விதிப்படி தமிழ் வழியில் கல்வி பயின்றவருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது. அந்த இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு நான் தகுதியானவராக இருப்பினும் எனக்கு அந்தச் சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது தொடர்பாகத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டபோது எவ்வித தகவலையும் வழங்கவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர்” எனச் சக்தி ராவ் தெரிவித்துள்ளார்.

“ஆகவே தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று அவர் கோரியிருள்ளர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது, தமிழக அரசின் தரப்பில், “தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறைப்படுத்துவது தொடர்பான சட்ட திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்டது. அது ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பில் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை விசாரித்த நீதிபதிகள், “தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டின் கீழ் எதன் அடிப்படையில் நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

7.5 இட ஒதுக்கீடு : எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது- உயர்நீதி மன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்