சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த பரந்தூர் விமான நிலையம் தனியாருக்கு தாரைவார்க்க உதவும் வகையிலான ஒன்றிய அரசின் “Greenfield Airport” கொள்கையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு இத்திட்டத்தை அறிவித்த நாள் முதலாக இத்திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட இருக்கும் 13 கிராமங்களை சார்ந்த மக்கள் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மறுக்கப்படும் ஜனநாயக உரிமைகள் :-
அரசுகள் நிறைவேற்ற முற்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களின் பெயராலேயே நிறைவேற்றப்படுகின்றன, அத்திட்டத்தை நிராகரிக்கவும், அதை எதிர்த்துப் போராடவும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு உரிமையை வழங்கியுள்ளது. ஆனால், பரந்தூர் விவகாரத்தில் அந்த உரிமைகளை மறுத்து வருகிறது தமிழ்நாடு அரசு. இத்திட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற விவசாயச் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செப்டம்பர் 17 அன்று கைது செய்யப்பட்டார். பின்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் பல புதிய காவல் கண்காணிப்பு நிலையங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஊடகவியலாளர்கள் கூட சுதந்திரமாக அந்தப் பகுதியில் செய்தி சேகரிக்க முடியாத நிலை உள்ளது. மகாத்மா காந்தி பிறந்த நாள் அன்று கிராமசபைக் கூட்டத்தில் விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதை அதிகாரிகள் தடுக்க முயன்று தோற்றுப்போயுள்ளனர். மக்கள் தீர்மானத்தை நிறைவேற்றி ஊர்வலமாக சென்று கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் மனுவாக அளித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பஞ்சாயத்து தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிள்ளையார் சிலைகளை கடலில் கரைத்தால் நீர் வாழ் உரினங்களுக்கு ஆபத்து – பூவுலகின் நண்பர்கள்
இதைப்போன்ற திட்டத்தை எப்படி நடைமுறைப் படுத்தவேண்டும்?
2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்” கீழ், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அத்திட்டத்தினால் ஏற்படும் சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment), சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment), ஆகிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் கருத்தறிந்து, அவர்களின் அனுமதி பெற்ற பின்பே நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அதோடு சுற்றுச்சூழல் அனுமதி, மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி ஆகியவற்றையும் பெற வேண்டும். இதனைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டமும், நிலம் கையகப்படுத்தும் சட்டமும் வலியுறுத்திக் கூறுகின்றன. இந்த சட்ட நடவடிக்கைகள் ஜனநாயகப் பூர்வமாக நடைபெற வேண்டும். அந்த வகையில் இந்த திட்டம் குறித்த வெளிப்படையான விவாதம் தேவை. மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்பட வேண்டும். முன்முடிவோடு இந்த திட்டம் அணுகப்பட கூடாது.
முதல் படியாக இந்த “திட்டத்திற்கான விரிவான அறிக்கையை” (Detailed Project Report) பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். அடுத்த படியாக இத்திட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்ததற்கான காரணங்களை கொண்ட ஆய்வறிக்கை (Pre-Feasibility Report) வெளியிடப்பட வேண்டும். இதன் மூலமே இந்த திட்டத்தின் தேவை குறித்த அரசின் நியாங்களை விவாதிக்க முடியும். எனவே அரசு உடனடியாக இதனை வெளியிட பூவுலகின் நண்பர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கிறோம்.
பரந்தூர் விமான நிலையத்தால் வரப்போகும் பாதிப்புகள் என்ன ?
தற்போது வரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த திட்டத்தின் பாதிப்புகளாக பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கீழ்கண்டவற்றைப் பார்க்கிறது:
1) வளர்ச்சித் திட்டங்களுக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை அரசு தவிர்க்க வேண்டும் என்று நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் பிரிவு 10 கூறுகிறது:
சட்டத்தில் உள்ள அப்பிரிவின்படி, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த, விவசாயம் நடைபெறும் எந்த இடத்தையும் ஒரு திட்டத்திற்காகக் கையகப்படுத்தக் கூடாது. பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள மொத்தமுள்ள 4,563.56 ஏக்கரில் சுமார் 3,246 ஏக்கர் நிலம் விவசாயம் நடைபெறும் நன்செய் ((2,446.79) மற்றும் புன்செய் (799.59) நிலங்களாகும். நெல் விவசாயம் நடைபெறும் இந்நிலத்தை கையகப்படுத்துவதாம் மூலம் நம்முடைய உணவு பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
வேறு வழியே இல்லையென்றால் தான் விவசாய நிலத்தை கையகப்படுத்தலாம் என நிலம் கையகப்படுத்தும் சட்டமும், ஒன்றிய அரசின் “புதிய விமான நிலையம் அமைக்கும் வழிகாட்டு நெறிமுறைகளும்(GUIDELINES FOR SETTING UP OF GREENFIELD AIRPORTS)” சொல்கின்றன. ஆனால், இந்த சரத்து “பரந்தூர் விமான நிலையத்திற்கு பொருந்தாது, இதற்கான காரணங்கள்.
2) ஒன்றிய அரசின், “க்ரீன்பீல்டு” விமான நிலையங்களுக்கான “வழிகாட்டு நெறிமுறைகளின்” படி (Guidelines for Greenfield Airport) ஏற்கனவே விமான நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து 150 கி.மீ தொலைவில் தான் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது:
பரந்தூரில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையம் இப்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் விமானநிலையத்திலிருந்து 65-70 கி.மீக்குள்தான் உள்ளது. அதனால் இது இயல்பாக அமைக்கப்படும் வழிமுறைக்குள் வராது.
கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை
3. சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய பயணிகளில் 70-80% சென்னையைச் சேராதவர்கள், அதாவது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து சென்னை வந்து வெளிநாடுகளுக்கு செல்லக்கூடியவர்கள். அப்படியெனில் ஏற்கனவே கோவையிலும், திருச்சியிலும் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன, அவற்றை விரிவாக்கி அல்லது சர்வதேச “code sharing agreement” க்குள் கொண்டுவந்து விமானங்களை இயக்கினால் எல்லோரும் சென்னைக்கு வரவேண்டிய தேவை இல்லை. ஒவ்வொரு விமான நிறுவனமும் வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் விமானங்களை இயக்கினாலே மக்களால் அதற்கு ஏற்றாற்போல் பயணத் திட்டங்களை அமைத்துக்கொள்ள முடியும்.
இதனைத் தவிர மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் கோரிக்கை நெடுநாட்களாக நிலுவையில் உள்ளது, அதையும் தரம் உயர்த்தி சர்வதேச “code sharing” கொண்டுவந்துவிட்டால் சென்னைக்கான புதிய விமான நிலையத்தின் தேவை இல்லாமல் போய்விடும். எனவே, சென்னை விமான நிலையத்தை விரிவாக்குவது, அல்லது கோவை, திருச்சி விமான நிலையங்களை விரிவாக்குவது, அல்லது மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவது போன்ற வாய்ப்புகள் தமிழக அரசிடம் உள்ளது. மேலும் சென்னையை மட்டுமே மையப்படுத்தப்பட்ட வளர்ச்சி என்பது சரியான நிலையும் அல்ல.
நியூட்ரினோ விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் பொய் கூறிய ஒன்றிய அரசு – பூவுலகின் நண்பர்கள்
4) தமிழகெங்கும் பயன்படுத்தப்படாத விமான ஓடுபாதைகள் (Air Strips) பல உள்ளன. குறிப்பாக அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், ஒசூர், கயத்தாறு, நெய்வேலி, ராமநாதபுரம், சேலம், சூலூர், தாம்பரம், தஞ்சாவூர், உளுந்தூர்பேட்டை, வேலூர் ஆகிய இடங்களில் விமான ஓடுபாதைகள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு இடத்தை புதிய விமான நிலையத்திற்கான இடமாக தேர்வு செய்யலாம்.
5) பரந்தூர் பகுதி மக்கள் தற்சார்போடு வாழ்கின்றனர். விவசாயத்தின் மூலம் இந்த தன்நிறைவை அவர்கள் பெறுகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவை அவர்களே உற்பத்தி செய்கின்றனர். வேளாண்மை சார்ந்த தொழில்கள் மூலமே தங்கள் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். பரந்தூர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இவர்களுக்குக்கான இழப்பீட்டுத் தொகையாக அரசு தரும் அதிகபட்சத் தொகையை வைத்துக்கொண்டு அருகாமையில் புதிய நிலம் வாங்க முடியாது. காரணம், விமான நிலையம் சார்ந்து புதியதாக உருவாகி உள்ள ரியல் எஸ்டேட் வணிகம், அருகாமைப் பகுதிகளில் நிலத்தின் விலையை நூறு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.
சென்னை விரிவாக்கத்தின் பகுதியாக பரந்தூரும் சென்னை மாநகராட்சியின் பகுதியாக மாற்றப்படவுள்ளது. ஆகையால், நிலத்தின் மதிப்பும், விலையும் கூடியுள்ளது. இந்த விலைக்கு விவசாய மக்களால் புதிய நிலம் வாங்க முடியாது. நிலத்திற்குப் பதிலாக நிலம் இழப்பீடாக கொடுக்கப்பட்டாலும், தற்போதைய வளமான பூமி அவர்களுக்குக் கிடைக்குமா என்பது கேள்வியே.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்: சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள்? – பூவுலகின் நண்பர்கள் கேள்வி
சென்னையின் வெள்ளம், வறட்சி:-
6)விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படவுள்ள 4563 ஏக்கரில் 2446 ஏக்கர் பகுதி நீர்நிலையாகவும், 1317 ஏக்கர் புறம்போக்கு நிலமாகவும் உள்ளது.
7) கம்பன் கால்வாய்:-
காவேரிப்பாக்கம் பாலாற்று அணையிலிருந்து துவங்கி பல்லவ அரசன் கம்ப வர்மனால் உருவாக்கப்பட்டு 43கி.மீ தூரம் கடந்து திருப்பெரும்புதூர் ஏரியை அடைவதற்கு முன்னர் 85 ஏரிகளை நிரப்பி சென்னையின் குடிநீர் ஆதாரமாகவும் வெள்ளம் ஏற்படாமலும் தடுக்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கம்பன் கால்வாய் அழிக்கப்படுவது ஏற்படுடையது அல்ல. இதைப்போன்ற மூன்றாம் நிலை ஓடைகள்தான் (3rd order stream ) ஆறுகளில் ஓடும் 80% நீரைக் கொண்டுள்ளன என்கிறார்கள் நீரியல் நிபுணர்கள்.
8) சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், சென்னையின் மேற்குப்பக்கம் உள்ள மாவட்டங்களில் பெய்யும் மழைப் பொழிவுதான். சென்னைக்கு மேற்கே உள்ள 4,000 மேற்பட்ட நீர்நிலைகளை தூர்வாரி முழுமையாக பயன்படுத்தினாலே சுமார் 100டிஎம்சி க்கும் மேல் தண்ணீரை சேமிக்க முடியும், வெள்ளம் ஏற்படாமலும் தடுக்க முடியும் என்கிறார் பேராசிரியர் ஜனகராஜன், இவர் சென்னை வெள்ளத்தடுப்பு நிபுணர் குழுவின் உறுப்பினர். இன்றைக்குக் காலநிலை மாற்றம் கொண்டுவரக் கூடிய “குறைந்த கால இடைவெளியில் அதிதீவிர மழைப்பொழிவு” போன்ற விஷயங்களை சமாளிப்பதற்கு நீர்நிலைகள், நீர் வழிப்பாதைகளைப் பாதுகாப்பது அவசியம் என்கின்றனர்
சுற்றுச்சூழல் பார்வையில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை – பூவுலகின் நண்பர்கள்
9) பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் போராடினாலும் “ஏகனாபுரம்” கிராமம் அதிகமான உயிர்ப்புடன் போராடுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும், விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு, அந்த கிராமமே இந்த வரைபடத்திலிருந்து துடைத்து எறியப்படும் அரசால் அவர்களுடைய நிலத்திற்கும் வீட்டிற்கும் இழப்பீடு கொடுக்கமுடியும், அவர்களுடைய பூர்வீகத்திற்கு (nativity) எது இழப்பீடு ஆகும்? அதை யாரால் கொடுக்கமுடியும்.
10) அருகாமை பகுதிகளில் வளர்ச்சியின் அழுத்தம்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் அதன் தாக்கம் அருகாமைப் பகுதிகளில் அதிகமாக இருக்கும். குறைந்தபட்சம் 50-75 கி.மீ. சுற்றளவிற்கு அதன் தாக்கம் இருக்கும். பரந்தூர் விமான நிலையம் மூழ்கடிக்கப்போகும் நீர்நிலைகள் இல்லாமல் இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான நீர்நிலைகள் உள்ளன, விவசாய நிலங்கள் உள்ளன. அந்த பகுதிகளில் மக்கள் தற்சார்பாக விவசாயம், கால்நடை/கோழி வளர்ப்பு என எளிமையான வாழ்வியல் முறையை பின்பற்றிவருகிறார்கள். விமான நிலையம் கொண்டுவரும் “நவீன வளர்ச்சி கூறுகளான” 7 நட்சத்திர விடுதிகள், அலுவலக வளாகங்கள், மால்கள் என அந்த பகுதியில் இவ்வளர்ச்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், அதை எளிமையான மக்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்கிற கவலையும் சேர்த்தே நாம் பார்க்க வேண்டியுள்ளது.
காலநிலை மாற்றம் இன்று மானுட இருத்தியலை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது, சூழலைக் காப்பது, உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வது, நீர்நிலைகளை பாதுகாப்பதுதான் இன்றைய நிலையில் தலையாய கடமை.
‘நச்சைக் கக்கும் தமிழ்நாட்டு அனல்மின் நிலையங்கள்’ – பூவுலகின் நண்பர்கள்
இந்தப் பின்னணியில், அரசு பரந்தூரில் அமைக்கத் திட்டமிட்டுள்ள உள்ள “Greenfield” விமான நிலையத் திட்டத்தை கைவிட்டுவிட்டு மாற்றுவழிகளை முன்னெடுக்கவேண்டும் என, அந்த திட்டத்தால் பல்லாயிரக்கணக்கில் பாதிக்கப்படப்போகும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினர் சார்பில் பூவுலகின் நண்பர்கள் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:- இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள், திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் பொதுவெளியில் இல்லாததால், அந்த பகுதியில் உள்ள மக்களிடமும், பொதுவெளியில் கிடைக்கும் வேறு சில தரவுகளை வைத்து மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன.
RSS Chief Mohan Bhagawat Speech about Hindu Muslim population | Haseef | SY Qureshi | Nagpur | Rss
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.