Aran Sei

இட ஒதுக்கீடு வழங்கிய வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.வா சமூகநீதியைப்பற்றி பேசுவது? – கி.வீரமணி கேள்வி

ண்டல் குழு அறிக்கையின் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிய வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.வா – சமூகநீதியைப்பற்றி பேசுவது? 27 சதவிகித இட ஒதுக்கீட்டை இப்பொழுது பா.ஜ.க. அளித்ததுகூட உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பின்படிதான்! உண்மையிலேயே பா.ஜ.க.விற்கு சமூகநீதியில் நம்பிக்கை இருந்தால், நீட் தேர்வை ஒழிக்க முன்வரட்டும்; இதனை அண்ணாமலைகள் உணரட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் கொள்கை – சமூகநீதியைப் பொறுத்து என்னவாக இருந்து வந்துள்ளது என்பதை நாட்டில் உள்ள பலரும் அறிவார்கள்.

சமூகநீதி – இட ஒதுக்கீடு – வகுப்புரிமை இந்த பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியை, மனுதர்ம மனப்பான்மையோடு மறுப்பதற்கு இழப்பீடு தருவதாகத்தான் அது அமைந்துள்ளது என்பதால்தான் இதற்கு மற்றொரு பெயராக ”இழப்பீட்டைச் சரி செய்யும் நீதி” (Compensatory Justice) என்றே அமெரிக்கா போன்ற நாடுகளில் தருவதோடு, அந்த நீதி ”உறுதி செய்யப்படும் நடவடிக்கை” (Affirmative Action) என்றும் அழைக்கப்படுகிறது!

கம்யூனல் ஜி.ஓ.
75 ஆண்டுகால ”சுதந்திரத்திற்கு” முன்பே – 1928 முதலே – இட ஒதுக்கீடு – சமூகநீதி (இந்திய அரசமைப்புச் சட்டம் வருவதற்கு முன்பே) திராவிடர் ஆட்சியின் ஆதரவோடு சுயேச்சை அமைச்சரவை செயலாக்கமாக, வகுப்புரிமை அரசு ஆணை (Communal G.O.) சென்னை மாநிலத்தில்தான் மலர்ந்தது! கருநாடகத்திலும் அதே காலகட்டத்தில் அரசர் ஆட்சியில் தொடங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக – ஆரியம் கடுமையாக எதிர்த்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவப் பிரிவிற்குத் தவறான விளக்கத்தை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் கூறி, திசை திருப்பி – அவ்வாணை செல்லாது என்று தீர்ப்பு வாங்கியது.
அதை எதிர்த்து தந்தை பெரியார் நடத்திய மக்கள் போராட்டத்தினால், இந்திய அரசமைப்புச் சட்டத்தினை – ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் – முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் – பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராகவும், டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் இருந்த ஒன்றிய அரசால் செய்யப்பட்டது.

தந்தை பெரியாரின் கிளர்ச்சியால்… சென்னை மாநிலத்தில் உருவான தந்தை பெரியாரின் கிளர்ச்சியால், இந்தியாவின் இதர மாநில ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் பரவலாகக் கிட்டின என்பது வரலற்று உண்மை.

அதன்படிகூட, ஒன்றிய அரசில், வேலை வாய்ப்பு, படிக்க ஏற்பட்ட வாய்ப்பு – அத்துறைகளில் மாநிலங்களில் மட்டும்தான் செயல்படுத்தப்பட்டது.
ஒன்றிய அரசின் துறைகளில் கல்வி, உத்தியோகங்களுக்கு எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு மட்டும்தான் தரப்பட்டது; ஓ.பி.சி. என்ற இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (இவர்கள்தான் நாட்டில் 60 சதவிகித மக்கள் என்றாலும்கூட) மறுக்கப்பட்டே வந்தது!

அதன் பிறகு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷனான மண்டல் கமிஷன் அறிக்கை செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்பதை இயக்க ரீதியாக திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் வடக்கே லோகியா சோஷலிஸ்ட் அமைப்பினர் குரல் கொடுத்தனர்.
திராவிடர் கழகம், இந்தியா முழுவதும் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது.

மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினார் பிரதமர் வி.பி.சிங் பிரதமராக வி.பி.சிங் வந்தபோது, அவருடைய சமூகநீதி தளபதிகளான ராம்விலாஸ் பஸ்வான், சரத்யாதவ், சந்திரஜித் யாதவ், பிரம்பிரகாஷ், தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் கலைஞர் போன்றவர்களின் இடைறாத முயற்சியால், பிரதமர் வி.பி.சிங் மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளை முதல் கட்டமாக வேலை வாய்ப்புகளில் 27 சதவிகித இட ஒதுக்கீடு செய்ய ஆணை பிறப்பித்தார். அதற்காகவே 10 மாதங்களில் அவரது ஆட்சிக்குத் தந்த ஆதரவை (அத்வானி போன்றவர்களின் பிடிவாதத்தால்) பா.ஜ.க. விலக்கிக் கொண்டு, அவரது ஆட்சியைக் கவிழ்த்தது.

மண்டலுக்கு எதிராகக் கமண்டலத்தைத் தூக்கினார்கள்!
மண்டலுக்கு எதிராக கமண்டலை – இராமன் கோவில் கட்ட ‘ரத யாத்திரை’ என்ற பெயரால், ‘ரத்த யாத்திரையை’ நடத்தினர்!
சமூகநீதி – ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது குறித்து வி.பி.சிங் அவர்கள், ”இதற்காக நான் எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமர் பதவியை இழக்கத் தயார்” என்று கூறி, ”சமூகநீதிக் காவலராக” உயர்ந்து நின்றார்! பிறகும், மத்திய கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு அய்.அய்.டி. போன்ற மத்திய பல்கலைக் கழகங்களில் ஓ.பி.சி.,க்கு இட ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், நாம் போராடியதன் விளைவாக, 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 2006 ஆம் ஆண்டு அய்க்கிய முன்னணி அரசால் செயல்படத் தொடங்கியது!

நீதிமன்ற அவமதிப்புக்கு ஆட்பட நேரிடும் என்ற அச்சத்தால்தான்…
பா.ஜ.க. இதனை ஒருபோதும் ஆதரித்ததே இல்லை. அப்படி இருக்கையில், உச்சநீதிமன்றத்தின் வற்புறுத்தல் – நீதிமன்ற அவமதிப்புக்கு ஆட்பட நேரிடும் என்ற அச்சத்தால்தான் மோடி தலைமையிலான பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசு இறுதியில் வேறு வழியில்லாமல், தங்கள் அரசை நீதிமன்ற அவமதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவே 27 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புக்கொண்டது!

அது அவர்களால் மனப்பூர்வமான கொள்கைத் திட்டமாக ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை. அதற்கு அவர்களது தேசியக் கல்வித் திட்டத்தில் சமூகநீதிக்குக் கொடுத்துள்ள இடமும், முக்கியத்துவமும் எந்த அளவு என்பதைப் பார்த்தாலே பளிச்சென்று விளங்கும்!
இந்த நிலையில், தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரதமர் மோடியை சமூகநீதிக் காவலர் என்று அழைத்து மகிழ்கிறார்!

மோடி அமைச்சரவையில் ஒடுக்கப்பட்டோர் சதவிகிதம் எவ்வளவு?
பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்டவராக ஆர்.எஸ்.எஸ் வர்ணித்துக் கொண்ட காலகட்ட த்தில் – அவர் பிரதமராகப் பொறுப்பேற்கும் 2014 தேர்தலில் -அவரது அமைச்சரவையில் ஒடுக்கப்பட்டோர் சதவிகிதம் எவ்வளவு? 2019 இல் கூட தொடக்கத்தில் எவ்வளவு? பிறகுதானே அமைச்சரவை மாற்றத்தில் சிறிது கூடுதல் பங்கீடு -சதவிகிதம் என்ற உண்மையை மறுக்க முடியுமா?
வி.பி.சிங் பிறப்பில் முன்னேறிய ஜாதியினர் ஆவார். மண்டலுக்காகப் பிரதமர் பதவியை இழந்தார்! பிரதமர் மோடியோ அப்பதவியும், ஆட்சியும் நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்டு, அவதூறுவிலிருந்து மீளவே 27 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புக்கொண்டார்; இரண்டும் வெவ்வேறு வகை.

மகிழ்ச்சியோடு வரவேற்பவர்கள் நம்மைவிட வேறு யாரும் இருக்க முடியாது! இதையும் தாண்டி பிரதமர் மோடி, சமூகநீதிக் காவலராகவே ஆனால், அதை மகிழ்ச்சியோடு வரவேற்பவர்கள் நம்மைவிட வேறு யாரும் இருக்க முடியாது!

அப்படி வர அவர் எண்ணினாலும் – அண்ணாமலையார்கள் அறியட்டும் – ஆர்.எஸ்.எஸ். கட்டமைப்பு அதற்கு வழிவிடுமா?
இந்தப் பிரச்சினையில் சலோனி குமாரி வழக்கைக் காட்டியே, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை அமல்படுத்த முடியாது என்று மோடி அரசு கூறியபோது, தி.மு.க. வழக்குரைஞர் வில்சன், அதற்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி வாதாடியதை உச்சநீதிமன்றம் ஏற்று, தெளிவுபடுத்தியது என்பதை, திருவாளர் அண்ணாமலையார் ஏனோ மறந்தாரோ!

இதுதான் பா.ஜ.க. சமூகநீதியை காக்கும் லட்சணமா?
தி.க., தி.மு.க., மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அத்துணை அரசியல் கட்சிகளும் ஒரே குரலில், ஒரே அணியில் நின்றபோது, தனித்து எதிர்த்த ஒரே கட்சி பா.ஜ.க. என்பதுதான் – அது சமூகநீதியை காக்கும் லட்சணமா?
இப்போதும் ‘நீட்’ தேர்வில்கூட பா.ஜ.க. மாநில உரிமை, கல்வி உரிமைக்கு எதிராக, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் கமிட்டிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு மூக்கறுப்பட்டது மறந்துவிட்டதா?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கும்போட்டு வாதாடியது தி.மு.க.தான். அதன் வெற்றிக்கு உரிமை கொண்டாட வேண்டியவர்கள் திராவிடர் கட்சியினரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அவ்வகையில் செயல்பட உறுதுணையாய் இருக்கும் திராவிடர் கழகமும்தானே!
மோடிகள் சமூகநீதிக் காவலர்களாகட்டும் நமக்கு மகிழ்ச்சியே! ‘நீட்’ தேர்வில் முதலாண்டு விலக்கு தந்தார்களே என்றுகூட நீங்கள் கூறலாம் – அதை ஏன் தொடர்ந்து – கொள்கை முடிவாக எடுத்து, விலக்குக் கேட்கும் மாநிலத்திற்கு விலக்கு அளித்து, அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றக் கூடாது!

தமிழ்நாடு சமூகநீதிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் மண்!
வெறும் வாய்ச் சவடால் பலிக்காது –
இந்த மண் சமூகநீதிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் மண் – இங்கே உங்கள் ‘சித்து’ விளையாட்டுகள் எடுபடாது! உண்மை ஒருபோதும் உறங்காது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு வழங்கிய வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.வா சமூகநீதியைப்பற்றி பேசுவது? – கி.வீரமணி கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்