இந்து மதம் மற்றும் மனுதர்மம் குறித்து பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முகாந்திரம் இல்லை என்ற காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா மனுதர்மம் குறித்தும் இந்து மதம் குறித்தும் பேசிய பேச்சிற்கு பாஜக கட்சியினரும் இந்துத்துவாவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” – ஆ.ராசா
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வழக்கத்தில் இல்லாத மனுதர்மம் நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவர் மீதான புகாரை காவல் துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே எனது புகாரின் பேரில் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜோசப்பின் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி ராசா மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லையென அறிக்கை அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுதாரர் வேண்டுமானால் கீழமை நீதிமன்றத்தை அணுக அனுமதியளித்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Source : hindutamil
ரூபாய் மதிப்பு குறையலயாம் டாலர்தான் ஏறுதாம் | ஏக்கர் கணக்குல பொய் பேசும் BJP | Aransei Roast | Modi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.