பேரறிவாளனுக்குக் கூடுதலாக ஒரு வார காலம் பரோலை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ‘லைவ் லாவில்‘ செய்தி வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், உடல்நிலை குறைவு காரணமாகத் தனது பரோலை 90 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வுக்குமுன் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில், “இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்கள் மட்டுமே பரோல் வழங்க அனுமதி உள்ளது. ஆனால், பேரறிவாளனுக்கு நவம்பர் 9 முதல் வழங்கப்பட்டுள்ள பரோலையும் சேர்த்து அவருக்கு 51 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
“மேலும், பேரறிவாளன் 25 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் செல்லாமல் 200 கிமீ தூரத்தில் சென்னையில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அப்போது, பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “பேரறிவாளனுக்கு சிறுநீரகத்தில் 25% அடைப்பு உள்ளது. அதற்குச் சிகிச்சை பெற 4 வாரமாவது பரோல் தேவைப்படுகிறது. எனவே, குறைந்தது 4 வாரத்துக்காவது பரோலை நீட்டிக்க வேண்டும்” என வாதிட்டுள்ளார்.
இரு தரப்பின் வாதத்தையும் கேட்ட உச்ச நீதிமன்றம் பேரறிவாளனின் பரோலை ஒரு வாரத்துக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மருத்துவ காரணங்களைக் கருத்தில்கொண்டு இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதற்கு முன் நடந்த விசாரணையின்போது, பேரறிவாளனை விடுவிக்கத் தமிழக அரசு, ஆளுநரிடம் அளித்த மனு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதை குறித்து உச்ச நீதிமன்றம் வாய் வழியாக அதிருப்தி தெரிவித்திருந்தது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.