மே 13 அன்று, ஒன்றிய அரசு ஒன்பது வழக்கறிஞர்களை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. அவர்களில் மூன்று பேர் பெண்கள். டெல்லி உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆகும். தற்போது 9 நீதிபதிகளின் நியமனத்திற்கு பிறகு உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
தாரா விட்டஸ்டா கஞ்சு, மினி புஷ்கர்னா, விகாஸ் மகாஜன், துஷார் ராவ் கெடேலா, மன்மீத் பிரீதம் சிங் அரோரா, சச்சின் தத்தா, அமித் மகாஜன், கவுரங் காந்த் மற்றும் சவுரப் பானர்ஜி ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் ஆவர்.
இதில், தாரா விட்டஸ்டா கஞ்சு மற்றும் மினி புஷ்கர்னாவைத் தவிர, மீதமுள்ள 7 வழக்கறிஞர்களும் மே 4 ஆம் தேதி பதவி உயர்வுக்கு உச்சநீதிமன்ற கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கஞ்சு மற்றும் புஷ்கர்னா ஆகிய இருவரும் பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
சிறப்புத் தகுதி பெற்றவர்களை ஒன்றிய அரசு தேர்வு தேர்வு செய்யும் கொள்கை :
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு தேவையான நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான உச்சநீதிமன்ற கொலிஜிய பரிந்துரையில் உள்ளவர்களில் சிறப்புப் பெயர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையை ஒன்றிய அரசு தொடர்கிறது.
ஆகஸ்ட் 17, 2020 அன்று, வழக்கறிஞர்கள் ஜஸ்மீத் சிங், அமித் பன்சால், தாரா விட்டஸ்தா கஞ்சு, அனிஷ் தயாள், அமித் சர்மா மற்றும் மினி புஷ்கர்னா ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. அவர்களில் ஜஸ்மீத் சிங் மற்றும் அமித் பன்சால் ஆகியோர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். மீதமுள்ள நான்கு பெயர்களை மறுபரிசீலனை செய்யுமாறு ஒன்றிய அரசு கோரியிருந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி, ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற கொலிஜியம். அதே நான்கு பெயர்களை மீண்டும் வலியுறுத்தியது. மே 13 அன்று, அரசாங்கம், விவரிக்க முடியாத தாமதத்திற்குப் பிறகு கஞ்சு மற்றும் புஷ்கர்னாவின் பெயர்களை ஏற்றுக் கொண்டாலும், மூத்த வழக்கறிஞர்கள் தயாள் மற்றும் சர்மாவின் பெயர்களைத் தொடர்ந்து நிறுத்தி வைத்ததுள்ளது.
‘நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு; கொலிஜியம் முறையை மாற்ற வேண்டும்’ – திருமாவளவன்
நீதிபதிகள் சிங் மற்றும் பன்சால் நியமிக்கப்பட்டதால் தில்லி உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 6 நீதிபதிகள் கிடைத்துள்ளனர். தயாள் மற்றும் ஷர்மா ஆகிய வழக்கறிஞர்கள் எதிர்காலத்தில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டால், இந்தாண்டு பிப்ரவரி 28 அன்று நியமிக்கப்பட்ட நீதிபதிகள் நீனா பன்சால் கிருஷ்ணா, தினேஷ் குமார் ஷர்மா, அனூப் குமார் மெந்திரட்டா மற்றும் சுதிர் குமார் ஜெயின் ஆகியோரின் பணி மூப்பை விடவும், மார்ச் 24 அன்று நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பூனம் ஏ.பாம்பா மற்றும் ஸ்வரனா காந்தா சர்மா ஆகியோரின் பணி மூப்பை விடவும், பரிந்துரையிலிருந்த புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது நீதிபதிகளின் பணி மூப்பை விடவும் (தயாள் மற்றும் சர்மாவை விட மூத்தவராக இருந்த நீதிபதி கஞ்சுவைத் தவிர) அவர்களின் பணிமூப்பு குறைந்து விடும்.
வழக்கறிஞர்கள் தயாள் மற்றும் ஷர்மாவின் பெயர்களைத் தவிர, உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ள மூத்த வழக்கறிஞர் சவுரப் கிர்பாலின் பெயரையும் ஒன்றிய அரசு தனது சுய ரத்து அதிகாரத்தின் மூலம் நிறுத்தி வைத்துள்ளது. அவரது பெயரை உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி பரிந்துரைத்தது. ஆனால், இதுவரை அது கவனிக்கப்படவே இல்லை.
எதிர்காலத்தில் சவுரப் கிர்பால் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாலும், அவர் கடந்தாண்டு நவம்பர் முதல் டெல்லி உயர் நீதிமன்ற அமர்வில் நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளை விட இளையவராகவே இருப்பார்.
உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை அதன் மறுபரிசீலனைக்குக் கூட திருப்பி அனுப்பாமல் அதன்மீது ஒன்றிய அரசு அமர்ந்திருப்பது, அது தனது சுய ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகும்; மேலும், இரண்டாவது (சுப்ரீம் கோர்ட் அட்வகேட்-ஆன்-ரெக்கார்ட் அசோசியேஷன் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா) மற்றும் மூன்றாவது நீதிபதிகள் (Re: Special Reference (1998)) வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ள எதிர்பார்க்கப்படாத சூழ்நிலை என்பதையும் மீறிய செயலாகும்
உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையில் உள்ள தனது பெயரைத் தொடர்ந்து ஓராண்டாக ஒன்றிய அரசு அங்கீகரிக்காததால், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதற்கான தனது ஒப்புதலை, பெங்களூரைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஆதித்யா சோந்தி இந்தாண்டு தொடக்கத்தில் திரும்பப் பெற முடிவு செய்தார்.
இது ஏன் முக்கியம்?
சில நேரங்களில் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணிப்பது நீதித்துறையின் சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும். அவரவர் உயர் நீதிமன்றத்தில் உள்ள சக நீதிபதிகளுக்கிடையேயான பணிமூப்பு, அகில இந்திய அடிப்படையில் அவர்களது ஒருங்கிணைந்த பணிமூப்பு ஆகியவை அவர்களின் எதிர்கால வாய்ப்புகளைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் நியமனம் செய்யப்படுவதைக் கருத்தில் கொள்வதற்கு ஒருங்கிணைந்த பணிமூப்பு என்பது பொருத்தமான காரணியாகும்.
அகில இந்திய அளவில் உள்ள நீதிபதிகளின் பணி மூப்பு என்பது உச்ச நீதிமன்ற பணி நியமனங்களை பரிசீலிப்பதில் ஒரு இன்றியமையாத காரணியாகும். எனவே, உயர் நீதிமன்றத்தின் நியமனங்களுக்கான பெயர்களைப் பரிந்துரைக்கும் ஆணையம், இத்தகைய அனைத்து தொடர்புடைய பரிசீலனைகளிலிருந்தும் வருகிறது.
அரசு இதிலிருந்து பெயர்களைத் தேர்ந்தெடுப்பது, உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரைகளை மாற்றுவதற்குச் சமம். அது மட்டுமல்லாமல், யாருடைய பெயர்களை அரசாங்கம் தொடர்ந்து தடுக்கிறதோ அவர்களுக்கு இது அவமானத்தைத் தருகிறது. தனது பரிந்துரைகளை அரசு மாற்றியமைக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் முயற்சிகள் உச்சநீதிமன்ற கொலிஜியத்திடமிருந்து அதிகம் வரவில்லை என்பதை சமீபத்திய நிகழ்வுகள் கூறுகின்றன.
www.thewire.in இணையதளத்தில் பரஸ் நாத் சிங் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்
இளவரசு கிட்ட 20 அறை வாங்குனேன் Bigg Boss Suresh Chakravarthy Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.