விவசாய சட்டங்களை திரும்ப பெற கோரி, டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இன்று (ஜனவரி 26), இலங்கை மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அட்டன் நகரத்தில் மலையக மக்களின் நில உரிமைக்கான இயக்கம் மற்றும் மொன்லார் நிறுவனம் சேர்ந்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதில் பங்கேற்றவர்கள், இந்திய விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் முழக்கங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியுள்ளனர். அத்துடன், இலங்கையில் அதானி நிறுவனம் ஆழமாக காலூன்றுவதைக் கண்டிக்கும் முழக்கங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்திய விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை இந்திய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய கோரியும், சிறு விவசாயிகளின் உரிமைகளையும் சலுகைகளையும் நசுக்குவதில் இருந்து அவர்களை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் 60 நாட்களுக்கு மேலாக நடைபெறும் தொடர் போராட்டத்தில் இதுவரை 66 விவசாயிகள் உயிரிழந்துள்ளதற்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டதுடன், இந்திய அரசுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அதானி நிறுவனம் தற்போது இலங்கையின் கிழக்கு முனையத்தை பெற்றுக்கொள்வது போல ஏனைய துறைகளின் நிலங்களையும் பெறுவதற்கு திரைமறைவில் சதி நடப்பதாகவும் அதனால் எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிலங்களை அழிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
`அதானிக்குக் கடன் வழங்காதே’ – சிட்னி மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
மேலும், இந்திய நிறுவனமான அதானியின் செயற்பாடுகளை இந்திய மக்களே கண்டித்து வெறுக்கும் நிலையில் அந்நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் இதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்க கூடாது எனவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.