கர்நாடகாவில் பள்ளி நுழைவு வாயிலில் மாணவி மற்றும் ஆசிரியைகளின் பர்தா, ஹிஜாப்களை அகற்ற நிர்பந்திக்கப்பட்ட காணொளி வெளியாகியுள்ளது.
மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது தடை செய்யப்பட்டதை தொடர்ந்து எழுந்துள்ள பிரச்னை காரணமாக பிப். 9 ஆம் தேதியில் இருந்து அனைத்து கல்வி நிறுவங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த தடையை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளுக்கு இடைக்கால உத்தரவிட்டுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், வகுப்பறைகளுக்கு மாணவர்கள் ஹிஜாப், காவித்துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களை அணிந்து வருவதற்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள உடுப்பி, தக்சிண கன்னடா, பெங்களுரூ பகுதிகளில் தடை உத்தரவை மீறி உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு வருகை தரும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பள்ளியின் நுழைவு வாயில் ஹிஹாப்பை அகற்றி விட்டபிறகு உள்ளே நுழையுமாறு நிர்பந்திக்கப்படும் காணொளி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பதிவிட்டுருக்கும் ட்விட்டர் பதிவில், பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி இடம்பெற்றுள்ளது.
அதில், மாணவி பள்ளிக்குள் நுழைய அனுமதிக்குமாறும், பள்ளிக்குள் நுழைந்த பிறகு அவர்கள் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வகுப்பறைக்கு செல்வார்கள் என பெற்றோர்கள் கூறுவது பதிவாகியுள்ளது.
ஊடகவியலாளர் இம்ரான் கானின் ட்விட்டர் பதிவில், “மாண்டியா மாவட்ட நிர்வாகம், மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பள்ளி நுழைவு வாயிலில் வைத்து ஹிஹாப்பை அகற்றிய பிறகே பள்ளிகளுக்குள் அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
”ஷிமோகா மாவட்டத்தில், ஹிஜாப்பை அகற்ற மறுத்து மாணவிகள் வகுப்பறையைப் புறக்கணித்துள்ளனர். கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் மாணவிகளின் முதல் நாள் வகுப்பு தவறவிடும் நிலை ஏற்பட்டுள்ளது” என ஊடகவியலாளர் நிகிலா ஹென்றி அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.