மாணவர்கள் உரிமையைப் பறிக்கும்; மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரான பெரியார் பல்கலைக்கழகச் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும். பல்கலைக்கழகத் துணை வேந்தர் மற்றும் பதிவாளருக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடைக்கான பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திர பாபு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், துணை வேந்தர் அவர்களின் ஆணை நாள் 25.5.2022யை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக் கழக பதிவாளர் அவர்கள் பல்கலைக் கழகத்தின் அனைத்துத் துறைகளுக்கும், கல்லூரிகளுக்கும் 27.5.2022 அன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சுற்றறிக்கையில் பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் பயிலும் மாணவர்கள் பல்வேறு அமைப்புகள் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை மேற்கொள்வதாகவும், இதை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்தி, பல்கலைக் கழக, கல்லூரி வளாகங்கள் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறைத் தலைவர்கள், கல்லூரி முதல்வர்கள் கோரப்பட்டுள்ளார்கள்.
இந்த சுற்றறிக்கை மக்களாட்சி மாண்புகளுக்கு முற்றிலும் எதிரானது. மாணவர்கள் அரசியல் பேசினால் கல்லூரி வளாகம் பாதுகாப்பாக இருக்காது என்ற கருத்தாக்கம் மிகவும் தவறானது.
கல்லூரியில் அரசியல் விவாதம் நடந்தால், மாணவர்கள் அரசியல் விவாதத்தில் ஈடுபட்டால் அவர்கள் படிப்பு பாதிக்கப்படும், அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்ற அச்ச உணர்வைப் பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியாகவே பல்கலைக் கழக சுற்றறிக்கையை பார்க்க வேண்டி உள்ளது. அரசியல் பேசினால் பாதுகாப்பு இருக்காது என்றால் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு அந்த அளவு சீர்கெட்டு உள்ளதா? மாற்றுக் கருத்திற்கு இங்கு இடமில்லையா? இந்திய ஜனநாயகம் கடந்த 75 ஆண்டுகாலம் இல்லாத அளவு தற்போது மோசமடைந்து விட்டது என்று பல்கலைக்கழகம் கருதுகிறதா என்ற கேள்விகள் எழுகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை (Preamble) இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை தெளிவுபட விளக்கியுள்ளது. இறையாண்மை கொண்ட, மதச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக குடியரசாக இந்தியா உருவாக வேண்டும் என்பதே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம்.
கருத்துச் சுதந்திரத்தை ஒவ்வொருவருக்கும் உத்தரவாதப்படுத்துவதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை உறுதிப்படுத்துகிறது. கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை மக்களுக்கு அடிப்படை உரிமையாக இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை முன்வைக்கும் அரசியலை மாணவர்கள் விவாதிக்காமல், எவ்வாறு ஒரு வலுவான மக்களாட்சியை இந்தியாவில் உருவாக்க முடியும்? கூட்டாச்சித் தத்துவத்தின் அடிப்படையிலான இந்தியாவில், ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படுகிறது, ஒன்றிய, மாநில அரசுகளின் அதிகார எல்லைகள், அரசாங்கத்தின் அங்கங்களான சட்டம் இயற்றும் அவை (Legislature), சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயலாட்சி (Executive), இயற்றப்படும் சட்டமும், அரசின் நடவடிக்கைகளும் அரசமைப்புச் சட்டத்தின்படி இருப்பதை உறுதிசெய்யும் நீதித்துறை (Judiciary) ஆகியவற்றுக்குள் இருக்கும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றைக் குறித்து விவாதிப்பதே அரசியல் செயல்பாடு. இத்தகைய அரசியல் நடவடிக்கைகளில் எங்கு, யார், தவறு செய்கிறார்கள் என்பதை கண்காணித்து வெளிப்படுத்துவது மக்களின் கடமை.
கல்லூரி, பல்கலைக் கழகங்களில் இத்தகைய விவாதம் நடத்தாமல் வேறு எங்கு இத்தகைய விவாதம் நடத்த இயலும்?
கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்தில் உள்ள மொழி, அறிவியல், சமூக அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்கள் நமது அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுகிறதா என்பதை கல்வி வளாகத்தில் விவாதிக்கலாம் வேறு எங்கு விவாதிக்க முடியும்?
நியாயமான விவாதம் தவறுகளை அம்பலப்படுத்த உதவும். மக்கள் தெளிவு பெறுவார்கள். மக்கள் தெளிவு பெற்றால் அரசைக் கேள்வி கேட்பார்கள். கேள்விகளை எதிர்கொள்ள முடியாததால் விவாதத்தை தடுக்க முயற்சி நடக்கிறது.
ஐக்கிய அமெரிக்க நாட்டில் (USA) மெக்கார்த்தி என்று ஒருவர் இதுபோன்ற தடைகளை 1950களில் விதிக்க முற்பட்டார். இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உள்ளிட்ட அறிஞர்கள் அதை கடுமையாக எதிர்த்தார்கள். ஆசிரியர்களும் மாணவர்களும் மெக்கார்த்திசத்தை எதிர்த்து போராட அறைகூவல் விடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.
புத்தர் முதல் பாபாசாகேப் அம்பேத்கர் வரை உரையாடல் மூலமே கல்வி கற்க இயலும் என்று சொன்ன கல்வி முறைக்கு எதிரானது பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆணையும் அதை அடிப்படையாகக் கொண்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் சுற்றறிக்கையும்.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்றார் திருவள்ளுவர். விவாதிக்காமல் எவ்வாறு கசடற கற்பது?
“வேந்தர்”, “துணை வேந்தர்” என்ற பெயர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறையில் உள்ள இந்தியாவில் உயர் பொறுப்பின் பெயர்களே. அரசமைப்புச் சட்டத்தின்படிதான் கல்வி வளாக உயர் பொறுப்பில் இருப்பவர்கள் செயல்பட முடியும். வேந்தர் என்பதாலோ, துணை வேந்தர் என்பதாலோ தான் விரும்பாத ஒன்றை மற்றவர் செய்யக் கூடாது என்று ஆணையிட முடியாது.
பொதுவாகவே கல்வியியல் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் வெளியிடும் முடிவுகள் “செயல்முறைகள்” (Proceedings) என்றே பெயரிடப்படுவது மரபு. அவ்வாறு இருக்க, “துணை வேந்தர் ஆணை ” என்ற பதிவாளர் சுற்றறிக்கையின் பார்வைக் கடித்தத் தலைப்பே சட்டத்தின் ஆட்சி என்ற மாண்பிற்கு உகந்தது அல்ல.
அடக்கப்பட்ட உணர்வுகள் வன்முறையாக வெடிக்கும். அதற்கு மாற்றுதான் மக்களாட்சி நடைமுறை. உணர்வுகளை கருத்துக்களாக வெளிப்படுத்தி, ஆரோக்கியமான விவாதங்களை நடத்தும் ஜனநாயக வெளிதான் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும். புத்தர், திருவள்ளுவர் உள்ளிட்டோர் முன்வைத்த நமது மக்களாட்சி செம்மரபை தந்தை பெரியார் உள்ளிட்டோர் உயர்த்திப்பிடிதார்கள்.
இந்திய நாட்டின் பாரம்பரியமிக்க மக்களாட்சி நடைமுறையை சிதைத்து, இந்திய மரபிற்கு மாற்றாக, அன்னியக் கருதாக்கங்களான இத்தாலியின் பாசிசக் கருத்தாளர் முசோலினி, ஜெர்மனியின் நாசிசக் கருத்தாளர் ஹிட்லர், அமெரிக்காவின் அடக்குமுறை அரசியல் வித்தகர் மெக்கார்த்தி ஆகியோர் முன் வைத்த அரசியல் விவாதத்தை தடுக்கும் ஆணையை / சுற்றறிக்கையை “பெரியார்” பெயரைத் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகம் வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது.
பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் அவர்களின் 25.5.2022 தேதியிட்ட “ஆணை”, அதை அடிப்படையாகக் கொண்டு 27.5.2022 பதிவாளர் சுற்றறிக்கை ஆகியவற்றை பெரியார் பல்கலைக்கழகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
இன்று கல்வி வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் பல விரும்பத்தகாத சம்பவங்கள் அரசியல் விவாதம் நடத்தப்படுவதனால் அல்ல. மாறாக முறைப்படி மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தாமல், மாணவர்கள் ஜனநாயக பயிற்சி எடுக்கும் வாய்ப்புகளை கல்லூரி, பல்கலைக் கழகங்கள் மறுத்து வருவதால் உருவாகியுள்ள அரசியல்லற்ற போக்கே அதற்கு காரணம். இதன் விளைவாகவே, பேரூந்து மற்றும் தொடர் வண்டி பயணத்தின் அடிப்படையிலும், உள்ளூர் செல்வாக்கு அடிப்படையிலும் “ரூட் தல” உள்ளிட்ட தனிமனித சாகசங்களுக்கு பின்னால் மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இத்தகைய போக்கை தடுத்து, ஜனநாயக நெறிமுறைகளின் படி முறையான மாணவர் பேரவைத் தேர்தலை அனைத்து கல்வி வளாகங்களிலும் நடத்திட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
பெரியார் பல்கலைக்கழகம் மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரான தனது உத்தரவுகளை திரும்பப் பெற வில்லை என்றால் 1950களில் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அறைகூவல் விடுத்தவாறு கல்வியியல் சுதந்திரத்தை காத்திடவும், இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் ஜனநாயக மாண்புகளை காத்திடவும் மாணவர்களும், ஆசிரியர்களும் ஜனநாயக வெளியை மறுக்கும், ஜனநாயக குரல் வளையை நசுக்கும் பல்கலைக் கழக உத்தரவுகளை எதிர்த்து வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
DMK Ponnaiyan தெரிவிச்ச கருத்து 100% உண்மை Theni Karnan | Sasikala | Nayinar Nagendiran | Ponnaiyan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.