மாவோஸ்ட் இயக்கத்துடன் தொடர்பிருப்பதாக 6 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக இருந்த மாணவர் செயல்பாட்டாளர் காஞ்சன் நானாவாரே காலமானார்.
மஹாராஷ்டிரா மாநிலம் சந்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான காஞ்சன் நானாவாரே ஆதிவாசி சமூகத்தவர். மாணவர் உரிமை செயல்பாட்டாளரான இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு, மாவோஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
பிறக்கும் போதே இதய குறைபாடுடன் பிறந்த நானாவாரே, கடந்த வாரம் மூளை பிரச்னையால் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் பூனே மாவட்டத்தில் உள்ள சாசூன் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
அம்பானி, ஒரு மணிநேரத்தில் சம்பாதித்ததை, தொழிலாளி சம்பாதிக்க 10,000 ஆண்டுகளாகும் – ஆக்ஸ்ஃபாம்
காஞ்சனுக்கு, கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மூளையில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், அறுவை சிகிச்சை நடைபெறும் வரை சிறை நிர்வாகமோ, மருத்துவமனை நிர்வாகமோ தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லையென நானாவாரேவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எரவாடா மத்திய சிறைச்சாலை மற்றும் சாசூன் மருத்துவமனையையும் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் தங்கள் தரப்பு கருத்தைத் தெரிவிக்கும் பட்சத்தில் அது பிரசுரிக்கப்படும் எனவும் தி வயர் கூறியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் காஞ்சன் நானாவேர் சார்பாக, அமர்வு நீதிமன்றம் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ”ஓவ்வொரு முறையும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட போதும், தள்ளுபடி செய்யப்பட்டது” என காஞ்சன் நானாவாரேவின் வழக்கறிஞர் பார்த் ஷா தி வயர் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.
பாலகோட் தாக்குதல்: அர்னாப்பிடம் ராணுவ ரகசியத்தைக் கூறியது பிரதமர் மோடியா ? ராகுல் காந்தி சந்தேகம்
நானாவாரே உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனு தற்போதும் விசாரணையில் உள்ளதாக தி வயர் கூறுகின்றது.
நானாவாரேவின் ஜாமீன் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தில், இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரின் உடல்நிலையை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு நிலைமையின் அவசரம் கருதாது மாதக் கணக்கில் கால தாமதம் செய்ததால் நானாவாரேவின் உயிர் பிரிந்ததாக தி வயர் தெரிவித்துள்ளது.
நானாவாரே மீது பதியப்பட்ட 9 வழக்குகளில், 6 வழக்குகள் அவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 3 வழக்குகளில் கட்சிரோலி, புனே மற்றும் கோண்டியா ஆகிய நீதிமன்றங்களில் தலா ஒரு வழக்கு என நிலுவையில் உள்ளது.
மஹாராஷ்டிராவின் பல்வேறு சிறைகளில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்த நானாவாரே மீது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது (UAPA). இதே சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவரது கணவர் அருண் பெல்கேவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
”நானாவாரேவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை. ஜனவரி 24 அன்று, பெல்கேவின் குடும்பத்துக்குக் கடிதம் ஒன்று கிடைத்தது. பின்னர் நானாவாரேவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டதாகத் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது” என, நானாவாரேவின் வழக்கறிஞர் ஷா தி வயர் –யிடம் தெரிவித்துள்ளார்.
மூடநம்பிக்கையால் நடந்த விபரீதம்: பெற்ற மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர்கள்
நானாவாரேவின் உடலைச் சந்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லார்ஷா நகரில் வசிக்கும் பால்கேவின் குடும்பத்திடம் ஒப்படைக்க கோரி, அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். ”நானாவாரே இறந்த பிறகாவது அவரின் உடலைப் பெற்று, தங்கள் விருப்படி இறுதி சடங்குகளை மேற்கொள்ள அவரது குடும்பம் விரும்புகிறது” என ஷா தி வயர் இணையதளத்திடம் கூறினார்.
தேசபக்தி மாணவர் மன்றம் என்ற அமைப்பில், 2004 ஆம் ஆண்டு முதல் நானாவாரே மற்றும் அவரது கணவர் பெல்கே பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து செயல்பட்ட அனுராதா சோனுல், இதே போன்ற குற்றச்சாட்டுகளுக்காக, 2011 ஆம் ஆண்டுக் கைது செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியானார்.
தி வயர் இணையதளத்திடம் நானாவாரே பற்றி நினைவுகூர்ந்துள்ள அனுராதா ”தேசபக்தி மாணவர் மன்றத்தில் நாங்கள் அனைவரும் விவசாயிகள் பிரச்னை, ஆதிவாசி மக்கள் மற்றும் பட்டியலின மக்கள் சந்திக்கும் பிரச்னைகள்குறித்து குரல் கொடுத்து வந்தோம். காஞ்சன் நானாவாரே, அவரது உடல்நிலையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து செயல்பட்டார்” எனக் கூறியுள்ளார்..
”தேசபக்தி மாணவர் மன்றம்” மாவோஸ்ட்களின் முன்னணி அமைப்பு எனக் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து, நானாவாரே மற்றும் பெல்கே, முதல்முறையாக 2008 ஆம் ஆண்டுக் கைது செய்யப்பட்டனர்.
நானாவாரேவின் உடல்நிலை மோசமடைந்த செய்தி அறிந்து சாசூன் மருத்துவமனைக்கு அனுராதா சென்றுள்ளார். அங்கு நானாவாரேவை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு நடக்கவிருந்த அறுவை சிகிச்சைபற்றித் தனக்கு தெரிவிக்கப்பட்டது எனவிம் அவர் தி வயர் -யிடம்தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு – ‘வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டுள்ளது’ – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்
அறுவை சிகிச்சை முடிந்து நானாவாரே சுயநினைவை இழந்துள்ளார். நானாவாரேவை சந்திக்க அவருடைய கணவர் பெல்கேவிற்கு நீதிமன்றம் அனுமதியளித்த போதும், சிறை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால், நானாவாரேவை கடைசியில் பெல்கேவால் உயிருடன் பார்க்க முடியவில்லை என தி வயர் கூறுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊடரங்கின் காரணமாக, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து, சிறை கைதிகளை ஜாமீனில் அனுப்ப அனுமதியளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து மஹாராஷ்டிரா அரசாங்கம் 11 ஆயிரம் கைதிகளை ஜாமீனில் வெளிவரச் சம்மதம் தெரிவித்தது. ஆனால் சிறப்பு சட்டங்களின் கீழ் கைதுச் செய்யப்பட்டவர்களை விடுவிக்க மறுத்தால் நானாவாரேவால் ஜாமீனில் வெளிவர இயலவில்லை.
”நானாவாரேவின் உடல்நிலை அடிப்படையில் கூட, அவருக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிருஷ்டவசமானது. மாவோயிஸ்ட் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றசாட்டப்பட்டார் நானாவாரே. ஆனால் அவர் அவ்வாறு ஈடுபட்டாரா என்று எங்களுக்குத் தெரியாது. இந்த வழக்கில் அவருக்குத் தண்டனை வழக்கப்படவும் இல்லை. ஆனாலும் சிறைவாசத்தால் தண்டிக்கப்பாட்டர்” என நானாவாரேவின் வழக்கறிஞர் நாஹர் தெரிவித்தாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.