உலகத்தின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரராகப் பலரால் கருதப்படும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த டியெகோ மரடோனா, நேற்று மாரடைப்பால், தனது 60-வது வயதில் காலமானார். அவரது சொந்த நாடான அர்ஜென்டினாவும், அவர் கால்பந்து ஆடிய இத்தாலிய நேப்பிள் நகரமும் கால்பந்தாட்ட உலகமும் துயரத்தில் மூழ்கியுள்ளன.
அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்டோ ஃபெர்னாண்டஸ் மூன்று நாட்கள் அரசு முறை துக்கம் அறிவித்துள்ளார்.
ப்யூனோஸ் ஏர்ஸில் உள்ள அவரது வீட்டில் உயிரற்ற நிலையில் காணப்பட்ட அவரை மீட்பதற்கு 9 ஆம்புலன்ஸ்கள் வந்து சேர்ந்தன என்கிறது தி கார்டியன் செய்தி. நவம்பர் 3-ம் தேதி செய்யப்பட்ட ஒரு மூளை அறுவை சிகிச்சைக்குப் பின் மரடோனா ஓய்வில் இருந்து வந்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், குடிப் பழக்கத்தை விட்டதிலிருந்து, அது தொடர்பான பின்விளைவுகளால் மரடோனா அவதிப்பட்டு வந்திருக்கிறார்.
அவரது மரணம் தொடர்பான செய்தியைத் தொலைக்காட்சியில் அறிவிக்கும் போது, பல தொலைக்காட்சி செய்தியாளர்கள் தமது கண்ணீரை அடக்க முடியாமல் திணறினர். “எங்களது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதி இறந்து விட்டது” என்று கூறினார் சி5என் என்ற தொலைக்காட்சி செய்தியாளர். இன்னொரு செய்தியாளர், “அவர் இறக்கவே முடியாதவர் என்று நான் நினைத்தேன்” என்றார்.
தெற்கு இத்தாலியில் உள்ள நேப்பிள் நகரத்தில் மரடோனா ஒரு கடவுளைப் போல கருதப்படுகிறார் என்கிறது டெய்லி மெயில். மரடோனாவை “நேப்பிள்ஸின் அரசன்” என்று அழைக்கிறது, பிபிசி. நேப்பிள்ஸ் மக்கள் மரடோனாவிடம், “என்னுடைய சொந்தக் குழந்தைகளை விட உங்களை அதிகமாக நேசிக்கிறேன்” என்று சொல்வார்கள் என தி கார்டியன் தெரிவிக்கிறது.
அதற்கு முன்னர் பெரிதளவு சாதிக்காத நாப்போலி அணியை இரண்டு சீரீ ஏ கோப்பை வெற்றிக்கு இட்டுச் சென்றிருந்தார் மரடோனா. “இன்றைக்குக் கால்பந்தாட்டம் இறந்து போனது” என்று நேப்பிள்ஸில் ஒரு ரசிகர் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.
1985-ல் மெக்சிகோவில் நடந்த கால்பந்தாட்ட உலகக் கோப்பையில், மரடோனா தனது மேதைமை நிறைந்த விளையாட்டு மூலம், “நம் நாட்டை உலகத்தின் மிக உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் சென்றார் என்று அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்டோ ஃபெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
“நீங்கள் எங்களுக்கு அளவிட முடியாத அளவு மகிழ்ச்சியைத் தந்தீர்கள். நீங்கள்தான் எல்லோரையும் விட மகத்தானவர். உங்கள் வாழ்வுக்கு நன்றி, டியெகோ. எங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களைத் தேடுவோம்” என்று அவர் கூறியுள்ளார்.
உலகின் மகத்தான கால்பந்தாட்ட வீரர் பட்டத்தைப் பெறுவதற்கு மரடோனாவுக்கு நிகராகப் போட்டியிடும், பிரேசிலைச் சேர்ந்த பெலே, “நான் ஒரு மகத்தான நண்பரையும், உலகம் ஒரு வரலாற்று நாயகனையும் இழந்து விட்டோம். ஒரு நாள், நாங்கள் இருவரும் வானத்தில் சேர்ந்து கால்பந்து ஆடுவோம் என்று நம்புகிறேன்” என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நவீனக் காலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்சி, “அவர் நம்மை விட்டுப் போய் விட்டார். ஆனாலும் போகவில்லை, ஏனென்றால் டியெகோ அழிவில்லாதவர்” என்று புகழ்மாலை சூட்டியுள்ளார்.
1986 உலகக் கோப்பை கால்இறுதிப் போட்டியில், டியகோ மரடோனா, இங்கிலாந்து அணியின் தடுப்பாளர் பீட்டர் ஷில்டனின் தலைக்கு மேல் தாண்டிக்குதித்து, தனது கையால் பந்தைக் காலியான வலைக்குள் தள்ளி அர்ஜென்டினாவை முன்னணிக்குக் கொண்டு சென்றார். இது “கடவுளின் கரம்” என்று அழைக்கப்படுகிறது.
அந்தக் கோல் அடித்த நான்கு நிமிடங்களுக்குப் பிறகு மரடோனா இங்கிலாந்தின் இதயத்தையும் நம்பிக்கையையும் கிழித்து எறிந்தார், என்கிறது தி கார்டியன். மைதானத்தின் பாதியில் பந்தை எடுத்துக்கொண்ட அவர், ஒரு 180 டிகிரி சுழல் நிகழ்த்தி, 5 எதிர்த்தரப்பு ஆட்டக்காரர்களைத் தாண்டிச் சென்று பீட்டர் ஷில்டனுக்கு அப்பால் பந்தை அடித்து கோல் ஈட்டினார்.
இந்தப் போட்டிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்புதான் இங்கிலாந்துக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே பாக்லாந்து தீவு தொடர்பாகப் போர் நடந்திருந்தது. அதில் அர்ஜென்டினா கடும் தோல்வியைத் தழுவியிருந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான இந்த வெற்றியைப் பற்றித் தனது சுயசரிதையில் எழுதிய மரடோனா அதன் உண்மையான அர்த்தம் என்ன என்று கூறியிருந்தார்.
“அது ஒரு நாட்டையே தோற்கடிப்பது போன்றது, ஒரு கால்பந்தாட்ட அணியை அல்ல. போட்டிக்கு முன்பு மால்வினாஸ் போருக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நாங்கள் சொல்லியிருந்தாலும், பல அர்ஜென்டினிய பையன்கள் அங்கு உயிர் கொடுத்தார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்களை சிறு பறவைகளைப் போலச் சுட்டுக் கொன்றார்கள் என்றும் எங்களுக்குத் தெரிந்திருந்தது” என்று எழுதினார்.
“அந்தப் போட்டிதான் எங்களது பழிவாங்கல். அது மால்வினாசின் ஒரு பகுதியை மீட்பது. இரண்டையும் கலக்கக் கூடாது என்று சொல்லியிருந்தது பொய். ‘இதுவும் இன்னும் ஒரு சாதாரண போட்டிதான்’ என்று நாங்கள் யாருமே நினைக்கவில்லை!” என்று அவர் எழுதியிருந்தார்.
1990 உலகக் கோப்பையிலும் தன் நாட்டு அணியை இறுதிப் போட்டிக்குத் தலைமை தாங்கி நடத்திச் சென்றார் மரடோனா. அவர் அர்ஜென்டினா சார்பில் 91 போட்டிகளில் விளையாடி 34 கோல்களைப் போட்டார், 4 உலகக் கோப்பைகளில் அர்ஜென்டினாவுக்காக விளையாடினார்.
கோடிக்கணக்கில் பணம் ஈட்டிய காலத்திலும் தெருக்களில் வளர்ந்த நினைவுகளைப் பெருமையாக அணிந்து கொண்டவர், மரடோனா. 10 பேரைக் கொண்ட அவரது குடும்பம் ஒரு மூன்று அறை கொண்ட குடிசையில் வாழ்ந்தது. கூரை வழியாக ஒழுகும் தண்ணீர்தான் அவர்களது வீட்டுக்குள்ளேயே வரும் ஒரே ஓடும் தண்ணீர். வேறு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போது, ஓர் ஆரஞ்சை மீண்டும் மீண்டும் இரண்டு கால்களாலும் மேலே உதைத்துப் பயில்வதன் மூலம் தனது கால்பந்தாட்ட திறமைகளை வளர்த்துக் கொண்டார், அவர்.
“டியகோ எங்கள் மக்களைக் கனவு காண வைத்தார். தனது மேதைமையால் நேப்பிள்ஸை மீட்டுக் கொடுத்தார்” என்று நேப்பிள்ஸ் நகர மேயர் புதன்கிழமை புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.