அரசியல், ஜாதி, மத சார்பின்றி கல்விப் பணியில் கலங்கரை விளக்காக செயலாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிருங்கள் என்று பாமகவின் இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபை எழுதியுள்ள கடிதத்தில், “நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட தங்கள் கட்சியின் முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தீர்கள். எங்களுடைய தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர் சூர்யா, உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்தக் காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார்” என்று நினைவூட்டப்பட்டுள்ளது.
“அந்த முத்திரையைப் படத்தில் பயன்படுத்தியதில் தயாரிப்பு நிறுவனத்திற்கோ படத்தின் கதாநாயகன் சூர்யாவிற்கோ எள்ளளவும் தொடர்பு இல்லாத நிலையில் உங்கள் கட்சியினர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவது எங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபைக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அரசியல், ஜாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன், விளிம்பு நிலை மாணவர்கள் மீது விருட்சமான பார்வை கொண்டு கல்விப் பணியில் கலங்கரை விளக்காய் செயலாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதைத் தவிர்க்கும்படி வருத்தத்துடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்” என்று அக்கடிதத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபை தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.