Aran Sei

சர்ச்சையில் சிக்கிய மீரா நாயரின் ’சூட்டபிள் பாய்’ – இந்து மதத்தை புண்படுத்துவதாக வழக்கு

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் வெப்சீரியஸ் ஒன்றில் மத உணர்வுகளை காயப்படுத்தும்படியான காட்சிகள் இருப்பதாகக் கூறி, அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘சூட்டபிள் பாய்’ எனும் தொடரில், இந்து கோவில் வளாகத்தில் முத்தக்காட்சிகள் இருப்பது, இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா எனும் வலதுசாரி அமைப்பின் தேசிய செயலாளரான கௌரவ் திவாரி என்பவர், மத்திய பிரதேசத்தின் ரேவா எனும் பகுதியின் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் கௌரவ் திவாரி, “ஆபாசமான” காட்சிகள் தொடரில் இருந்து நீக்கப்பட வேண்டும், நெட்ஃப்ளிக்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டிருக்கிறார்.மத்திய பிரதேசத்தின் நர்மதா நதியின் கரையில் இருக்கும் மஹேஷ்வர் கோவிலில் எடுக்கப்பட்டிருக்கும் முத்தக்காட்சிகள் “லவ் ஜிஹாத்தை” ஊக்குவிக்கிறது எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேற்சொன்ன காரணங்களுக்காக, நெட்ஃப்ளிக்ஸ் படைப்புப் பிரிவின் துணை தலைவர் மோனிகா செர்கில் மீதும், பொது கொள்கைகள் பிரிவின் இயக்குநர் அம்பிகா குரானா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

மிஸ்ரா வெளியிட்ட வீடியோ அறிக்கையில், “நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்பட்டு இருக்கும் சூட்டபிள் பாய் தொடரின் முத்தக்காட்சிகள் இந்து ஆலயத்தில் எடுக்கப்பட்டவையா, அவை மத உணர்வுகளை புண்படுத்தும்படி இருக்கிறதா? என சோதிக்க சொல்லியிருந்தேன். குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கைகளை புண்படுத்தும்படி காட்சிகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

கௌரவ் திவாரியின் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 295 (A) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மத நம்பிக்கைகளையும் உணர்வுகளை அவமதிக்கும் நடவடிக்கைகளுக்கு இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

சலாம் பாம்பே, மன்சூன் வெட்டிங் மற்றும் தி நேம்சேக் போன்ற படங்களை இயக்கிய புகழ் பெற்ற இயக்குனர் மீரா நாயர், ‘ஏ சூட்டபிள் பாய்’  என்ற ஆறு பகுதிகள் கொண்ட இந்த தொடரை இயக்கியுள்ளார்.

இந்தியாவில் இருக்கும் வலது சாரி அமைப்புகள் திரைப்படங்களுக்கும், பிற கலை வடிவங்களுக்கும் எதிராக வழக்குகள் பதிவு செய்வது இது முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டு, சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்த ‘பத்மாவத்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே, கர்னி சேனா எனும் வலது சாரி அமைப்பு இந்த திரைப்படம் ராஜபுத்திர மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என பல மாநிலங்களில் போராட்டங்களை நடத்தியது. படத்திற்காக போடப்பட்ட செட் ஒன்றை அந்த அமைப்பினர் தீ வைத்து கொளுத்தினர்.

மேற்குலகில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் – ஒடுக்கப்படும் சமூகங்களின் கதைகளை பேச தளம் தரும் – அதிகார வர்க்கத்துக்கு எதிராக படைப்புகளை வெளியிடும் நெட்ஃப்ளிக்ஸ் நிர்வாகம், இந்தியாவிலும் அதே உத்வேகத்தோடு செயல்படுமா அல்லது வணிகத்தை காத்துக் கொள்ள பின் வாங்குமா என்பது கேள்விக்குறியே.

சர்ச்சையில் சிக்கிய மீரா நாயரின் ’சூட்டபிள் பாய்’ – இந்து மதத்தை புண்படுத்துவதாக வழக்கு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்