Aran Sei

தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சட்ட விதிகளை மீறி செயல்படுகிறது – இணைய சுதந்திரத்திற்கான அறக்கட்டளை குற்றச்சாட்டு

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தன் அதிகார மற்றும் சட்ட வரம்பை மீறி செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சகத்துடனான கடிதப் பரிமாற்றத்தை பகிரங்கமாக வெளியிடுவதன் வழியாக, ஒரு வெளிப்படைத்தன்மையை முன்னெடுக்க வேண்டும் என்று டிவிட்டர் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கிறோம்  என்றும் இணைய சுதந்திரத்திற்கான அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இன்று (ஆகஸ்ட் 4), தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்தியில், இணைய சுதந்திரத்திற்கான அறக்கட்டளை, ” ‘திரிக்கப்பட்ட செய்தி’ என்ற அத்தியாயம் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கிறதா? `ஃபேக்ட் செக்’ என்று அழைக்கப்படும் ​​உண்மை கண்டறியும் சோதனைகளை நடத்துவதை நிறுத்தச் சொல்லுங்கள் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிவிட்டருக்கு கடிதங்களை அனுப்பியது நினைவிருக்கிறதா? சரி, தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அக்கடிதங்களை தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000-ன் எந்த விதியின் கீழும் வழங்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

“2021 ஆம் ஆண்டு மே 21 அன்று, டிவிட்டர் நிறுவனத்திற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தனது முதல் கடிதத்தை அனுப்பியது. அதில், ​ திரிக்கப்பட்ட செய்தி என்ற ஹேஷ் டேக்கை அகற்றுமாறு அமைச்சகம் கூறியது. தகவல் தொழிற்நுட்பச் சட்ட விதிகளின் கீழ், இதுபோல ஆணையிட உங்களுக்கு எதுவும் அதிகாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி நாங்கள் (இணைய சுதந்திரத்திற்கான அறக்கட்டளை) அமைச்சகத்திற்கு பதில் கடிதம் எழுதினோம். மேலும், இந்தக் கோரிக்கைக்கு எந்தச் சட்டரீதியான அடிப்படையும் இல்லை.” என்று அக்கடிதத்தை இணைய சுதந்திரத்திற்கான அறக்கட்டளை நினைவூட்டியுள்ளது.

இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக டிவிட்டர் மீது காவல்துறையில் புகார் – நெறிக்கப்படுகிறதா கருத்து சுதந்திரம்?

“ஜூன் மாதத்தில் நாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 2 கோரிக்கைகளை  அமைச்சகத்திற்கு அனுப்பினோம். அதில், டிவிட்டர் நிறுவனத்திற்கு அப்படியான வழிகாட்டுதலை அமைச்சகம் வழங்கியதா? ஆம் எனில், தகவல் தொழிற்நுட்பச் சட்டத்தின் எந்த விதிமுறையின் கீழ் வழங்கியது என்று கேட்டிருந்தோம். ஆனால், அமைச்சகத்தின் பதிலில் எந்த சட்டபிரிவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், டிவிட்டர் நிறுவனத்திற்கு அனுப்பிய இரண்டு கடிதத்தின் நகல்களை அனுப்பியது.” என்று இணைய சுதந்திரத்திற்கான அறக்கட்டளை கூறியுள்ளது.

மேலும், “2021 மே மாதத்தில் அமைச்சகத்தின் முதல் கடிதத்திற்கு டிவிட்டர் பதிலளித்ததாகத் தெரிகிறது. ஆனால், அக்கடிதத்தை எங்களுக்கு வழங்கவில்லை. இதற்கு எதிராக நாங்கள் முதல் முறையீட்டைத் தாக்கல் செய்தோம். டிவிட்டருக்கு இதுபோன்ற வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான அடிப்படை சட்டவிதிகளை அடையாளம் காட்ட அமைச்சகம் தவறிவிட்டது.” என்று இணைய சுதந்திரத்திற்கான அறக்கட்டளை குற்றஞ்சாட்டியுள்ளது.

டிவிட்டர் கணக்குகளை முடக்கும் கோரிக்கை – மத்திய அரசுடன் டிவிட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை

“தற்போது, நாங்கள் அனுப்பியுள்ள முதல் முறையீட்டிற்கான பதிலில், டிவிட்டருக்கு அப்படியான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு சட்டபூர்வமான அடிப்படை இல்லை என்று அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. அமைச்சகத்தின் இப்பதில் முக்கியமானது. காரணம், இரண்டாவது கடிதம் டிவிட்டர் நிறுவனம் சந்தேகத்திற்குரிய டிவீட்களை “திரிக்கப்பட்ட செய்தி” என்று வகைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.” என்பதை இணைய சுதந்திரத்திற்கான அறக்கட்டளை சுட்டிக்காட்டியுள்ளது.

இறுதியாக, “மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தன் அதிகார மற்றும் சட்ட வரம்பை மீறி செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மேலும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடனான கடிதப் பரிமாற்றத்தை பகிரங்கமாக வெளியிடுவதன் வழியாக, ஒரு வெளிப்படைத்தன்மையை முன்னெடுக்க டிவிட்டர் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கிறோம்.” என்றும் இணைய சுதந்திரத்திற்கான அறக்கட்டளை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சட்ட விதிகளை மீறி செயல்படுகிறது – இணைய சுதந்திரத்திற்கான அறக்கட்டளை குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்