கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த பாஜகவை, வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தேற்கடிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச விவசாயிகளுக்குப் போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, அறிக்கை வெளியிட்டுள்ள மோர்ச்சா, “ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்தால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்துள்ளது.
ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் பாஜகவை வரும் தேர்தலில் தண்டிக்க உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக இதுவரை எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளும் திரும்பப் பெறப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
“வரும் நாட்களில் மீரட், கான்பூர், சித்தார்த்நகர், கோரக்பூர் மற்றும் லக்னோ உள்ளிட்ட ஒன்பது இடங்களில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவோம். எங்களது கோரிக்கைகளை அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் உத்தரப் பிரதேசம் முழுவதும் விநியோகிப்போம். இந்த தேர்தலில் மோர்ச்சா எந்தக் கட்சிக்கும் வாக்கு சேகரிக்காது. மோர்ச்சா தேர்தல் அரசியல்சார்பற்றதாக இருந்தது. இனியும் அப்படியே தொடரும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் – ராகேஷ் திகாயத்
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி, 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற ஒருங்கிணைந்த குழுவின் கீழ் டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் சங்கங்கள் போராட்டம் நடத்தின.
விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவித்தார். நாடாளுமன்றத்திலும் சட்டப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டன. விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று ஒன்றிய அரசு வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, டிசம்பரில் டெல்லி எல்லைகளில் இருந்த போராட்டக்களங்களை விவசாயிகள் காலி செய்தனர்.
அதற்கு பின், கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதாக விவசாயிகள் சங்கங்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்து, இஸ்லாம் என சமூகத்தைப் பிரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் – ராகேஷ் திகாயத்
இந்நிலையில், ஒன்றிய அரசுக்கு எதிராக, ‘துரோக தினத்தை’ நாடு தழுவிய அளவில் கடைபிடிக்க வேண்டும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் அழைப்பு விடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, ஜனவரி 31 அன்று, ‘துரோக தினம்’ அனுசரிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.