அமைதியாகப் போராடிய விவசாயிகளின் கோபத்தையும், ஆத்திரத்தையும்தூண்டி வன்முறையில் இறக்கியது பாஜகதான் என்று சிவசேனா கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, இன்று (ஜனவரி 28) சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடேனா சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளது. அதில், “போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்மீது கடுமையான குற்றச்சாட்டுகளைப் பாஜக கூறி வருகிறது. டெல்லி எல்லைக்குள் விவசாயிகள் நுழைவதென்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. விவசாயிகள் போராட்டம் தீவிரவாதிகளின் கரங்களுக்குச் சென்றுவிட்டது என்று பாஜகவின் உளவுத்துறை கூறுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை டிராக்டர் பேரணி வன்முறை: விவசாயிகள் தலைவர்கள் மீது வழக்கு
“டெல்லி செங்கோட்டைக்கு சென்று கொடியேற்றிய ஒருபிரிவினர் தீப் சித்து எனும் இளைஞர் தலைமையில் சென்றுள்ளனர். தீப் சித்து என்பவர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆதரவாளர். பஞ்சாப் மாநில பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சன்னி தியோலின் நெருங்கிய உறவினர்தான் தீப் சித்து என்பது குறிப்பிடத்தக்கது.” என்று சாம்னாவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 60 நாட்களாக விவசாயிகள் நடத்திவந்த போராட்டம் அமைதியாக நடந்தது. அதில் எந்தவிதமான பிளவும் ஏற்படவில்லை. விவசாயிகளின் பொறுமையும் எங்கும் சிதையவில்லை. இதனால்தான் வேறுவழிதெரியாமல் கையைக் கட்டிக்கொண்டு மத்திய அரசு அமர்ந்திருந்தது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் இயக்கத்தினர் நுழைந்துவிட்டார்கள் என்று மத்திய அரசு பழி சுமத்தியபோதிலும், விவசாயிகள் அமைதியாக இருந்தார்கள். அவர்களுக்குக் கோபத்தையும், ஆத்திரத்தையும்தூண்டி, வன்முறையில் இறக்கியது பாஜகதான். அவர்களின் போராட்டத்தையும் களங்கப்படுத்த முயன்றது. ஒருவேளை கடந்த 26 ஆம் தேதி மத்திய அரசின் ஆசைகள் நிறைவேறியிருந்தால் அது தேசத்துக்கு அவமரியாதைதான்” என்று சாம்னாவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
டெல்லி வன்முறைக்கு விவசாயிகளை மட்டும் பொறுப்பாக்குவது சரியல்ல என்று கூறும் சாம்னா தலையங்கம், “மத்திய அரசு தனக்கு வேண்டியதை செய்து கொண்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள், காவல்துறையினர், இளஞைர்கள்தான். இதற்காக இரத்தம் சிந்தினார்கள்.” என்று பதிவு செய்துள்ளது.
டிராக்டர் பேரணி – ” வன்முறைக்குக் காரணம் அரசின் சதித் திட்டம் ” : விவசாய சங்கங்கள்
“மீண்டும் பஞ்சாப் மாநிலம் கொந்தளிப்பானால் நாட்டுக்கு அது நல்லதல்ல. பஞ்சாப் விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது நாடுமுழுவதும் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று மத்திய அரசு கூறுவது தவறு. ஒட்டுமொத்த தேசமும் பஞ்சாப் பக்கம் நின்றது.” என்று தெரிவித்துள்ளது.
“செங்கோட்டையில் தேசியக் கொடி இறக்கப்பட்டது குறித்து பாஜக ஆதரவு ஊடகங்கள் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதாகக் குரல் கொடுக்கின்றன. ஆனால், பொய்கள் அனைத்தும் கிழிந்துவிட்டன. செங்கோட்டைக்கு இளைஞர்களைத் தலைமை ஏற்று அழைத்துச் சென்ற சித்து, பாஜகவுடன் நெருங்கிய தொடர்புடையவர். யாரும் தேசியக் கொடியை அவமதிக்கவில்லை.” என்று சாம்னா சுட்டிக்காட்டியுள்ளது.
டெல்லி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தைக் கையில் எடுத்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாம்னா வலியுறத்தப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.