கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தினர், உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனைக்காகப் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், “கேரளப் பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மூன்று முறை தாக்கப்பட்டுக் காவலில் இருந்தபோது உளவியல் சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டார்” எனும் குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 5-ம் தேதி, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்டார்.
சித்திக்கை உடனடியாக விடுவிக்கக் கோரி கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இது தொடர்பான வழக்கு நவம்பர் 20-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சித்திக்கின் வழக்கறிஞருக்கு அவரை சிறையில் சென்று சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
‘சித்திக் கப்பனை சந்திக்க வழக்கறிஞருக்கு அனுமதி’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு
இதையடுத்து, நவம்பர் 21-ம் தேதி, கேயுடபிள்யூஜேவின் வழக்கறிஞர் சித்திக் கப்பனை மதுரா சிறையில் சந்தித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே நடைபெற்ற அரை மணி நேர உரையாடல் குறித்துப் பிரமாணப் பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரமாணப் பத்திரத்தின்படி, “கடந்த அக்டோபர் 5-6 ஆகிய தேதிகளில், சித்திக்கைக் காவலர்கள் மூன்று முறை லத்தியால் தாக்கினர். மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, கன்னத்தில் மூன்று முறை அறைந்து, அவரை இழுத்துச் சென்றுள்ளனர். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அவரை உறங்கவிடாமல், சரியான மருந்துகளை வழங்காமல் இருந்துள்ளார். அவரை உளவியல் ரீதியாகக் கடுமையாகச் சித்ரவதை செய்துள்ளனர்”.
கடந்த மாதம், உத்தரப்பிரதேச அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “சித்திக் ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ (பிஎஃப்ஐ) எனும் இஸ்லாமிய அமைப்பின் அலுவலகச் செயலாளர்” என்று கூறப்பட்டுள்ளது. அவர் கேரளாவைச் சேர்ந்த ‘தேஜாஸ்’ எனும் பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி அடையாள அட்டையைக் காண்பித்தார். ஆனால், அந்த நிறுவனம் 2018-ம் ஆண்டிலேயே மூடப்பட்டுவிட்டது” என்றும் கூறப்பட்டுள்ளது. எவராயினும், இந்தக் குற்றசாட்டுகளை நிரூபிக்க அவர்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
இப்போது, கேயுடபிள்யூஜே தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமணப் பத்திரத்தில், உத்தரப்பிரதேச அரசு வைத்த இந்தக் குற்றசாட்டுகளை எதிர்த்துள்ளனர். “சித்திக் ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ (பிஎஃப்ஐ) எனும் இஸ்லாமிய அமைப்பின் அலுவலகச் செயலாளர் என்ற குற்றசாட்டு முற்றிலும் தவறானது” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.