மரணப்படுக்கையில் இருக்கும் தன் தாயை சந்திக்க கோரி பத்திரிகையாளர் சித்திக் காப்பான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஒரு மலையாள செய்தி இணையதளத்தில் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்த சித்திக் காப்பான், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு சம்பவத்தைப் பற்றி தகவல் சேகரிப்பதற்காக, உத்தர பிரதேச மாநிலத்துக்குச் சென்றார். அவரை ஹத்ராசுக்குள் நுழைய விடாமல் வழிமறித்த காவல்துறையினர், ”பொது அமைதிக்கு குந்தகம்” விளைவிப்பதாகக் கூறி அவரைக் கைது செய்தனர்.
அவருடன் செய்தி சேகரிக்க சென்ற சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது, ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சித்திக்கினுடைய லேப்டாப், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பத்திரிகையாளர் மீது தேச விரோத வழக்கு – உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை
உத்தர பிரதேசத்தில் ஒரு பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பின்னணியில் சித்திக் வந்துள்ளதாக, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த மதுரா காவல்துறை, அவர்மீது தேசதுரோக சட்டத்தின் கீழும், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் (UAPA) வழக்குகளைப் பதிவு செய்தது.
ஹத்ராஸ் வழக்கு: `இது ஆதித்யநாத்தின் தோல்வியை மூடி மறைக்கும் செயல்’ – மின்னஞ்சல் பிரச்சாரம்
கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சித்திக் காப்பானை விடுவிக்கக் கோரி சட்ட போராட்டத்தை நடத்தி வந்தாலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாமல் இருந்தது. அவரின் மனைவி ராய்ஹானாத் மற்றும் அவரது வயதான தாயாரைக் கூட சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு அவர் சிறைபடுத்தப்பட்டார்.
பத்திரிகையாளரைச் சந்திக்க வழக்கறிஞருக்கு மறுப்பு: ஹத்ராஸ் உரிமை மீறல்
இதனிடையே கடும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு, மரணப் படுக்கையில் இருக்கும் சித்திக் காப்பானின் 90 வயது தாயார், தன் மகனைப் பார்ப்பதே அவரின் கடைசி ஆசை எனக் கூறியிருந்தார்.
கேரள பத்திரிகையாளர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி – மதுரா நீதிமன்றம்
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி, சித்திக் காப்பானுக்கு இடைக்கால ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளாவின் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் மனு தாக்கல் செய்தார்.
யார் இவர்கள்? எதற்கு சிறையில் உள்ளார்கள்? என்ன குற்றம் செய்தார்கள்?
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஆஜரான கபில் சிபல், சித்திக் காப்பான் சிறையில் சித்திரவதை செய்யப்படுகிறார் எனவும் அவர்மீது சுமதப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலி எனவும் கூறியுள்ளார்.
சித்திக்கிற்கு ஒரு நீதி, அர்னாப் கோசாமிக்கு ஒரு நீதியா? – கபில் சிபல் கேள்வி
இதை எதிர்த்து வாதாடிய உத்தர பிரதேச அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, நீதிமன்ற நடைமுறைகளில் இடையூறு ஏற்படுத்த சித்திக் காப்பான் தாயாரின் உடல்நிலை பயன்படுத்திக் கொள்ளப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயிரிழக்கும் தருவாயில் சித்திக் காப்பானின் தாயார் இருப்பதால் மனிதாபிமான அடிப்படையில் ஐந்து நாட்களுக்கு நிபந்தனை ஜாமீன் அளிப்பதாக உத்தரவிட்டுள்ளனர் என பார் அண்ட் பெஞ்ச் செய்தி வெளியிட்டுள்ளது.
மரணப்படுக்கையில் இருக்கும் தாய் – மகனின் ஜாமீன் மனுவை விசாரிக்க காலம் தாழ்த்தும் உச்சநீதிமன்றம்
சித்திக் காப்பான் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், மருத்துவர்களை மட்டுமே சந்திக்க அனுமதியிருப்பதாகவும், பொதுமக்களைச் சந்திக்கவோ, ஊடகங்களிடம் நேர்காணல் கொடுக்கவோ கூடாது என நீதிபதிகள் நிபந்தனைகள் விதித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.