முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய, தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் நாள் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
இத்தீர்மானத்தின்மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் வைக்கப்பட்டிருக்கிறேன் என்றும் ஆகவே தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவுக்கு, தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் உள்துறை இணைச்செயலாளர் பத்மநாபன் உயர் நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அப்பதில் மனுவில், “முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க தகுதியானவர் எனக்கூறி அந்த தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். அதை ஒன்றிய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஆகவே, நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று அப்பதில் மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இன்று(நவம்பர் 29), இவ்வழக்கானது பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வுக்கு முன்பு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.